தமிழர்களின் பண்டிகையா தீபாவளி?

Viduthalai
3 Min Read

தீபாவளி குறித்து பெரியார் கேட்ட கேள்விகளுக்கு இன்று வரை பதில் இல்லை.
அது என்னென்ன கேள்விகள்?

தீபாவளி என்றால் என்ன?
(புராணம் கூறுவது)
1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக்கொண்டுபோய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு மீண்டும் வந்து விரித்தார்.
3. விரித்த உலகம்(பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.
4. ஆசைக்கு இணங்கி பன்றி(விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று, நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6. அந்தப் பிள்ளை (நரகாசூரன்) தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு, நரகாசூரனுடன் போர் துவங்கினார்.
8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.
9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
10. இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.
இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!

இந்த 10 விஷயங்கள்தான் தமிழனைத் தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல். வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம், இக்கதை எழுதிய ஆரியர்களுக்கு பூமியைப்பற்றி நூல் கூடத் தெரியவில்லை என்றுதானே கருத வேண்டியிருக்கிறது?
1. பூமி தட்டையா? உருண்டையா?
2. தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா?
3. எங்கு நின்று கொண்டு சுருட்டுவது?
4. சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலைமீதோ எடுத்து ஏக முடியுமா?
5. எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின் கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்?
6. விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?
7. அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்குப் பன்றி மீது காதல் ஏற்படுவானேன்?
8. பூமி மனித உருவா? மிருக உருவமா?
9. மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா?
10. பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடையவேண்டும். இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப்புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா?
(பெரியார் எழுதிய இந்து மதப் பண்டிகைகள் என்னும் நூலில் இருந்து)

அசுரர் என்றாலே ஆரிய பார்ப்பனர்கள் கூற்றுப்படி திராவிடர்களே!
மத்திய ஆசியாவிலிருந்து ஆடுமாடுகளை ஒட்டிக்கொண்டு புல்தரைகளை தேடி இந்தியாவிற்கு பிழைப்பு தேடி வந்த நாடற்ற நாடோடி பார்ப்பனர்கள் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு (உயர்ந்த நாகரிகத்திற்கு) சொந்தக்காரர்களான திராவிடர்களை அடிமைப்படுத்திட, இழிவுபடுத்திட சூழ்ச்சியாலும் வஞ்சகத்தாலும் வெற்றி பெற பொய் புராணக் கட்டுக்கதைகளை உருவாக்கி திராவிடர்களை அரக்கர்கள், அசுரர்கள் என சித்தரித்து பார்ப்பனர்களை(தேவர்களை) எதிர்த்து போரிட்ட திராவிட மன்னனான நரகாசுரன் இறந்த நாளை மகிழ்ச்சியான நாளாக (தீபாவளி) திராவிடர்களையே கொண்டாடும்படி செய்தனர்.
அறிவுக்கு (அறிவியலுக்கு) பொருந்தாத நம்மை இழிவுபடுத்தும் கட்டுக்கதையை நம்பி (தீபாவளியை) நாம் கொண்டாடலாமா?
திராவிடன் இறந்த நாளை மகிழ்ச்சியான நாளாக கருதி நாம் வாழ்த்துகளை பரிமாறலாமா? அறிவுக்கேடு, காற்று மாசு, ஒலி மாசு, பொருளாதார நட்டம்.
பார்ப்பனர்களின் பண்பாட்டு படையெடுப்பே தீபாவளி! திராவிடர்களே சிந்திப்பீர்! பார்ப்பனரல்லாதோரே சிந்திப்பீர்!

காஞ்சிபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துண்டறிக்கை

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *