காவி – கருப்பு – கதர் – வெள்ளை – நீலம் என்று பல வண்ணங்கள் இருக்கலாம்!
வண்ணங்கள்தான் மாறுபட்டிருக்கலாமே தவிர, எண்ணத்தால் மாறுபட்டவர்கள் அல்ல நாங்கள்!
தவத்திரு அடிகளார் அவர்கள் வாழ்ந்த காலத்தில், இந்த நாட்டில் வேறு எவரும் செய்யாத ‘‘புரட்சியை’’ அவர் செய்திருக்கிறார்!
காரைக்குடி, அக்.29 நாங்கள் எல்லோரும் ஒரே கருத்து டையவர்கள். எங்களுக்கு வண்ணங்கள் முக்கியமல்ல; எண்ணங்கள்தான் ஒன்றுபட்டவை. வண்ணத்தால் நாங்கள் மாறுபட்டிருக்கலாம். காவி – கருப்பு – கதர் – வெள்ளை – நீலம் என்று பல வண்ணங்கள் இருக்கலாம். வண்ணங்கள்தான் மாறுபட்டிருக்கலாமே தவிர, எண்ணத்தால் மாறுபட்டவர்கள் அல்ல நாங்கள். தவத்திரு அடிகளார் அவர்கள் வாழ்ந்த காலத்தில், இந்த நாட்டில் வேறு எவரும் செய்யாத ‘‘புரட்சியை’’ அவர் செய்திருக்கிறார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழா
கடந்த 31.8.2024 அன்று காரைக்குடியில் நடைபெற்ற குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவில்,- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
ஒரு சமுதாயத்திற்காக சமயத்தைப் பயன்படுத்தக்கூடிய ஒரு புரட்சித் துறவி!
மிகுந்த எழுச்சியோடும், நெகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் நடைபெறக்கூடிய இன்றைக்கு ஒப்பற்ற சமயத் தலைவர் என்பதைத் தாண்டி, ஒரு சமுதாயத்திற்காக சமயத்தைப் பயன்படுத்தக்கூடிய ஒரு புரட்சித் துறவி என்று வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய நம்முடைய மானமிகு மகா சந்நிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் சமூகத்திற்கு நூற்றாண்டு விழா என்ற பெருமை மிகுந்த இந்த நூற்றாண்டு விழா நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, சிறப்பான ஓர் உரையை, அருமையான ஓர் உரையை, நீண்ட உரையை நம்முடைய கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்கள் நிகழ்த்தி வரலாற்று முக்கி யத்துவம் வாய்ந்த பல்வேறு செய்திகளை எடுத்துச் சொன்னார்கள்; அப்படிப்பட்ட மாண்புமிகு அமைச்சர் பெரியகருப்பன் அவர்களே,
என்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்!
நம்முடைய தவத்திரு குன்றக்குடி அடிகளார் மகாசந்நிதானம் அவர்கள் ஒரு பெரிய தொண்டறச் செம்மலாக, சமுதாயத்தில் ஒரு புதிய பாதையை, புதிய எழுச்சியை உருவாக்கினார் என்று சொன்னால், அந்த எழுச்சி, அவருடைய உடல் மறைந்த காரணத்தினால், அது மறைந்துவிடாது; அவர் மறையவில்லை, மாறாக என்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அது ஒரு தொடர் சரித்திரம் என்பதை நிலைநாட்டுவதற்காக, எங்களுடைய ஆதங்கத்தையெல்லாம் போக்கி, அந்த இடம் காலியிடம் அல்ல; வெற்றிடம் அல்ல – அது ஒரு சிறந்த கற்றிடம் என்பதைக் காட்டுகின்ற எங்கள் ஒப்பற்ற தவத்திரு தமிழ்த்திரு தொண்டர் நாதனாக இருக்கக்கூடிய அருமைப் பெரியவர் அடிகளார் சந்நிதானம் அவர்களே, பொன்னம்பல அடிகளார் என்றுகூட நான் உச்சரிக்க விரும்பவில்லை. எங்களுடைய அடிகளார் – அது ஒரு தொடர்ச்சி அவ்வளவுதானே தவிர, அதிலே ஒரு இடைவெளி கிடையாது. அப்படிப்பட்ட அடிகளார் அவர்களே,
எழுத்தில் எதையும் புத்தகமாக ஆக்கினால்தான், அவை வரலாற்றில் ஆவணங்களாகப் பதிவாகும்!
அடிகளார் அவர்களுடைய நூற்றாண்டு விழா தொடங்கி நடைபெறக்கூடிய இந்நேரத்தில், இது வெறும் உரையோடு நின்றுவிடக் கூடாது. எழுத்தில் எதையும் புத்தகமாக, நூலாக ஆக்கினால்தான், அவை வரலாற்றில் ஆவணங்களாகப் பதிவாகும் என்ற முறைக்கேற்ப, தந்தை பெரியார் அவர்கள் பலவற்றை நூலாக்கி ஆவணப்படுத்துங்கள் என்று சொல்வார்.
