திறன்பேசிகளின் பயன்பாடு தற்போது மிகவும் அதிகரித்துவிட்டது. அதிக நேரம் அலைபேசி பயன்படுத்துவதால் உறக்கமின்மை, ஞாபக மறதி, மனக் குழப்பம் போன்ற பல பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடுகிறது.
மறதி நோய்: அலைபேசிகளை அதிக நேரம் பயன்படுத்துவதால் நமக்குத் தேவையான உறக்க நேரம் குறைகிறது. இது நமது மூளையின் செயல்பாட்டைக் குறைக்கிறது. உறக்கமின்மையால் மறதி நோய் அதிகரித்து நம் நினைவுகளும் சிந்தனைத் திறனும் பாதிக்கப்படும் நிலைக்கு ஆளாகிவிடுகிறோம். மறதி நோயினால் பொதுவாக வயதானவர்கள்தான் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள். ஆனால், தற்போது மறதி நோயினால் இளைஞர்களும் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். காரணம், திறன்பேசிகளின் அதீத பயன்பாடு.
மனநிலை மாற்றங்கள்: திறன்பேசிகளின் நீண்ட நேரப் பயன்பாடு, மனநிலையிலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. சோகம், சிரிப்பு, மகிழ்ச்சி போன்ற உணர்வுகள் மாறி மாறி வரும். இதனால், நமது மூளைச் செயல்பாடு சீராக இருக்காது.
உணவு முறை: திறன்பேசிகளைப் பயன்படுத்தும் நேரம் அதிகரித்தால் நமது உணவு முறையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. உணவின் மீது நமது கவனம் குறைகிறது. இதனால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
தீர்வு என்ன?
1. உடற்பயிற்சி: அன்றாடம் உடற்பயிற்சி மூளையைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவும்.
2. விளையாட்டுகள்: உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும்.
3. புதிர் விளையாட்டுகள்: மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும்.
4. வினாடி வினா: ஞாபக சக்தியை மேம்படுத்தும்.
5. மருத்துவ ஆலோசனை: மறதி நோய் தீவிரமாக இருந்தால் மனநல மருத்துவரைச் சந்தித்து தகுந்த ஆலோசனைகளைப் பெறுவது மனநல ஆரோக்கியத்திற்கு உதவும்.
இது குறித்து மனநல மருத்துவர் ராமானுஜம், “உறக்கம் குறைவதால் மறதி நோய் ஏற்படும் சாத்தியம் அதிகம். இதைச் சரிசெய்ய தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். நல்ல உறக்கம், சரியான உணவு, நிறைய புதிர் விளையாட்டுகள் போன்றவை மூளைச் செயல்பாடுகளை ஊக்குவிக்கும்” எனத் தெரிவித்தார்.