விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம்பற்றிக் கேட்கிறீர்கள் – அவர் அறிவிக்கும் கொள்கைகள், செயல்முறைகளைப் பார்த்து கருத்துகள் கூறுவோம்!  ஆசனூரில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

Viduthalai
7 Min Read
* இளைஞர்கள் பகுத்தறிவு வளர்ச்சி பெற,வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க 
பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை நாடெங்கும் திராவிடர் கழகம் நடத்தி வருகிறது!
* வாசிக்கும் திறனை ஊக்குவிக்க மாவட்டந்தோறும் ‘திராவிட மாடல்’ அரசு 
புத்தகக் கண்காட்சியை நடத்தி வருவது பாராட்டத்தக்கது!
கோபி, அக்.28 திரைக்கலைஞர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தைப்பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, விஜய், அவருடைய கட்சியின் கொள்கைகள், செயல்பாடுகளை அறிவிக்கட்டும் – அதற்குப் பிறகு நமது கருத்துகளைத் தெரிவிப்போம் என்றார் செய்தியாளர்களிடையே திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஆசனூரில் செய்தியாளர்களுக்குத்
தமிழர் தலைவர் அளித்த பேட்டி
நேற்று (27.10.2024) மாலை தூக்கநாயக்கன்பாளை யத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – சாமி.கைவல்யம் தொண்டறச் சிறப்பு நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க கோபிசெட்டிப் பாளையத்திற்குக் காலையில் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்..
அவரது பேட்டி வருமாறு:
முதல் முறையாக இப்பகுதியில்
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை!
முதல் முறையாக இந்தப் பகுதியில் சிறப்பான ஏற்பாடுகள் செய்து, சுமார் 110 மாணவர்கள், இளை ஞர்கள் கலந்துகொண்ட பெரியாரியல் பயிற்சிப் பட்டறை இரு நாள்கள் (26.10.2024, 27.10.2024) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தந்தை பெரியாருடைய கொள்கைகள், சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு விழா இந்த ஆண்டு – இவற்றைப்பற்றியெல்லாம் அறிந்துகொள்ளும் ஆர்வத்தோடு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், பட்டதாரி இளைஞர்கள் பலர், முதுநிலைப் பட்டதாரிகள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றனர்.
சாமி.கைவல்யம் அவர்களுடைய சொந்த பகுதி இது!
கோபி மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்க ளுடைய முயற்சியினால் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை சிறப்பாக இங்கே நடைபெற்றது. அதனுடைய நிறைவு விழா நடைபெற்று முடிந்தவுடன், இன்று (27.10.2024) மாலை தூக்கநாயக்கன்பாளையத்தில் சாமி.கைவல்யம் அவர்களுடைய சொந்த பகுதி அது – அங்கேதான் அவர்கள் பல நாள்கள் தங்கியிருப்பார். ஈரோட்டில் ‘குடிஅரசு’ அலுவலகத்திலேயே தன்னுடைய வாழ்நாளைக் கழித்தவர்.
அப்படிப்பட்டவர் அவர், தந்தை பெரியாருக்கு இரண்டு வயது மூத்தவர். கைவல்யத்தினுடைய நினை வையொட்டி, அவரது தொண்டற நூல் வெளியீட்டு விழாவினை, அனைத்துக் கூட்டணிக் கட்சி நண்பர்கள், பொதுவானவர்கள் என்று எல்லோருடைய ஆதரவோடு மாலையில் நடைபெறவிருக்கின்றது. அதில் பங்கேற்க இங்கே வந்திருக்கின்றோம்.
மாவநத்தம் பழங்குடியின மக்களைச் சந்தித்தேன்!
இந்தப் பகுதிவாழ் மலைவாழ் மக்கள், பூர்வீகக் குடிகளாக இருக்கக்கூடிய அந்த மக்களுடைய வாழ்க்கைத் தரம், அவர்களுடைய வாழ்க்கை முறை – இவற்றைப்பற்றியெல்லாம் அறிந்துகொள்வதற்கு ஒரு பெரிய வாய்ப்பு ஏற்பட்டது.
