திராவிடர் இயக்கம் மணல் மேடல்ல; கற்கோட்டை
தலைமுறை தலைமுறையாக நம் இனத்தின் மானத்தைக் காப்பது திராவிடர் இயக்கம்தான்!
கோபி, அக்.28 ‘‘திராவிடர் இயக்கம் மணல் மேடல்ல, கற்கோட்டை” என்று பிரகடனம் செய்து உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கோபிசெட்டிபாளையம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும், ‘‘சாமி கைவல்யம் தொண்டறச் சிறப்பு” நூல் வெளியீட்டு விழா பொதுக்கூட்டம் நேற்று (27.10.2024) மாலை 6 மணிக்கு தூக்கநாயக்கன் பாளையம் அண்ணா சிலை அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சென்னியப்பன் தலைமையேற்று உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கோபி குணசேகரன் அனை வரையும் வரவேற்றுப் பேசினார். தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு சண்முகம், பொதுக்குழு உறுப்பி னர் யோகானந்தம், ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார், மாவட்டக் காப்பாளர் சிவலிங்கம் முன்னிலை ஏற்றுச் சிறப்பித்தனர். தி.மு.க. ஒன்றிய செயலாளர் உரையாற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் எழில் அரசு நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். நிகழ்ச்சி தொடங்கும் முன் திண்டுக்கல் ஈட்டி கணேசன் அவர்களின் ‘மந்திரமா? தந்திரமா?’ நிகழ்ச்சி நடைபெற்றது.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழக துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார், ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நல்லசிவம், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்.வி.சரவணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் சிவபாலன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், தி.மு.க.மாவட்ட அவைத்தலைவர் பெருமாள்சாமி, மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டி.கே.சுப்பிரமணியம், குருசாமி, மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஜம்பு (எ) கே.கே.சண்முகம், காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினர் உதயகுமரன், பேரூராட்சி மன்றத் தலைவர் டி.எம்.சிவராஜ், வாணிப்புத்தூர் பேரூர் கழகச் செயலாளர் சேகர் (எ) கே.எஸ்.பழனிசாமி, தி.மு.க. ஒன்றிய அவைத்தலைவர் டி.கே.எஸ்.கருப்புசாமி, தமிழர் உரிமைக்கழகம் கோபி கந்தசாமி, பேரூராட்சி துணைத் தலைவர் டி.பி.கருப்புசாமி, சி.பி.அய். மாவட்டச் செயலாளர் மாதேஸ்வரன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் குப்புசாமி, ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் பொன்னுசாமி, புரட்சிகர இளைஞர் முன்னணி தாமரைக்கண்ணன், சத்தியமங்கலம் நகர்மன்ற தலைவர் ஜானகி ராமசாமி, தலைமைக்கழக அமைப்பாளர்கள் ஊமை ஜெயராமன், ஆத்தூர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
முன்னதாக சாமி கைவல்யம் தொண்டறச் சிறப்பு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் நல்லசிவம் வெளியிட, சத்தியமங்கலம் நகர்மன்றத் தலைவர் ஜானகிராமசாமி முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள், கழகத் தோழர்கள், மற்றவர்கள் நூல்களை பெற்றுக்கொண்டனர். தி.மு.க. ஒன்றிய செயலாளர் சிவபாலன் 100 புத்தகங்களை தமிழர் தலைவரிடம் பெற்றுக்கொண்டார். சாமி கைவல்யம் குடும்பத்தினரான சுரேஷ் கைவல்யம், மனோகர் கைவல்யம், ரவி கைவல்யம் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சிறப்பு செய்தார். தொடர்ந்து மனோகர் கைவல்யம் குடும்பத்தினர் சார்பில் உரையாற்றினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
நிறைவாக ஆசிரியர் உரையாற்றினார். திராவிடர் இயக்கத்திற்கு இரண்டு வகையான உறவுகள் உண்டு என்று தொடங்கி, ஒன்று குருதிக் குடும்ப உறவு மற்றொன்று அதைவிட சிறப்பான கொள்கைக் குடும்ப உறவு என்று அதற்கு விளக்கம் கொடுத்துவிட்டு, சாமி கைவல்யம் குடும்பத்தினர் கொள்கை -வழியில் மேடையில் பேசியதை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.
