சென்னை, அக். 29- வெப்ப அலைபேரிட ராக அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பசலனத்தால் உயிரிழந்தால் ரூ.4 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
வெள்ளம், புயல், மழை, வறட்சி ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு பேரிடர் நிதியின் கீழ் நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பருவ நிலை மாற்றம் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தின் முதல் இரண்டு வாரத்தில் பெரும்பான்மையான இடங்களில் கடுமையான வெப்பமும், வெப்ப அலைவீச்சும் நிலவியது. வெப்ப அலையின் காரணமாக ஏற்படும் உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் தனிப்பிரிவுகள் அமைக்கப்பட்டன. ஆனால் அதற்கு பேரிடர் நிவாரண நிதி விதிமுறைகளின்படி நிதி ஒதுக்க முடியவில்லை. எனவே கடந்த சட்டமன்ற கூட்டத்தில் வெப்ப அலையும் பேரிடராக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இப்போது அதற்கான முறையான அறிவிப்புக்கான, அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.
எனவே இனி வெப்ப அலையால் ஏற்படும் மரணங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். அதே போல் வெப்ப அலைகளில் இருந்து பொதுமக்களை காக்கும் வண்ணம் குடிநீர் பந்தல் அமைப்பது மற்றும் ஓ.ஆர். எஸ். வழங்குவது போன்ற பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.
இந்த தகவல் தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளர் அமுதா வெளி யிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.