நேற்று (26.10.2024) மாலை இந்தப் பகுதிக்கு அருகில் உள்ள மாவநத்தம் என்ற பழங்குடியினரின் கிராமத்திற்குச் சென்றபொழுது, அங்கே இருக்கின்ற வர்களைச் சந்தித்தோம். அவர்கள் பல பிரச்சினைகளைச் சொன்னார்கள்.
குறிப்பாக, தி.மு.க. நண்பர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்கள் எல்லாம் முயற்சி எடுத்து, அவர்களுடைய வாழ்க்கை மேம்பாட்டிற்காக நல்லவண்ணம் அரும்பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அக்கிராம மக்களின் வாழ்க்கையில் முக்கிய பிரச்சி னையாக மருத்துவப் பிரச்சினைகள் இருக்கின்றன; நம்முடைய அரசு, பல மருத்துவத் திட்டங்களில் முன்னணியில் இருக்கிறது; கல்வித் துறையில் வழிகாட்டியாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், இதுபோன்ற பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு இன்னமும் சில மருத்துவ வசதிகள் தேவைப்படு கின்றன, மருத்துவ ஆய்வுகளும் தேவைப்படுகின்றன என்று நாங்கள் யோசித்தோம்.
இன்று (27.10.2024) மாலை தூக்கநாயக்கன்பாளை யத்தில் நடைபெறும் கைவல்யம் தொண்டறத்தைப்பற்றி பகுத்தறிவுப் பிரச்சாரக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
செய்தியாளர்: இன்றைக்குத் தமிழக வெற்றிக் கழகத்தினுடைய முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறவிருக்கிறது. நடிகர் விஜய் முதல் முறையாக மாநாட்டில் உரையாற்றவிருக்கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
கட்சி தொடங்குவதற்கு நடிகர் விஜய் அவர்களுக்கு எந்தவிதமான தடையும் கிடையாது
தமிழர் தலைவர்: தமிழ்நாட்டில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. புதிய கட்சிகள் தோன்றுவதற்கு, தமிழ்நாட்டில் இதுவரையில் உச்சவரம்பு கிடையாது. மற்றவைகளுக்கு சில உச்சவரம்புகள் உள்ளன. ஆனால், அரசியலில் உச்சவரம்பு கிடையாது.
யார் யாருக்கு என்னென்ன வசதிகள் இருக்கின்றனவோ, யார் யாருக்கு, உங்களைப் போன்ற ஊடகங்கள் நிறைய விளம்பர வெளிச்சத்தைக் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் ஆசைகள் தோன்றுவது இயற்கைதான்.
கட்சி தொடங்குவதற்கு அவருக்கு எந்தவிதமான தடையும் கிடையாது. ஆகவே, அவர் கட்சி தொடங்கி, மாநாடு நடத்துகிறார்.
எது எதுவெல்லாம் மார்க்கெட்டிங் சப்ஜெக்ட்டாக இருக்கிறதோ, எது எதுவெல்லாம் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாதோ அவற்றையெல்லாம் பயன்படுத்தியே அரசியலுக்கு வருவார்கள்.
அவருடைய கட்சியின் கொள்கை என்ன என்பதைச் சொல்லட்டும், பிறகு எங்களுடைய கருத்தைச் சொல்கிறோம்.
யூகங்களுக்கு இடமளிக்கக் கூடாது!
செய்தியாளர்: பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் அவர்களுடைய படங்களை, தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டு மேடையில் வைத்திருக்கிறாரே, அவர்களுடைய கொள்கைகளையும் பின்பற்றுவாரா?
தமிழர் தலைவர்: படங்களை வைத்திருக்கிறார்கள் உண்மைதான்! அவர்களுடைய கொள்கைகளைச் சொல்லட்டும். செயல்பாடுகளையும் பார்ப்போம்! நாம் யூகத்திற்கு இடமளிக்கக் கூடாது. சிறப்பான கொள்கை களைச் சொன்னால், அது வரவேற்கவேண்டிய விஷயம்தான்.
