சென்னை, அக்.29 அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற 1,279 பணியா ளர்களுக்கான பணப்பலன்களை வழங்க ரூ.372 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2022-ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரை பணிபுரிந்து ஓய்வுபெற்ற 3,414 பணியாளர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை, ஓய்வுதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்களுக்காக ரூ.1031.31 கோடியை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023 மார்ச் மாதம் உத்தரவிட்டார்.
அதனடிப்படையில், போக்குவரத்து கழகங்களில் 2022 ஏப்ரல் முதல் 2022 நவம்பர் வரை பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்கள் மொத்தம் 3,414 பேருக்கு பணப்பலன்களுக்காக ரூ.1031.31 கோடி வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நிதி நெருக்கடியிலும் கடந்த 2022 டிசம்பர் முதல் 2023 மார்ச் மாதம் வரை பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் களுக்கான பணப் பலன்களை வழங்க நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில் போக்குவரத்துக் கழகங்களில் டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை பணியிலிருந்து ஓய்வுபெற்ற பணியாளர்கள் மொத்தம் 1,279 பேருக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை, ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்கப்படவுள்ளன. இதற்காக ரூ.372.06 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில்
நவீன மீன் அங்காடி
சென்னை, அக்.29 சென்னை மாநகராட்சி சார்பில் சிந்தாதிரிப்பேட்டையில் ரூ.2 கோடியே 19 லட்சத்தில் 102 கடைகளுடன் அமைக்கப்பட்டு வரும் நவீன மீன் அங்காடி அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கூறியுள்ளார்.
சிந்தாதிரிப்பேட்டையில் பல ஆண்டுகளாக தனியாருக்குச் சொந்தமான இடத்தில் மீன் அங்காடி செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான மீன் கடைகள் உள்ளன. இந்த மீன் அங்காடியால் சுற்றுப்புறங்களில் துர்நாற்றம் வீசி வருகிறது. அங்கு கழிவு மேலாண்மை முறையாக செய்யப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், புதிய அங்காடி கட்டித்தரப்படும் என மாநகராட்சி உறுதியளித்திருந்தது.
அதன்படி, மாநகராட்சி சார்பில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 19 லட்சத்தில் 102 கடைகள் கொண்ட நவீன மீன் அங்காடி சிந்தாதிரிப்பேட்டையில் கூவம் ஆற்றின் கரையோரம் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் 1,247 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் 1,022 சதுர மீட்டர் பரப்பளவில் மீன் அங்காடி அமைக்கப்படுகிறது. இந்த அங்காடி புயலால் சேதமடையாத வகையில் சென்சைல் கட்டுமானத்துடன் கூடிய மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. மீன் கழிவுகளை வெளியேற்ற சுத்திகரிப்பு நிலையம், குப்பைகளை எளிதாக அகற்றுவதற்கான அமைப்புகள், வழிகாட்டு பலகைகள், மீன் கழிவுநீரை பயோ டைஜிஸ்ட் கட்டமைப்புக்கு கொண்டு செல்ல பிரத்யேக வடிகால், வாகன நிறுத்தம் போன்றவை அமைக்கப் பட்டு வருகின்றன.
இப்பணி கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய நிலையில், 6 மாதங்களில் முடிக்க வேண்டிய பணி, ஓராண்டுக்கு மேலாகியும் முடிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.இந்த நிலையில் இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கூறும்போது, “சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்துக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும்.” என்றார்.