சாமி கைவல்யம் அவர்களின் கொள்ளுப் பேரன் ஆசிரியருடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்டதை நினைவு படுத்திக் கொண்டு, தலைமுறை தலைமுறை யாக நம் இனத்தின் மானத்தைக் காப்பாற்றும் இயக்கம் திராவிடர் இயக்கம் என்று முழங்கியதும் கைதட்டல்கள் காதுகளைக் கிழித்தன. அந்த எழுச்சி முடிவதற்குள், ‘‘திராவிடர் இயக்கம் மணல்மேடு அல்ல, கற்கோட்டை” என்று பிரகடனப்படுத்தி எழுச்சிக்கு இன்னும் கொஞ்சம் துணை செய்தார்.
சாமி கைவல்யம் அவர்களின் சிறப்பைச் சொல்ல வந்தவர், அவரின் ஒரு கட்டுரையைப் படித்தாலே நூறு புத்தகங்களைப் படிப்பதற்கு இணையானது என்றார். உள்ளூர் வாசிகள் மகிழ்ச்சியை கைதட்டல்கள் மூலம் வெளிப்படுத்தினர். ஆசிரியர் பற்றி மற்றவர்கள் பேசும் போது அவரின் வயதை நினைவு கூர்ந்து பேசியதை சுட்டிக் காட்டியவர், நீங்கள் பேசும் போது தான் எனக்கு வயது நினைவுக்கு வருகிறது. ஆனால், இங்கு அதற்கு ஒரு பலன் இருக்கிறது என்று பூடகமாகச் சொல்லி, நான் மாணவர் பருவத்தில் இருக்கும் போது ‘குடிஅரசு’ அலுவலகத்தில் சாமி கைவல்யம் அமர்ந்து எழுதிக்கொண்டிருப்பதை நான் நேரில் கண்டிருக்கிறேன் என்று அதற்கு விளக்கமும் கொடுத்தார்.
சாமி கைவல்யம் எழுத்துகள்
நமக்கு ஆயுதங்களாக இருக்கின்றன
மேலும் அவர் நீண்ட காலமாக நடந்துகொண்டி ருக்கின்ற ஆரியர் – திராவிடர் போரை நினைவு கூர்ந்து, போர் நடக்கும்; அதற்கு களங்கள் இருக்கும்; களத்திற்கு ஆயுதங்கள் தேவை; அந்த ஆயுதங்களை தயாரிப்பதற்கு தொழிற்சாலைகள் இருக்கும்; அந்தத் தயாரிப்புகள் தான் ஆயுதங்களாக விளங்கும். அப்படித்தான் சாமி கைவல்யம் எழுத்துகள் நமக்கு ஆயுதங்களாக இருக்கின்றன என்று உவமித்து, அவரின் சிறப்பை மக்களுக்கு உணர்த்தினார்.
தொடர்ந்து திராவிடர் இயக்கத்தின் சிறப்புகளை இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சி வரை எடுத்துரைத்தார். அம்பேத்கர் செய்ய முடியாததை திராவிடர் இயக்கம் செய்ததை எடுத்துக்காட்டிப் பேசினார். மேலும் அவர், ஏன் திராவிடர் இயக்கம் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது? என்று கேட்டு, எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்கு, பஞ்சமருக்கு, பெண்களுக்கு கல்வியைக் கொடுக்காதே என்று மனுதர்மம் சொல்கிறது. அதனடிப்படையில் தான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது. அதை மாற்றத்தான் என்று சொல்லி தனது உரையை நிறைவு செய்தார்.
நிகழ்ச்சியை ஏராளமான உள்ளூர் கழகத் தோழர்கள் மற்றும் அனைத்துக் கட்சியைச் சார்ந்த தோழர்களும், பொதுமக்களும் கூட்டத்திற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை அடைத்துக்கொள்ளும் அளவுக்குத் திரண்டு வந்திருந்து நிகழ்ச்சி முடியும் வரையில் காத்திருந்து கருத்துகளை செவிமடுத்துத் திரும்பினர்.
நிகழ்ச்சி கோபி கழக மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சென்னியப்பன் தலைமையில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பி டத்தக்கது.