செய்தியாளர்: அண்மைக் காலங்களில் சமூக வலைதளங்களில் தேடல் அதிகமாக இருக்கிறது. உங்கள் இயக்கம், திராவிட இயக்கக் கொள்கைகளை அல்லது பெரியாருடைய கொள்கைகளை எந்த வகையில் இன்றைய இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லவிருக்கிறது?
வாசிப்பு என்பதுதான் மிகவும் முக்கியம்
தமிழர் தலைவர்: இங்கே நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில், முதலாவதாக புத்தகங்கள்தான் அளிக்கப்பட்டன. வாசிப்பு என்பதுதான் மிகவும் முக்கியம். இன்றைய இளைஞர்கள், சமூக வலைதளத்திலேயே அதிக நேரத்தை செலவழிக்கிறார்கள். பல வகைகளில், சமூக வலைதளங்கள் பயன்படக்கூடியதாகவும் இருக்கின்றன. அக்கிரமங்கள், அநீதிகள், குறைபாடுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டுவதற்கும், அவற்றை சரி செய்வதற்கும் அது ஒரு நல்ல கருவியாக இருக்கிறது.
ஆனால், அது எப்படிப் பயன்படுகிறது என்பதை அதனுடைய பயனை வைத்துத்தான் சொல்ல முடியும். அந்த வகையில், இளைஞர்களுக்குக் கவனச் சிதறல்கள் இருக்கின்றன. அந்தக் கவனச் சிதறல்களிலிருந்து இளைஞர்களைக் காப்பாற்றவேண்டுமானால், இதுபோன்ற புத்தகங்களைக் கொடுக்கவேண்டும்; பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவேண்டும்.
புத்தகங்களை அடக்கத்திற்கும்
குறைவாகத்தான் கொடுக்கிறோம்!
நாங்கள் கொடுக்கின்ற புத்தகங்களைப் பார்த்தீர்களே யானால், அடக்கத்திற்கும் குறைவாகத்தான் கொடுக்கி றோம். இலவசமாகக் கொடுத்தால் படிக்க மாட்டார்கள். தந்தை பெரியார்கூட சொல்வார், ‘‘இலவசமாக கொடுத்தால், வாங்கி அதைப் படிக்காமல் கிடப்பில் போட்டு விடுவார்கள்” என்று.
அதனால்தான் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு, அடக்கத்திற்கும் குறைவான விலையில் கொடுக்கி றோம். மாணவர்களுக்கு 50 சதவிகித சலுகையில் கொடுக்கிறோம். ஆகவே, எங்களுடைய புத்தகங்கள் ஏராளமாகப் பரவுகின்றன. விற்பனையில், உலக அளவில் முதலிடத்தில் உள்ள அமேசான் மூலமும் நம்முடைய புத்தகங்களை வாங்குகின்றனர்.
ஆகவே, இப்பொழுது ஒரு நல்ல திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. படிக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் இளைஞர்கள் வருகிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், குறிப்பாக நம்முடைய திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக வந்த பிறகு, ஒரு நல்ல ஏற்பாட்டினை செய்திருக்கிறார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகக் காட்சி:
‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனை!
வாசிப்பை உருவாக்கவேண்டும் என்பதற்காகத்தான், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் பொறுப்பில், புத்தகக் காட்சிக்கு ஏற்பாடு செய்தி ருக்கிறார். அந்தப் புத்தகக் காட்சியின்போது, புத்தகத்தி னுடைய தேவைகளைப்பற்றி பல அறிஞர்கள் உரை யாற்றுகின்றனர். புத்தகங்கள், மலிவு விலையில் மக்களுக்குக் கிடைக்கக் கூடிய ஏற்பாட்டினை அரசாங்கமே முன்னிறுத்தி செய்வது, இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில் உள்ள திராவிட மாடல் அரசுதான். அறிவைப் பெருக்கக்கூடிய அளவிற்கு அந்தப் பணியை மேற்கொண்டிருக்கிறது.
அறிவை விரிவு செய்து, விசாலமாக்கக் கூடிய பணியை செய்கிறது. அந்தப் பணி, இப்பொழுது சிறந்தோங்கி இருக்கிறது.
