கோபி கழக மாவட்டத்தில் பழங்குடியினர் வசிக்கக்கூடிய மாவநத்தம் என்ற சிறு கிராமத்திற்கு நேற்று (26.10.2024) இரவு 7.30 மணி அளவில் சென்றடைந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர்.
மலைப்பகுதியில் வாழக்கூடிய மக்களின் குறைகளை பொறுமையாக கேட்டு அறிந்து அவர்கள் அளித்த மனுவையும் பெற்றுக் கொண்டார்.
இந்த கிராமத்தில் 88 குடும்பங்கள் வசித்து வருவ தாகவும், அன்றாட கூலி வேலைக்குச் சென்றும், விவசாய பணிகளை மேற்கொண்டும் குடும்பத்தை நடத்தி வருவதாக ஊராட்சி செயலாளராக இருக்கக்கூடிய சிவமூர்த்தி, கழகத் தலைவரிடம் விரிவாக விளக்கினார்.
அதனைத் தொடர்ந்து ஏறத்தாழ பழங்குடியினர் சமூகத்தினர் 38 பிரிவுகளாக பட்டியலிடப்பட்டு அவர்கள் இருப்பதாகவும், அதில் பல பிரிவுகள் இன்று இல்லை என்றும் எடுத்துரைத்தனர். இதில் நான்கு பிரிவினர் சோழக பழங்குடியினரும் என்று குறிப்பிடுகின்றனர்.
இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் பழங்குடியின ஊராளி என்ற பிரிவைச் சார்ந்தவர்கள் என்றும், எங்களுடைய பேச்சு வழக்கு மொழி, எழுத்து வடிவில் இருக்காது என்றும் தெரிவித்தனர்.
கிராம மக்களின் கோரிக்கைகள்!
பல்வேறு நலத்திட்டங்களை அரசு செய்து கொடுத்திருந்தாலும் இன்னும் தேவையான சில அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று சில கோரிக்கைகளை முன் வைத்தனர்.
குறிப்பாக பள்ளி நேரத்தில் மாணவர்கள் சென்று வருவதற்கு அரசு உரிய முறையில் பேருந்து வசதி யினை ஏற்படுத்தி தர வேண்டி வேண்டினர்.
மலைவாழ் கிராமத்தில் பள்ளிக்கூடம் செல்லாத மாணவர்கள் என்று யாரும் இல்லை என்றும், கல்வி மட்டுமே நம்மை உயர்த்தும் என்பதை உணர்ந்து, இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்கள் கூட விடுதியில் தங்கி படிக்கக்கூடிய நிலையும் இருந்து வருகிறது என்று குறிப்பிட்டனர்.
ராகுல் என்ற எட்டாம் வகுப்பு மாணவன் உணர்ச்சி பொங்க, ‘‘அய்யா நான் பள்ளி செல்ல வேண்டும்; பேருந்து வசதி ஏற்படுத்தித் தர உதவுங்கள்” என்று கண்கலங்கி கூறினான்.
சிறு சிறு மாணவிகள் கூட, ‘‘நான் விடுதியில் தங்கி படிக்கிறேன்’’ என்று கூறியவுடன், கழகத் தலைவர் உணவு மற்றவை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கேட்டார்; சரியாக இருக்கிறது என்று கூறினார்கள்.
மலைவாழ் பகுதி மக்களாக இருந்தாலும், நானோ டெக்னாலஜி தொடங்கி இயற்பியல், வேதியியல், பொறியியல் அடங்கிய பல்வேறு படிப்புகளைப் படித்திருக்கிறோம். ஆனால், எங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார்கள்.
அரசின் கவனத்திற்கு கட்டாயமாக எடுத்துச் செல்கிறேன் என்று அவர்களுக்குக் கனிவாக பதில் சொன்னார் தமிழர் தலைவர்.
‘‘கருநாடக மாநில அரசு, எங்களைப் போன்ற மக்களுக்கு உணவு தொகுப்பு என்று சொல்லக்கூடிய வகையில் தானியங்கள் அடங்கிய ஒரு பையினை அம்மாநில அரசு மக்களுக்கு வழங்கி வருகிறது. அது போலவே எங்களுக்கும் கிடைக்க வழிவகை செய்து தர வேண்டும்’’ என கோரிக்கை வைத்தனர் அக்கிராம மக்கள்.