அதன்படி அடிகளார் அவர்கள் ஆவணப்படுத்து வார்கள்; உரை முதற்கொண்டு அவர்கள் தயாரித்துக் கொண்டு வருவார்கள்; அச்சிட்டுக் கொண்டு வந்து அதனை விநியோகம் செய்வார்கள்.
‘‘தவத்திரு குன்றக்குடி அடிகளார் அறிவுப்பெட்டகம்!’’
அதுபோன்று இந்த நூற்றாண்டு விழாவினையொட்டி நூலாக – ஒரு பெட்டகத்தைத் தயாரிக்கவேண்டும். அந்தப் புதையலை எடுக்கவேண்டும். அந்தப் புதையல் அடிகளார் அவர்களிடத்தில் ஏராளம் இருக்கிறது. நாங்கள் ஒரு சிறு பகுதியைத்தான் எடுத்திருக்கின்றோம். அதுதான் ‘‘தவத்திரு குன்றக்குடி அடிகளார் அறி வுப்பெட்டகம்” என்று அவருடைய பேச்சு, எழுத்து, கருத்துகள் இவற்றையெல்லாம் தொகுத்து வெளியிட்டு இருக்கின்றோம், மிகக் குறுகிய காலத்தில்.
எந்நாளும் பகுத்தறிவுவாதி – அவர் எங்கே இருந்தாலும் ஒரே கருத்துள்ளவர்தான்!
அப்படிப்பட்ட இந்தப் புத்தகத்தை வெளியிட்டு, ஓர் அருமையான உரையாற்றிய, நம்முடைய பாராட்டுதலுக்கும், பெருமிதத்திற்கும் உரிய மேனாள் அமைச்சர் என்று சொல்வதைவிட, எந்நாளும் பகுத்தறிவுவாதி – அவர் எங்கே இருந்தாலும் ஒரே கருத்துள்ளவர்தான். எங்களுக்குள் வேறுபாடு என்பதே கிடையாது – ஒன்றுபட்டு நிற்கிறோம் நாங்கள் என்று சொல்லக்கூடிய உணர்வாளர் அவர். அப்படிப்பட்ட மாண்புமிகு மானமிகு தென்னவன் அவர்களே,
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பான வகையில், பெருமை சேர்த்து அவர்கள் வெளியிட்ட இந்தப் புத்தகத்தை பெற்றுக் கொண்டிருக்கக்கூடிய சட்டப்பேரவை உறுப்பினர் அன்பிற்குரிய அய்யா மாங்குடி அவர்களே,
மாநகராட்சியின் துணை மேயர் மாண்புமிகு குணசேகரன் அவர்களே,
என்றைக்கும் தாய்க் கழகத்தில் இருக்கக்கூடியவராக நாங்கள் கருதக்கூடிய அளவிற்குக் கொள்கை வீரர்!
தென்னவன் எப்படி இருக்கிறார்களோ, அது போலவே, கொள்கையிலே, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தாலும், என்றைக்கும் தாய்க் கழகத்தில் இருப்பதாகக் கருதிக் கொண்டவர்; என்றைக்கும் தாய்க் கழகத்தில் இருக்கக்கூடியவராக நாங்கள் கருதக்கூடிய அளவிற்குக் கொள்கை வீரரான எங்கள் அருமை திராவிட முன்னேற்றக் கழக மாவட்டத் துணை செயலாளர் அருமைச் சகோதரர் வேங்கை மாறன் அவர்களே,
புதுக்கோட்டை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பாளர் அன்புச்சகோதரர் சந்திரசேகரன் அவர்களே,
சிவகங்கை மாவட்டக் கழகக் காப்பாளர் வழக்குரைஞர் ச.இன்பலாதன் அவர்களே,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் இளையகவுதமன் அவர்களே,
மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர், பகுத்தறிவாளர் சுப.மதியரசன் அவர்களே, சி.பி.அய். பொறுப்பாளர் அய்யா தோழர் பழ.ராமச்சந்திரன் அவர்களே,
இங்கே வருகை தந்து சிறப்பிக்கின்ற மேனாள் துணைவேந்தர் அய்யா சுப்பையா அவர்களே,
தலைமைக் கழக அமைப்பாளர் மதுரை வே.செல்வம் அவர்களே, தாம்பரம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருவாரூர், மதுரை மாவட்டங்களின் கழகப் பொறுப்பாளர்களே, அருமை நண்பர் ஜெயக்குமார் அவர்களே,
இங்கே வந்திருக்கின்ற தமிழ்ச் சான்றோர்களே, ஆன்றோர்களே, அருமைத் தோழியர்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குன்றக்குடியில் நடத்துவதைவிட,காரைக்குடியில் நடத்துவதே சிறப்பு!
