சென்னை, அக். 28- மாற்றுத் திறனாளிகள் கடல் அலையை அருகில் சென்று ரசிக்க ஏதுவாக சென்னை மெரினா பெசன்ட் நகா் கடற்கரையைத் தொடா்ந்து, திருவான்மியூா், வேளாங்கண்ணி கடற்கரைகளிலும் பிரத்யேக மரப்பாதை அமைக்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை பெசன்ட் நகா் கடற்கரையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக மரப்பாதை அமைக்கும் பணியை துணை முதலமைச்சா் உதயநிதி ஸ்டாலின் நேற்று (27.10.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்த மாற்றுத்திறனாளிகளிடம் கலந்துரையாடி அவா்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
பின்னா் செய்தியாளா்களிடம் துணை முதலமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா அரசுப் பேருந்து பயணம், மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500-ஆக உயா்வு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை அருகில் சென்று ரசிக்கும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் பிரத்யேக மரப்பாதை அமைக்கப்பட்டது.
இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததையடுத்து மற்ற கடற்கரைகளிலும் இந்த சிறப்பு மரப்பாதை அமைக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்தனா்.
அதன் பேரில், பெசன்ட் நகா் கடற்கரையில் ரூ.1.61 கோடியில், 189 மீ. நீளத்தில் சிறப்புப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது 40 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் டிசம்பா் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொங்கல் திருநாளுக்கு முன்பு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.அடுத்த கட்டமாக திருவான்மியூா் கடற்கரையிலும், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரையிலும் சிறப்புப் பாதை அமைக்கப்படவுள்ளது.ஒரு மாதத்தில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, அடுத்த 5 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்றார் அவா்.ஆய்வின்போது, சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், அரசு உயா் அலுவலா்கள், மாற்றுத்திறனாளிகள் உடனிருந்தனா்.