சென்னை, அக். 26- மாற்றுத் திறனாளிகளுக்காக சேவை புரிந்தவர்களுக்காக 10 பிரிவுகளில் 22 விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுக்கு தகுதியானவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுறுத்தியுள்ளார்.
உலக மாற்றுத் திறனாளிகள் நாள் வரும் டிச.3ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு நடைபெறும் விழாவில், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாகப் பணிபுரிந்தவர்கள், நிறுவனங்களுக்கு மாநில விருதுகள் வழங்கப்பட உள்ளன. அந்த வகையில், சிறந்த பணியாளர், சுயதொழில் புரிபவர் பிரிவில் 10 விருதுகளும், ஹெலன் கெல்லர் விருது பிரிவில் 2 விருதுகளும், சிறந்த ஆசிரியர், சிறந்த சமூகப்பணியாளர், மாற்றுத் திறனாளிகளுக்கு சேவைபுரிந்த தொண்டு நிறுவனம், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனம், ஆரம்ப நிலை பயிற்சி மய்யங்களில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர் ஆகிய பிரிவுகளில் தலா ஒரு விருதும், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாகப் பணியாற்றிய ஓட்டுநர், நடத்துநர், பொதுக் கட்டடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடையற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பிரிவு ஆகிய பிரிவுகளில் தலா 2 விருதுகள் என மொத்தம் 22 விருதுகள் வழங்கப்பட உள்ளன.
விருதுடன் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுக்கு தகுதியானவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் https://awards.tn.gov.in என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை வட சென்னை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் வழங்க சென்னை மாவட்ட ஆசியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
போக்சோ வழக்குகள்: காவல்துறை பெண் ஆய்வாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி
சென்னை, அக். 26- போக்சோ வழக்குகளில் புலன் விசாரணையின்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து, மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு 2 நாள் சிறப்புப் பயிற்சி வகுப்பு வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்பை, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் ராதிகா தொடங்கி வைத்தார். இதில், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி பேராசிரியர் மருத்துவர் மணிகண்ட ராஜூ கலந்துகொண்டு ‘போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கைது செய்யப் பட்டவர்களிடமிருந்து மருத்துவ மாதிரிகளை எவ்வாறு சேகரித்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும், வழக்குக்கு தேவையான கேள்விகள் எவ்வாறு இருக்க வேண்டும்?’ என்பது குறித்து விளக்கமளித்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய தடய அறிவியல் துறை உதவி இயக்குநர் மருத்துவர் சி.பவானி, ‘போக்சோ வழக்குகளில் சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்ற வேண்டிய தடயங்களை எவ்வாறு சேகரிக்க வேண்டும், சேகரித்ததை எவ்வாறு தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்ப வேண்டும்’’ என்பது பற்றி எடுத்துக் கூறினார்.
போக்சோ சிறப்பு நீதிமன்ற அரசு வழக்குரைஞர் அனிதா, புலன் விசாரணை அதிகாரி கையாள வேண்டிய சட்ட விதிமுறைகள் மற்றும் குற்றவாளி களுக்கு விரைவாக தண்டனை பெற்றுக் கொடுக்க காவல் துறையினர் செய்ய வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.மேலும், பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு எவ்வாறு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கொடுப்பது, குழந்தைகளின் எதிர்கால நலன் குறித்தும் எடுத்துரைக் கப்பட்டது.
தி.மு.க. மீது அவதூறு
எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு!
சென்னை, அக். 26- தி.மு.க. அமைப்புச் செயலாளர் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்குடன் தி.மு.க.வை இணைத்து எக்ஸ் வலைதளத்தில் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ரூ.1 கோடி மான நட்டஈடு கோரி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில்; போதைப்பொருள் பறிமுதல், கைது தொடர்பான சமீப நிகழ்வுகளில் தி.மு.க.-வை தொடர்புபடுத்தி பேசியதாகவும், தி.மு.க. கட்சியின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எக்ஸ் வலைதள பக்கத்தில் உள்ள பதிவுகளை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தி.மு.க.-வை தொடர்புபடுத்தி பேச அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்கவும், ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது; வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.