பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு பயிற்சிப் பட்டறை
சென்னை, அக். 29- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்திய ஆசிரியர்களுக்கான அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு பயிற்சிப் பட்டறை 29.9.2024 காலை 9.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது.
தொடக்க நிகழ்வுக்கு பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமை ஏற்றார். பொதுச் செயலாளர் வி.மோகன் வரவேற்புரையாற்றினார்.
தலைமை ஏற்ற மாநில தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் எந்த சூழ்நிலையில் இப்பயிற்சி நடத்தப்படுகிறது என்பதை எடுத்துரைத்தார். பயிற்சியாளர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் பற்றியும், கருத்தாளர்களின் சிறப்புகளையும் எடுத்துரைத்து இதனை பயன்படுத்தி மாணவர்களிடமும் மற்றவர்களிடமும் அறிவியல் மனப்பான்மையினை வளர்த் தெடுக்க வேண்டும் என்று வேண்டினார்.
தொடர்ந்து பயிற்சியில் பங்கேற்றவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.
திராவிடர் கழக துணைப்பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தனது தொடக்க உரையில், இந்த பயிற்சி குறுகிய காலத்தில் காலத்தின் அவசரம் கருதி ஏற்பாடு செய்யப்பட்டது என்றும், பங்கேற்பாளர்களுக்கு ஒவ்வொரு அமர்விலும் வினா எழுப்பிட காலம் தரப்படும் என்றும், போலி அறிவியலாளர்களை அடையாளம் கண்டு முகத்திரையை விலக்கிட வேண்டும் என்றும் கூறினார்.
தொடர்ந்து சிறப்புரையாற்றிய திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மக்களிடத்தில் இருக்கும் அறியாமையை பயன்படுத்தி சுரண்டும் போக்கை தடுக்க நம்மால் தான் முடியும் என்றும், இம்மாதிரி பயிற்சிப் பட்டறைகள் நாடு முழுவதும் நடைபெறவேண்டும் என்றும், ஆசிரியர்கள் தான் இதனை எளிதில் செயல்படுத்திடமுடியும் என்றும் கூறினார்.
மூடநம்பிக்கைகள் எப்படி மனிதன் அறிவை, பொருளை களவாடுகிறது என்பதை எல்லாம் எடுத்துச்சொல்லி இதிலிருந்து விடுபட இதுபோன்ற அறிவியல் மனப்பானமையை வளர்க்கும் பயிற்சி வகுப்புகள் தேவை என்பதையும் கூறி வருகை தந்த அறிவியலாளர் வெங்கடேஸ்வரனுக்கு சிறப்பு செய்தார்.
முதல் அமர்வு: ‘கலிலியோ கண்டுபிடித்த நிலவின் மலையும்,சாகனின் டிராகனும் – எது அறிவியல் கல்வி?
கருத்தாளர்: அறிவியலாளர் த.வி.வெங்கடேஸ்வரன்
அறிவியலாளர் வெங்கடேஸ்வரன் தனது வகுப்பை பவர் பாயிண்ட் மூலம் தொடங்கினார். உலகம் தோன்றியவிதம் பற்றி எடுத்துக்கூறினார். காணல், கருதல், ஆகமம் பற்றியும், அவைகளுக்கு இடையே உள்ள வேறுபாடு பற்றியும் எடுத்துக்கூறினார். நிலவியல் அமைப்பு குறித்தும்,நீள்வட்ட அமைப்பு குறித்தும் எளிமையாக புரியும்படி விளக்கி இதனை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டினார்.
கெப்ளர் விதியை நன்கு புரிய வைத்தார். கலிலியோ கண்டுபிடிப்பான நிலவின் மலையும் சாகனின் டிராகனும்பற்றி தெளிவாக விளக்கிக் கூறினார். ஒன்றிலிருந்து மற்றொன்றை அறிய ஆய்வு செய்தல் குறித்த விளக்கம் அருமையாக இருந்தது.