சென்னையில் மட்டும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் அரசு நடத்துகின்ற புத்தகக் காட்சி நடந்தால் போதாது என்று இப்பொழுது எல்லா மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.
படைப்பாளிகளுக்கு ஊக்கம் தரப்படுகின்றது!
ஆகவே சிறு பதிப்பகம், பெரிய பதிப்பகம், புதிய எழுத்தாளர்கள் உருவாக்கப்படுகிறார்கள். படைப்பாளி களுக்கு ஊக்கம் தரப்படுகின்றது என்கிற அளவிற்கும் இருக்கிறது.
ஆகவே, இளைஞர்கள் நல்ல வழியில் வர வேண்டுமானால், நல்ல புத்தகங்களைப் படித்துத் தெரிந்துகொள்ளவேண்டும்.
‘‘நூலைப் படி நூலைப் படி” என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னார்.
அந்த நூலைப் படிக்கக் கூடிய அளவிற்கு, வாய்ப்பு கள் இன்றைக்கு ஏராளமாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அதற்காகத்தான் இதுபோன்ற பெரியாரி யல் பயிற்சிப் பட்டறைகள். அதில் நீங்கள் கண்கூடாகப் பார்த்திருப்பீர்கள்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
மாவநத்தம் பழங்குடி மக்களுக்கு
நவ.17 இல் ‘‘பெரியார் மருத்துவரணியின்’’
மருத்துவ முகாம் 40 மருத்துவர்களோடு நடைபெறும்!
‘‘பெரியார் மருத்துவரணி” என்ற அணி திராவிடர் கழகத்தில் இருக்கிறது. அந்த அணியின் சார்பாக, மருத்துவர்கள், மற்ற வர்களும் கலந்தாலோசித்து, அந்தக் கிராம மக்களின் குறைகளைக் கேட்டு, தேவைகளை அறிந்து முடிவு செய்த நேரத்தில், அடுத்த மாதம் 17 ஆம் தேதியன்று, இதே இடத்தில், நண்பர்களுடைய ஒத்து ழைப்புடன், சுமார் 40 மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்கும் மருத்துவ முகாம் நடத்துவதென முடிவு செய்திருக்கிறோம்.
குறிப்பாக, பெண்களுக்கும், மற்றவர்களுக்கும் மருத்துவ ஆய்வு செய்து, அவர்களின் தேவைகளை முடிந்த அளவிற்கு நிவர்த்தி செய்யக்கூடியதை பெரியார் மருத்துவரணி செய்யவிருக்கிறது.
கோபிசெட்டிபாளையம் மாவட்டத்தின் கழகத் தலைவர் வழக்குரைஞர் சென்னியப்பன் மற்ற நண்பர்களும், புரவலர் களும் இதனை வரவேற்ப தாகவும், ஒத்துழைப்புத் தருவ தாகவும் உற்சாகத்தோடு சொல்லி யிருக்கிறார்கள்.
ஆகவே, பெரியாரியல் பயிற்சி முகாம் – அதனால் ஏற்பட்ட பலன் – இந்த மக்களு டைய வாழ்வாதாரத்தை மேம்ப டுத்துவதற்கும் பயன்பட்டு இருக்கிறது.
அதேநேரத்தில், பகுத்தறிவு, சுயமரியாதை, தன்மானம் இவற்றை வளர்த்துக் கொள்வதற்கும், இளைஞர் உலகம் குறிக்கோளோடு வாழவேண்டும், வாழ்க்கையை நடத்தவேண்டும் என்பதற்கான கொள்கையைச் சொல்லிக் கொடுக்கின்ற பாசறையாகவும் இது அமைந்திருக்கின்றது. அதற்காக இங்கே வந்திருக்கின்றோம்.
இதற்கு எல்லா தரப்பினரும் ஒத்துழைப்புக் கொடுத்தனர், கட்சி வேறுபாடில்லாமல். இந்தப் பகுதியில் பயிற்சிப் பட்டறை என்பது இதுதான் முதல் முறை என்று சொல்லும்பொழுது, அவர்களே எங்களை வரவேற்று, அன்போடு உபசரித்தனர்!
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *