சென்னை, அக்.30- வீட்டிற்கொரு சேமிப்புக் கணக்கை அனைவரும் அஞ்சலகங்களில் துவங்க வேண்டுமென்று அமைச் சர் தங்கம் தென்னரசு உலக சிக்கன நாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி சிக்கனத்தை கடைப்பி டிப்பதை உலகச் சிக்கன நாள் அனைத்து மக்களா லும் கொண்டாடப்படுவது கண்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன். சேமிப்பும் சிக்கனமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றது.
தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து, வியர்வை சிந்தி நாம் ஈட்டும் வருவாயில் ஒரு சிறு பங்கை சேமித்தால், நாமும், நமது குடும்பமும் பயனடை வதோடு மட்டுமல்லாமல், நம் நாடும் பயனடையும். அதற்கு பாதுகாப்பான அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்களில் நாம் அனைவரும் முதலீடு செய்து, நம் சந்ததியினருக்கும், பிறருக்கும் முன் உதாரணமாகத் திகழ வேண்டும்.
அய்யன் திருவள்ளுவர் அவர்கள் “பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்” குறிப்பிடுகிறார் என்று அதாவது ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப் புடையவராக மாற்றும் பொருள் அல்லாமல் சிறப் புடைய பொருள் வேறு இல்லை என்பது இதன் பொருளாகும். தேனீக்கள் பூவிலிருந்து தேனை எடுத்து சேமிக்கின்றன. எறும்புகள் ஊர்ந்து சென்று மழைக் காலத்திற்காக தன்
உணவைசேமிக்கின்றன. அது போல மனிதர்களும் சேமித்து சிக்கனமாக இருந்து வாழ்வில் செழிப்படைய வேண்டும். வாழ்க்கை பயணத்தை சிறப்பாகவும், வளமாகவும், பாதுகாப்பாகவும், எதிர்பாராதவிதமாக ஏற்படும் நிதி நெருக்கடிகளை சமாளிக்கவும் இந்த சிக்கனமும் சேமிப்பும் உதவிடும்.
வருமானத்திற்கு உட்பட்டு செலவு செய்து, சிக்கனமாக வாழ்ந்து, நமக்கும், நம் நாட்டுக்கும் பெருமை சேர்ப்பதையே உலகச் சிக்கன நாள் வலியுறுத்துகிறது. பொருள் ஈட்டுவது மட்டும் மனிதனின் முக்கியமான கடமையல்ல. ஈட்டிய பொருளை திறம்பட பாதுகாப்பதுதான் மனிதனின் வாழ்க்கை நெறியாகும். வறுமை, பிணி மற்றும் சமூகக் கேடுகளை அழிக்கும் மாமருந்து சிறுசேமிப்பு ஆகும்.எனவே, “சிறுகச் சேமித்து, பெருக வாழ்” என்ற பொன் மொழிக்கிணங்க, மக்கள் அனைவரும் சேமித்து பயனடைய, வீட்டிற்கொரு சேமிப்புக் கணக்கை அனைத்து தமிழக மக்களும் அஞ்சலகங்களில் துவங்க வேண்டுமென்று இந்த உலக சிக்கன நாளில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில்
ரூ.98 கோடி செலவில்
6 புதிய திட்டப் பணிகள்
சென்னை, அக். 30- சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில், ரூ.98.21 கோடி மதிப்பில் 6 புதிய திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று (29.10.2024) அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில், ரூ.98.21 கோடி மதிப்பில் பெரும்பாக்கம், முடிச்சூர், அயனம்பாக்கம், வேளச்சேரி, சீக்கனான் ஏரிக்கரைகளை மேம்படுத்தும் பணிகள் மற்றும் வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ் பகுதியை அழகுபடுத்தும் பணி என மொத்தம் 6 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதன் விவரம்:
சென்னை பெரும்பாக்கம் ஏரிக்கரையை மேம்படுத்தும் விதமாக, சுமார் 4.61 ஏக்கர் பரப்பளவில் ரூ.23.65 கோடி மதிப்பீட்டில் அழகிய இயற்கை எழிலுடன் கூடிய சுற்றுச்சூழல் குளம், பறவை கண்காணிப்பு கோபுரம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன. செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அருகே உள்ள முடிச்சூர் ஏரிக்கரையை மேம்படுத்தும் விதமாக சுமார் 2.40 ஏக்கர் பரப்பளவில் ரூ.20.61 கோடி மதிப்பீட்டில் அழகிய பூங்கா, பூங்காவில் செயல்திறன் பகுதி, பருவகாலத் தோட்டம், மழைத் தோட்டம் என பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன.
சென்னை, அயனம்பாக்கம் ஏரிக்கரையை மேம்படுத்தும் விதமாக சுமார் 4.26 ஏக்கர் பரப்பளவில் ரூ.20.45 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன. சென்னை, வேளச்சேரி ஏரிக்கரையை மேம்படுத்தும் விதமாக சுமார் 1.91 ஏக்கர் பரப்பளவில் ரூ.19.40 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளன.
இதுதவிர, செங்கல்பட்டு மாவட்டம், சீக்கனான் ஏரிக்கரையில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளன. சென்னை வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ் பகுதியை அழகுபடுத்தும் விதமாக 2.14 ஏக்கர் பரப்பளவில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் அழகிய பூங்கா இடம்பெற உள்ளது. மொத்தம் ரூ. 98.21 கோடி மதிப்பீட்டில் 6 திட்டப் பணிகள் நடைபெற உள்ளன.
இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாக்காளர் பட்டியல்
திருத்த முகாம் தேதி மாற்றம்!
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம் தேதியை மாற்றி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நவ.9,10இல் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தீபாவளிக்கு மறுநாள் அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய நவ.9ஆம் தேதி வேலை நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதன் காரணமாக, நவ.16,17இல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற சேவைகள் வழங்கப்படவுள்ளன.