அறிவியல் விதிகள் மட்டுமே பாடத்திட்டத்தில் உள்ளன. விதிகள் உருவான வரலாறு என்று பாடத்திட்டத்தில் சேரும்போது அறிவியல் மனப்பான்மை இன்னும் அதிகமாக வளரும் என்றும் கூறினார்.
நிலவு, மலை கணக்கீடு எப்படி என்பது பற்றி கூறினார்.
அறிவு, நம்பிக்கை, மூடநம்பிக்கை பற்றி வேறுபடுத்திக் காட்டினார்.
ஒரு முழுமையான அறிவியல் கல்வி எது என்பதை விளக்கினார். வகுப்பறையில் அறிவியலை வாசிக்காமல் நிறுவி கற்பிக்க வலியுறுத்தினார். பல்வேறு மூடநம்பிக்கைகளையும் அவற்றின் உண்மைத் தன்மையையும் எடுத்துக்கூறி இவற்றையெல்லாம் மாணவர் களிடம் கொண்டுசேர்க்கும் முன் ஆசிரியர்கள் தெளிவு பெறவேண்டும் என்று கூறி முடித்தார்.
அமர்வு 2: மாணவர்களும் மூடநம்பிக்கைகளும்… மஞ்சை வசந்தன்
இரண்டாம் அமர்வு “மாணவர்களும் மூடநம்பிக்கை களும்” என்னும் தலைப்பில் எழுத்தாளர் மஞ்சை வசந்தன் அவர்களால் நடத்தப்பட்டது.உலகம் தோன்றிய விதம் உயிர்கள் தோன்றிய விதம் பற்றி அறிவியல் பூர்வமாக விளக்கமளித்தார். எளிய முறையில் எளிய பொருட்களை கொண்டு எல்லோருக்கும் எளிதாக புரியும்படி மூடநம்பிக்கைகள் பற்றி எடுத்துரைத்தார். மூட நம்பிக்கைகளை எப்படி தோலுரித்துக்காட்டுவது என்பது பற்றி எடுத்துரைத்தார். தனது வாழ்க்கையில் மூடநம்பிக்ககைகளை தொடர்ந்து எதிர்த்துவரும் நிகழ்வு களைக் கூறினார்.
ஜோசியம், ஜாதகம், கட்டம், வாஸ்து, ஆணியில் நிற்பது, தீ மிதிப்பது, பேய் பிடிப்பது,அலகு குத்துவது, தேங்காய் உடைப்பது பற்றிய மூடநம்பிக்கைகளை மிகத் தெள்ளத் தெளிவாக விளக்கி நாம் எப்படி ஏமாற்றப்படுகிறோம் என்பதை ஆதாரத்துடன் எடுத்துரைத்தார். ஆன்மா என்பது பற்றி தெளிவான விளக்கமளித்தார். அய்ம்பூத அமைப்பினை விளக்கிக் கூறினார். வினா-விடை நேரத்தில் கேட்கப்பட்ட கோழி முந்தியா? முட்டை முந்தியா? என்பதற்கு அறிவியல் அடிப்படையில் விளக்கினார். வாசிக்க வேண்டிய நூல்கள் பற்றியும் கூறினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் வருகையும், கலந்துரையாடலும்
பல்வேறு பணிகளுக்கு இடையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அரங்குக்கு வருகை தந்தார், மஞ்சை வசந்தன் அவர்கள் வகுப்பு எடுத்து முடியும் வரை கவனித்துக்கொண்டிருந்தவர் அவர் முடித்தவுடன் பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடல் வழியே அவர்களுக்கு அறிவியல் அணுகுமுறை பற்றி விளக்கிப் பேசினார்.
அய்யா அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகள், தன்து வாழ்வில் நடைபெற்ற நிகழ்வுகளை யெல்லாம் எடுத்துக்கூறி பகுத்தறிவு என்பது அறி வியல் அடிப்படையிலானது என்பதை தெளிவாக எடுத்துக் கூறினார்.
வருகைதந்த அறிவியலாளர் வெங்கடேஸ்வரன் அவர்களையும், மஞ்சை வசந்தன் அவர்களையும் பாராட்டி சிறப்பு செய்தார்..
அமர்வு 3: ‘அறிவியல் சூழ் உலகு’ – முனைவர் கோ.ஒளிவண்ணன்
முனைவர் கோ.ஒளிவண்ணன் மதிய நேரம் என்பது கூட பயிற்சியாளர்களுக்கு தெரியாத அளவில் இயல்பாக வகுப்பை கலகலப்புடன் தொடங்கினார். ஆசிரியர் என்பவர் மாணவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தும் மிகச்சிறந்த வாய்ப்பு பெற்றவர்கள் என்பதை பெருமையுடன் கூறியவர் அந்த மாற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் கூறினார். ஆசிரியர்கள் எப்போதும் தம்மை அப்டேட் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
நான்கு கால்களில் நடந்த மனிதன் இரண்டு கால்களில் நடக்க தொடங்கியதுமே வளர்ச்சி தொடங்கியது என்பது தொடங்கி மனிதனின் பல்வேறு பரிணாம வளர்ச்சிகளை விளக்கினார்.
சிந்தனையை தூண்டும்விதமாகவும் அதேசமயம் கலகலப்பாகவும் வகுப்பை வைத்திருந்ததாக பயிற்சி யாளர்கள் தெரிவித்தார்கள்.
செயற்கை நுண்ணறிவு பற்றி ஏராளமான தகவல்களை தெரிவித்து அனைவரும் பயன்படுத்திட எதுவாக CHAT GBT ப்ளேஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள நேரம் வழங்கி பயன்படுத்திட கேட்டுக்கொண்டார்.
அமர்வு 4: ‘ஆசிரியர்களின் அணுகுமுறை’ –
கருத்தாளர்: பொம்மலாட்ட கலைஞர் மு.கலைவாணன்
எதையும் அணுகுமுறையால் மட்டுமே சாதிக்க இயலும் என்பதை ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், மாணவர்கள் இப்போது மிகவும் புத்திக்கூர்மை உடையவர்களாக இன்னும் சொல்லப்போனால் நம்மைவிட அதிக விவரங்களை தெரிந்துள்ளவர்களாக உள்ள நிலையில் ஆசிரியர்கள் தம்மை சூழ்நிலைக்கு ஏற்ப மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
மாணவர்களை – முதலில் நாம் அவர்களை அங்கீக ரிக்க வேண்டும். .அவர்களிடம் நாம் நெருங்கிப் பழகிட வேண்டும். நம்மிடம் அவர்கள் எளிதில் அணுக வேண்டும். நமக்கானவர் நம் ஆசிரியர் என்னும் நம்பிக்கையை மாணவர்கள் மனதில் தோற்றுவிக்க வேண்டும்.அப்போதுதான் அவர்கள் நம்மிடம் நாம் சொல்லுவதை கேட்பார்கள். அவர்களது சிந்தனையை நாம் தூண்டிவிடும்போது அவர்கள் அதுகுறித்து சிந்திக்கத் தொடங்குவார்கள்.அவர்களுக்குப்பிடித்தமான முறையில் நாம் கருத்துகளை விதைக்க வேண்டும். பாடப்புத்தகத்தை தாண்டிய உலகம் உள்ளது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவர்களது அறிவை முறையாக வளர்க்க நாம் பல கலைகளை பயன்படுத்தவேண்டும் என்று கூறி முடித்தார்.
அமர்வு: 5 “சமூக நீதியும் கல்வியும்”
கருத்தாளர்: அண்ணா.சரவணன்
உணவு இடைவேளைக்குப் பின் “சமூக நீதியும் கல்வியும்” என்னும் பொருளில் அண்ணா.சரவணன் நம் சமுதாயம் இருநூறு ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது எனபதில் தொடங்கினார். நமது மக்கள் படிக்க முடியாத சூழ்நிலை இருந்ததை அழகாக எடுத்துக்காட்டினார். ஓரிருவர் படிக்கத்தொடங்கியதும் நமக்காக என்னென்ன தடைகள் ஏற்படுத்தப்பட்டு நமது கல்வி உரிமை மறுக்கப்பட்டதை விளக்கிக்கூறினார்.
