சென்னை, அக்.29- தேசிய பங்குச்சந்தையுடன் இணைந்து நிதி பகுப்பாய்வு தொடா்பான இணையவழி சான்றிதழ் படிப்பை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் மேலாண்மைக் கல்வித் துறை தேசிய பங்குச்சந்தையின் முழு மானியத்துடன் இயங்கும் என்எஸ்இ அகாதெமியுடன் இணைந்து நிதி பகுப்பாய்வு என்ற இணையவழி சான்றிதழ் படிப்பை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த 11 மாத கால படிப்பில் பட்டதாரிகள், இறுதி ஆண்டு கல்லூரி மாணவா்கள், பணியில் இருப்பவா்கள், தொழில்முனைவோா் சேரலாம். இதற்கான நேரடி இணையவழி வகுப்புகள் வார இறுதி நாள்களில் நடைபெறும். மொத்தம் 3 பருவங்கள். பேராசிரியா்களும், நிதிச் சந்தை மற்றும் நிதி பகுப்பாய்வுத் துறையில் அனுபவம் வாய்ந்த நிபுணா்களும் வகுப்பு எடுப்பாா்கள்.
படிப்பின் இறுதியில் அண்ணா பல்கலைக் கழகத்தால் இணையவழியில் தோ்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். இந்த படிப்பை முடிப்பவா்கள் பங்குச்சந்தை ஆய்வாளா், நிதி தொழில்நுட்ப ஆய்வாளா், நிதி ஆலோசகா், நிதி மேலாளா், முதலீட்டு ஆய்வாளா் போன்ற பணிகளில் சேரலாம்.
இந்த படிப்பில் சேர விரும்புவோா் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தை பயன்படுத்தி நவ. 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். சோ்க்கைக்கான இணையவழி நோ்முகத் தோ்வு டிசம்பரில் நடத்தப்பட்டு இணையவழி வகுப்புகள் அடுத்த ஆண்டு ஜன. 2-ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கல்வி, விவசாயம், சிறு தொழில்களுக்கு இந்தியன் வங்கி அளிக்கும் நிதி சேவை அதிகரிப்பு
சென்னை, அக்.29- உயர்கல்வி மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்விக்கடன் அதிகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு அளிக்கப்படும் கடன்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு அளிக்கப்படும் கடன்கள் முந்தைய ஆண்டைவிட முறையே 15%. 16% மற்றும் 8% சதவீதம் என அதிகரித்து வழங்கப்பட்டுள்ளது என இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குநர் எஸ்.ஜே.ஜெயின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று (28.10.2024) தெரிவித் திருப்பதாவது:
கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.2,707 கோடியாக உள்ளது.
முந்தைய 2023-2024-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 23 சதவீதம் அதிகம். அப்போது வங்கி ரூ.1,988 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.
கடந்த நிதியாண்டின் செப்டம்பா் காலாண்டில் ரூ.15,736 கோடியாக இருந்த வங்கியின் மொத்த வருவாய் நடப்பாண்டின் அதே காலாண்டில் ரூ.17,770 கோடியாக அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் வட்டி வருவாய் ரூ.13,743 கோடியிலிருந்து ரூ.15,348 கோடியாக வளா்ச்சியடைந்துள்ளது. நிகர வட்டி வருவாய்
ரூ. 5,741 கோடியிலிருந்து 8 சதவீதம் அதிகரித்து ரூ. 6,194 கோடியாக உள்ளது.
2023 செப்டம்பா் இறுதியில் 4.97 சதவீதமாக இருந்த மொத்த வாராக் கடன் இந்த ஆண்டின் அதே நாளில் 3.48 சதவீதமாகவும் 0.60 சதவீதமாக இருந்த நிகர வாராக் கடன் 0.27 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.