இந்த நிகழ்ச்சி ஓர் அற்புதமான கொள்கைத் திருவிழா என்பதைத் தாண்டி, நூற்றாண்டு விழா என்பதைத் தாண்டி, திராவிடர் கழகம் இவ்விழாவினை காரைக்குடியில் நடத்தவேண்டும் என்று முதலில் நான் கருதியவுடன், நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அவர்கள், ‘‘ஏன் குன்றக்குடியிலேயே இவ்விழாவினை சிறப்பாக நடத்தலாமே?” என்று சொன்னார்.
ஆனால், குன்றக்குடியில் நடத்துவதைவிட, காரைக்குடியில் நடத்துவதே சிறப்பாக இருக்கும் என்பது நம்முடைய தவத்திரு அடிகளார் அவர்களுடைய கருத்தா கவும் இருந்தது; நாங்களும் அதனைச் சொன்னோம். அதனை மறுக்காமல் அப்படியே ஏற்று, சிறப்பாக செய்யுங்கள்; அதற்கு ஒத்துழைப்பு நல்குகிறோம் என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சொன்னார்.
வண்ணங்கள்தான் மாறுபட்டிருக்கலாமே தவிர, எண்ணத்தால் மாறுபட்டவர்கள் அல்ல!
ஏனென்றால், எல்லோரும் ஒரே கருத்து டையவர்கள். எங்களுக்கு வண்ணங்கள் முக்கியமல்ல; எண்ணங்கள்தான் ஒன்றுபட்டவை. வண்ணத்தால் நாங்கள் மாறுபட்டிருக்கலாம். காவி – கருப்பு – கதர் – வெள்ளை – நீலம் என்று பல வண்ணங்கள் இருக்கலாம். வண்ணங்கள்தான் மாறுபட்டிருக்கலாமே தவிர, எண்ணத்தால் மாறுபட்டவர்கள் அல்ல நாங்கள்.
அமைச்சர் அவர்கள் உரையாற்றும்பொழுதுகூட, காவி, கருப்பு என்று சொன்னார். ஆனால், நாங்கள் எல்லாம் சாதாரண கருப்பு; ஆனால், அமைச்சர் அவர்கள் யார் தெரியுமா? பெரியகருப்பன்.
அவருடைய பெயர் நல்ல தமிழில் அமைந்தி ருக்கிறது; அதுதான் நம்முடைய இனத்தின் பெயர். அதற்காக அவருடைய பெற்றோரைப் பாராட்ட வேண்டும். ஏனென்றால், கிருஷ்ணசாமி என்றால் பெருமையாக நினைப்பார்கள். கிருஷ்ணசாமி என்றாலும், பெரியகருப்பன் என்றுதான் அர்த்தம். அது வடமொழியில்.
அதனால்தான் கலைஞர் அவர்கள், இவரிடம் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகின்ற பொறுப்பை ஏன் கொடுத்தார் என்றால், இவர் பெரியகருப்பன் என்பதினால்தான். அதனால்தான் அதனை அவர் சிறப்பாகச் செய்தார்.
கருப்பர்களுடைய உரிமையை நிலைநாட்டு வதற்காகத்தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் என்ற சட்டம்.
இன்றைக்கு நன்றி தெரிவிப்பதற்காகத்தான் நாங்கள் இங்கே வந்திருக்கின்றோம். இவ்விழா அடிகளாருடைய நூற்றாண்டு விழா மட்டுமல்ல – நன்றித் திருவிழா!
‘‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு”
வேறு எவரும் செய்யாத புரட்சியை
தவத்திரு அடிகளார் செய்திருக்கிறார்!
தவத்திரு அடிகளார் அவர்கள் வாழ்ந்த காலத்தில், இந்த நாட்டில் வேறு எவரும் செய்யாத புரட்சியை அவர் செய்திருக்கிறார்.
புரட்சி என்று சொன்னால், பல பேர் நினைக்க லாம், ஆயுதத்தைத் தூக்குவது, ரத்தத்தை சிந்துவது என்று. அது ஒரு வகையானதாகும்.
ஆனால், அறிவுப் புரட்சி, அமைதிப் புரட்சி, கருத்துப் புரட்சி, சிந்தனைப் புரட்சி இருக்கிறதே, அதனை செய்த இயக்கம்தான், சுயமரியாதை இயக்கம். அதற்குக் காரண கர்த்தாதான் தந்தை பெரியார் அவர்கள்.
அந்தப் புரட்சியில், எந்தவிதமான வன்முறை யும் அங்கே இருக்காது; நன்முறைதான் அங்கே இருக்கும்.
அறிவுப் புரட்சியை,
அமைதிப் புரட்சியாக ஆக்கியவர்!