ஆங்கிலேயர் வருகைக்குப்பின் ஏற்பட்ட மாற்றங்கள், சமூக சீர்திருத்த சட்டங்கள், தென்னிந்திய நலவுரிமைச் சங்கம், நீதிக்கட்சி, நீதிக்கட்சித் தலைவர்கள் வரலாறு, டி.எம்.நாயர், தியாகராயர், நடேசனார் ஆற்றிய தொண்டுகள், நீதிக்கட்சி தோற்றம், சாதனை, பின் திராவிடர்கழகம் தோற்றம் பற்றி அழகாக எடுத்துரைத்தார்.
திராவிடர் மாணவர் விடுதி முதல் சேரன்மாதேவி குருகுலம் வரை தொடர்ச்சியாக எந்த குறிப்புகளுமின்றி எடுத்துரைத்தார்.
முதல் அரசமைப்புச் சட்ட திருத்தம் பற்றிய முழு விவரத்தை எடுத்துரைத்து, தொடர்ந்து எம்ஜிஆர் காலத்தில் இடஒதுக்கீடுக்கு ஏற்பட்ட இடையூறு தொடர்ந்து ஆசிரியர் தலைமையில் போராடியது பின் வெற்றிபெற்றது. 69% இடஒதுக்கீடு பற்றி எடுத்துரைத்து ஆசிரியர் அவர்களது புத்திக்கூர்மையால், முயற்சியால், உழைப்பால், கிடைத்த பயனை இன்று நாம் அனுபவித்துவருகிறோம். என்று கூறி முடித்தார்.
அமர்வு: 6 “அறிவியல் மனப்பான்மை”
கருத்தாளர்: மருத்துவர் கணேஷ் வேலுச்சாமி
மருத்துவர் கணேஷ் வேலுச்சாமி, ஒளிப்பட விளக்கம் மூலம் அறிவியல் மனப்பானமை என்றால் என்ன என்பதை விளக்கினார். அறிவியல் மனப்பான்மை வளராததற்கு எவையெல்லம் காரணங்களாக உள்ளன என்பதை விளக்கினார். அறிவியல் அறிவு என்பதற்கும், அறிவியல் மனப்பான்மை என்பதற்குமுள்ள வேறுபாடுகளை தெளிவாக எடுத்துரைத்தார்.
கரோனா காலம் முகக் கவசம் – கந்த சஷ்டி கவசம் எது வேண்டும் என்பது பற்றியும், மழை வருவதன் அடிப்படை மேகமா? யாகமா? எனக்கேட்டு அதன் அடிப்படை உண்மைத்தன்மையை ஆராய வேண்டும் என்பதை எடுத்துச்சொன்னார்.
மூடநம்பிக்கைக்கு காரணங்கள் எவைஎவை என்பதை படக்காட்சிகள் மூலம் விளக்கினார். பயம், அறியாமை, துயரம்,பேராசை, மற்றவர்கள் அழுத்தம், போலி சமூக அங்கீகாரம் பற்றியெல்லாம் விரிவாக எடுத்துரைத்து, இவையெல்லாம் மூடநம்பிக்கைகள் வளருவதற்கு காரணமாக உள்ளது என்பதையும் நாம் அறிவுப்பூர்வமாக ஆய்வு நடத்திட வேண்டும் என்றும் கூறினார்.
மூடநம்பிக்கைகளுக்கு பகுத்தறிவும், அறிவியலும் தடுப்பூசிகள் என்பதை எடுத்துச்சொன்னார்.
உயிரினம் படைப்பா? இயற்கையா? என்பதை விளக்கினார். டார்வின் பரிணாமக்கொள்கையை தெளிவாக எளிமையாக விளக்கினார்.
எதையும் ஏன்? எனக் கேட்க வேண்டும். அந்தக் காலத்தில் கூறப்பட்ட புராண கருத்துகள் இன்றைய காலத்திற்கு ஏற்றதாக இருக்காது. நமது அறிவை, சிந்தனையை வைத்தே எதையும் முடிவு செய்ய வேண்டும் என்பதை 100க்கும் மேற்பட்ட படக்காட்சிகள் மூலம் விளக்கியது சிறப்பு.
எது நம்பகமானது? எது மூட நம்பிக்கையானது என்பதை விளக்கினார்.
‘கடந்த காலத்தைப் பற்றிய வரலாற்றை யார் நிர்ணயிக்கிறார்களோ அவர்கள் தான் எதிகாலத்தை கட்டுப்படுத்துவார்கள்’ என்ற ஜார்ஜ் ஓர்வெல் கருத்தை எடுத்துச்சொன்னார்.
அமர்வு: 7 “மூட நம்பிக்கை X தன்னம்பிக்கை”
கருத்தாளர்: மன நல மருத்துவர் என்.ஷாலினி
மன நல மருத்துவர் என்.ஷாலினி, மூட நம்பிக்கை என்றால் என்ன என்பதை தெளிவாக எடுத்துக்கூறினார். நூறு ஆண்டுகளுக்கு முன் பெண்கள் ஆசிரியை ஆக முடியாது என்பதையும், செவிலியராகவும் முடியாது என்பதையும் எப்படி அது மாறியது என்பது பற்றியும் கூறினார்.
13 “அதிர்ஷ்டமில்லாத” எண் என்பது பற்றிய செய்திகளை எடுத்துச்சொன்னார். வெள்ளையாக இருப்பவர்கள் பொய் சொல்லமாட்டார்கள் என்பதான மூடநம்பிக்கையை விளக்கினார்.பல நோய்கள் இன்று இல்லை எப்படி என்பதை விளக்கினார். பயிற்சியாளர்கள் ரசிக்கும்படி செய்திகளைக் கூறினார்.
மங்கோலியர்கள் காலம் முதல் அறிவு பற்றிய வரலாறு கூறினார். அறிவின் பயணம் பற்றிய செய்திகளைக்கூறியது சிறப்பு. கொலம்பஸ் இந்தியா வருவதற்கு என்ன காரணம் எனபதை விளக்கினார். சமஸ்கிருதம் – சம்ஸ்கிருதம் பற்றி கூறினார். சமஸ்கிருதம் வீழ்ச்சியடைந்தது எப்படி என்பதை விளக்கினார்.
எல்லோரும் அறிவாளிகளே என்பதை எடுத்துக் கூறினார். மூடநம்பிக்கைகளை கையாளுவது எப்படி என்பதை விளக்கினார்.
போனஜென்மம் பற்றி பேசுவதற்கு மருத்துவர்களே தகுதி உடையவர்கள் என்பதையும் மற்றவர்களுக்கு தகுதி இல்லை என்பதையும் விளக்கினார்.
மலேரியா, போலியோ பற்றிய விளக்கம் அளித்து அது இன்று என்னவானது என்பதை விளக்கினார். மாத்திரை, ஊசி, சொட்டு மருந்து கண்டுபிடித்ததுபற்றி கூறி எப்படி நோய்கள் ஒழிக்கப்பட்டன என்பதை விளக்கிக் கூறினார்..
அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றி கூறினார். பாராட்டும் மனப்பான்மை அறிவியலை வளர்க்கும் என்பதை உதாரணத்துடன் விளக்கினார்.
சமணப்பள்ளிகள் பற்றியும் அது வீழ்ந்தது பற்றியும் கூறினார். எழுத்துப்பூர்வமான வரலாறு நமக்கு உண்டு. அறிவியலை நாம் ஒரு பாடமாகத்தான் படிக்கிறோம். மஞ்சள்,- விரலியர் – நடனமாடுதல் – மஞ்சள் பூச்சு, பற்றி கூறினார். நீ என்னவாக இருந்தாலும் பொம்பள தான் என்ற மனநிலையை எடுத்துக்கூறினார். அதனை எப்படி மாற்றுவது பற்றியும் கூறினார். புருஷஷூக்தம் பற்றி கூறினார்.