ஆகவேதான், அந்த அறிவுப் புரட்சியை, அமைதிப் புரட்சியாக ஆக்கியவர் நம்முடைய நூற்றாண்டு விழா நாயகர் அடிகளார் அவர்கள்.
காவி – கருப்பென்று இங்கே சொன்னார்கள். இப்பொழுது கருப்பை பிரித்தே சொல்ல முடியாது.
கருப்புடை இல்லாத கட்சிக்காரர்களே இன்றைக்கு யாரும் கிடையாது. எல்லா தலைவர்களும், எல்லாக் கட்சியில் இருப்பவர்களும் கருப்புச் சட்டை தைத்து வைத்திருக்கிறார்கள். எப்பொழுதெல்லாம் போராட்டம் வருகிறதோ, அப்பொழுதெல்லாம் கருப்புடை அணிந்து வருகிறார்கள். காவிகள் மட்டும்தான் கருப்புச் சட்டை அணியாமல் இருக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய காங்கிரஸ் தலைவர் உள்பட, அகில இந்தியக் கட்சித் தலைவர்கள் உள்பட கருப்புச் சட்டை அணிகிறார்கள்.
பகுத்தறிவு உலகத்தின்
அடிப்படை உணர்வு அடிகளாருக்கும் உரித்தான ஒன்று!
இப்படிப்பட்ட சூழலில், இன்றைக்கு ஏன் அடிகளார் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோம்? அடிகளார் அவர்கள் ஒரு சமயம், மதம் என்று சொன்னால், அது ஜாதியைப் பாதுகாப்பதற்காகத்தான், பேதத்தை வளர்ப்பதற்காகத்தான், மூடநம்பிக்கைகளை வளர்ப்பதற்காகத்தான்; சடங்கு, சம்பிரதாயம் என்ற பெயரால், மனித குலத்தைப் பிரித்து, பிளந்து ஒற்றுமையில்லாமல், அசவுகரியத்தை ஏற்படுத்துவதற்காகத்தான் என்று இருந்ததை மாற்றிக் காட்டியவர். மனித குலம் ஒன்று; அனைத்து ஜாதியினருக்கும், அனைத்து மக்களுக்கும் அனைத்தும் என்று காட்டிய பெருமை – எப்படி சுயமரியாதை இயக்கத்திற்குத் தந்தை பெரியாரின் கொள்கையாக அமைந்ததோ, அதுபோல, பகுத்தறிவு உலகத்தின் அந்த அடிப்படை உணர்வு அடிகளாருக்கும் உரித்தான ஒன்று.
ஆனால், அதை சமயத் துறையில் ஒருவர் அதனை செய்தார் என்று சொன்னால், அடிகளார் போன்று, அவ்வளவு துணிச்சலோடு செய்தவர், வேறு யாரையும் பார்க்க முடியாது.
இங்கே வெளியிடப்பட்ட புத்தகத்தில் அடிகளார் பற்றிய இதுபோன்ற செய்திகள் நிறைய உள்ளன.
அடிகளார் அவர்கள் யாரும் கொடுக்க முடியாத விலையைக் கொடுத்திருக்கிறார். நாங்கள் எல்லாம் பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள். சிறைச்சாலைக்குப் போவது, போராட்டக் களத்தில் நிற்பது என்பதெல்லாம் சாதாரணம்.
ஆனால், முதல் முறையாக ஒரு சந்நிதானம், மொழிக்காகப் போராடியதால் கைது செய்யப்பட்டார். மொழி உரிமையைக் காப்பாற்றினார் என்றால், அவரைப் போன்று வேறு யாரை நம்மால் தேடிக் கண்டுபிடிக்க முடியும்?
வர்ணிப்பதற்குவார்த்தைகளே இல்லை!
இன்றைக்கு வாழ்நாளிலே, ஒரு பெரிய திருநாள் என்று நாங்கள் எல்லோரும் கருதக்கூடிய அளவிற்கு, ஒரு திருமணத்திற்குச் சென்றோம். அடிகளார் அங்கேதான் உறங்குகிறார்; அவருடைய நினைவிடத்தில், மரியாதை செலுத்தவேண்டும் என்று சென்றோம். அடிகளார் அவர்களோடு முடிந்துவிடவில்லை; அது ஒரு தொடர் சகாப்தம். அந்த சகாப்தத்தைத் தொடரக்கூடிய நாயகர் இருக்கிறார்; அவரையும் சந்தித்து மரியாதை செலுத்தவேண்டும் என்பதற்காக நாங்கள் அங்கே சென்றபொழுது, எங்களுக்குக் கிடைத்த வரவேற்பு இருக்கிறதே, அந்த அன்பு இருக்கிறதே, அந்தப் பாசம் இருக்கிறதே, அதனை வர்ணிப்பதற்கு வார்த்தைகளே இல்லை.
(தொடரும்)