3000 ஆண்டுகளுக்கு முன் யோசித்தவைக்கும், 2024 இல் யோசித்தவைக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து கூறினார். பெரிய டயருக்கு அடியில் எலுமிச்சம்பழம் வைப்பது பற்றி கூறினார். முன்னோர்களால் சொல்லப்பட்டதை எதிர்க்கக்கூடாது என நாம் எதிர்க்காமல் இருந்ததால் தோற்றோம் என்பதை எடுத்துக்கூறினார்,
நம்பிக்கை, நம்பிக்கையின்மை, மூடநம்பிக்கை BELIEF, DISBELIEF, DILLUSION பற்றி கூறினார்.
1] இந்த நம்பிக்கை எனக்கு பயனானதா? வசதியானதா? என்னை மேம்படுத்துமா? எனக்கு பொருந்துமா? எனது குடும்பத்துக்கு ஆதாயமா? சமுதாயத்துக்கு நன்மை பயக்குமா? என பார்த்து வைத்துக்கொள்ளவேண்டும்
2] இதனால் பயனில்லை.. இது மூடநம்பிக்கை, அறி வில்லாத நம்பிக்கை ஏதோ ஒரு காலத்தில் சொல்லப்பட்டது என்பதால் அதை விட்டு விலகி வரவேண்டும்.
3] மற்ற நாடுகளில் ஏன் அறிவை நம்புவதால் வெற்றிபெறுகிறார்கள்.
நம் நாட்டில் நம் முன்னோர்கள் சொன்னது என்பதை ஏற்றதால் தோற்கிறோம், நன்றி என்று கூறி முடித்தார்.
நிறைவு விழா:
இறுதியில் நிறைவு விழா நிகழ்வுக்கு பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் தலைமை ஏற்றார்.
பயிற்சியாளர்களில் இருவர் தங்களது பயிற்சி பற்றிய பின்னூட்டத்தை வழங்கினார்கள். அனைவரிடமும் பின்னூட்ட படிவம் வழங்கப்பட்டு பெறப்பட்டது. தொடர்ந்து தலைமை ஏற்ற இரா. தமிழ்ச்செல்வன், மேனாள் பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளரும், இன்றைய திராவிடர் கழக பொருளாளருமான வீ.குமரேசன் அவர்களை பயிற்சி நிறைவுரை ஆற்றக் கேட்டுக்கொண்டார்.
நிறைவுரையில் இங்கு பெற்ற பயிற்சியை நீங்கள் மாணவர்களிடமும் மற்றவர்களிடமும் கொண்டு சென்றால் தான் இதன் வெற்றியாகும் என்பதைக்கூறி இப்பயிற்சியை குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்திய பகுத்தறிவாளர் கழகத்தினரை பாராட்டினார்.
சென்னையில் மட்டும் நடத்தப்பட்டது போல இந்த பயிற்சி வகுப்புகள் மற்ற மாவட்டங்களிலும் நடத்தப்பட வேன்டும் என்று கூறினார்.
இப்பயிற்சியில் மொத்தம் 94 பேர் கலந்துகொண்டனர். .இவர்களில் 14 பேர் பேராசிரியர்கள், 57 பேர் ஆசிரியர்கள், 2 பேர் ஆராய்ச்சி மாணவர்கள்.21 பேர் மற்றவர்கள் ஆவார்கள்.
பயிற்சியாளர்கள் அனைவருக்கும் சான்றிதழை மாநில தலைவர் தமிழ்செல்வன் வழங்கினார். பொதுச் செயலாளர் வா. தமிழ் பிரபாகரன் நன்றி கூறினார் . நிகழ்வை பொதுச்செயலாளர் வி.மோகன் ஒருங்கிணைத்தார்.
தொகுப்பு: வி.மோகன், பொதுச்செயலாளர்,
பகுத்தறிவாளர் கழகம்