திராவிட இயக்கம் வெறும் பதவிக்காகத் தொடங்கப்பட்டதல்ல; மனிதர்களுக்காக, மானத்திற்காக, உரிமைக்காக, எழுச்சிக்காக தொடங்கப்பட்ட இயக்கமாகும்!
‘‘திராவிட இயக்கமும் – கருப்பர் இயக்கமும்!’’ புத்தகம் ஒரு படைக்கலன்; அதன் தத்துவங்களை வீடெலாம், நாடெலாம், உலகெலாம் பரப்புங்கள்!
சென்னை, அக்.26 திராவிட இயக்கம் வெறும் பதவிக்காகத் தொடங்கப்பட்டதல்ல; மனிதர்களுக்காக, மானத்திற்காக, உரிமைக்காக, எழுச்சிக்காக தொடங்கப்பட்ட இயக்கமாகும். நம்முடைய முதலமைச்சர் அவர்களின் களப் பணியால், தமிழ்நாட்டில் ஏற்படுகின்ற கல்வி வளர்ச்சி – அதனைக் கண்டு மற்ற மாநிலங்கள் எல்லாம், ‘‘இதோ, ஒரு கற்றிடம் – அதைப் பார்த்து நாம் கற்றுக்கொண்டு போகவேண்டும் – நம்முடைய மாநிலத்திலும் நடைமுறைப்படுத்தவேண்டும்” என்று நினைக்கிறார்கள். இங்கே வெளியிடப்பட்ட ‘‘திராவிட இயக்கமும் – கருப்பர் இயக்கமும்!’’ புத்தகம் ஒரு படைக்கலன்; சரியான நேரத்தில் இந்த ஆயுதங்கள் கிடைத்திருக்கின்றன. இந்தப் படைக்கலனை, இந்தத் தத்துவங்களை வீடெலாம், நாடெலாம், உலகெலாம் பரப்புங்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘திராவிட இயக்கமும் – கருப்பர் இயக்கமும்!’’ நூல் வெளியீட்டு விழா!
நேற்று (25.10.2024) மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள் எழுதிய ‘‘திராவிட இயக்கமும் – கருப்பர் இயக்கமும்!” நூலினை திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், மாண்புமிகு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நூலினைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார். அவரது சிறப்புரை வருமாறு:
திராவிட இயக்கம் எப்படி உலக இயக்கமாக மாறியிருக்கிறது என்பதை
பிரகடனப்படுத்தப்படக் கூடிய நூல்!
எழுச்சியோடு நடைபெறக்கூடிய இந்நிகழ்ச்சியில், ‘‘திராவிட இயக்கமும் – கருப்பர் இயக்கமும்” என்ற இந்த அருமையான ஆய்வு நூல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. இது வெறும் நூல் அல்ல. இது முனைவர் பட்டத்திற்கான ஆய்வுத் தலைப்பை ஆழமாகக் கொண்டு, திராவிட இயக்கம் எப்படி உலக இயக்கமாக மாறியிருக்கிறது என்பதற்குப் பிரகடனப்படுத்தப்படக் கூடிய அளவில், ஓர் அருமையான, சிறப்பான ஆய்வு நூல் இது.
இந்தியா மட்டுமல்ல, உலகமே பின்பற்றக் கூடிய அளவிற்கு இருக்கிறது ‘திராவிட மாடல்’ ஆட்சி!
பல்கலைக் கழகங்கள் இதனை ஏற்றிருக்கின்றன. திராவிடம் என்றால், சிலருக்குக் கசக்கிறதே, குமட்டுகிறதே, அவர்களுக்குச் சொல்லுகிறோம் – திராவிடத்திலே இருக்கக் கூடியவர்கள், திராவிடத்தைச் சொல்லுபவர்கள் எல்லாம் எப்படிப்பட்டவர்கள் என்று காட்டுவதற்காகத்தான் – அதற்கு உரிய ஆழமான, அறி வார்ந்த ஓர் ஆணித்தரமான தரவுகள் நிறைந்த ஒரு நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று இருக்கக் கூடிய இந்தியாவே, ஏன் உலகமே வியந்து பார்க்கக் கூடிய எங்கள் பெருமைக்குரிய திராவிட நாயகர் – திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என்பதற்கு அடையாளமாக, இதோ எங்கள் ‘திராவிட மாடல்’ ஆட்சி இதுதான் என்று உலகம் பார்த்துப் பின்பற்றத்தகுந்த அளவிற்கு, ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்ற எங்கள் மாண்புமிகு மானமிகு முதலமைச்சர்
அவர்களே,
கொள்கைச் சுடரை, சேர்க்கவேண்டிய இடத்தில் சேர்த்திருக்கின்றோம்!
இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய, தன் பிள்ளை, தன் பெருமை என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இன்றைக்குக் கொள்கையில் மிகுந்த அளவிற்குப் போட்டி, பரிசு வைத்தால், இவருக்குத்தான் அந்தப் பரிசு – திராவிட இயக்கத்தினுடைய கொள்கையில் என்பது மட்டுமல்ல; எங்களுக்கெல்லாம் ஒரு தெம்பு – எந்த இடத்திலே அந்தச் சுடர் போய்ச் சேரவேண்டுமோ, அதை அங்கே கொண்டுபோய் சேர்த்திருக்கின்றோம். இனிமேல் எந்தக் கொம்பனும் அதை அசைத்துவிட முடியாது என்று சொல்லக்கூடிய அளவிற்கு, மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்திருக்கின்ற எங்கள் கொள்கை உதயநிதி அவர்களே,
‘‘நூலைப் படி, நூலைப் படி’’ என்று சொல்வது மட்டுமல்ல, இந்த இயக்கம் எப்படி உலகளாவிய இயக்கமாக வந்திருக்கிறது என்பதற்கான அந்த ஆய்வைப் படி என்று சொல்வதற்கு வாய்ப்பாகக் கொடுத்த எங்கள் பகுத்தறிவு வீரர், சுயமரியாதை வீரர், இந்தத் தாய்க்கழகத்தின் மூலமாக தரணியிலே கொள்கையைப் பரப்பிக் கொண்டிருக்கின்றார் எங்கள் சகோதரர் மாண்புமிகு உதயநிதி அவர்கள்.
எப்பொழுதும் ஆழமாக, தெளிவாகத் தெரிந்து, இந்த இயக்கத்திற்கு நல்ல அருமையான நிதியமாகக் கிடைத்திருக்கின்ற விழாவினுடைய தலைவராக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அருமைச் சகோதரர் துரைமுருகன் அவர்களே,
தெய்வசிகாமணியாக இருந்த ஒருவரை
பொன்முடியாக்கிய ஒருவன்!
எல்லாவற்றையும்விட இந்த நூலை ஆக்கியி ருக்கக் கூடியவர் – அமைச்சர் பொன்முடி அவர்கள். தெய்வசிகாமணியாக இருந்த ஒருவரை பொன்முடியாக்கிய ஒருவன் அந்த நூலைப் பெற்றுக் கொண்டி ருக்கின்றேன்.
பெற்றுக்கொடுத்தவர்கள் நாங்கள், தி.மு.க. விற்கு. ‘‘நீ இதைப் பெற்றுக்கொள்” என்று முதலமைச்சர் அவர்கள் திரும்ப இந்த ஆய்வு புத்தகத்தைக் கொடுத்திருக்கின்றார்கள்.
இந்நூலை அருமையாக மொழி பெயர்த்த அருமைச் சகோதரர் அவர்களே!
சுப.குணராஜன் அவர்கள் எப்பொழுதும் திராவிடத்தி னுடைய கலைத்துறையில் ஒளிரக்கூடிய நல்ல ஆய்வாளர்.
மாண்புமிகு அமைச்சர் பெருமக்களே, அனைத்துக் கட்சித் தலைவர்களே, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களே, அனைத்து இயக்கத் தோழர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது ஓர் அற்புதமான பிரகடன விழா! திராவிட இயக்கக் கொள்கை வெற்றியினுடைய பிரகடன விழா. இது வெறும் புத்தக வெளியீட்டு விழா மட்டுமல்ல!
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், ‘‘நூலைப் படி, நூலைப்படி” என்று நீண்ட நாள்களுக்கு முன்பு, நம்முடைய மக்களுக்குச் சொன்னார்.
நம்முடைய ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் அவர்கள், எங்களைப் பார்த்து, ‘‘நூலைப் பிடி, நூலைப் பிடி, நூலைப் பிடி” என்று கையில் கொடுத்தார்.
அவர் சொன்னபடிதான், நாங்கள் எப்பொழுதும் ‘‘நூலைப் பிடித்துக் கொண்டேயிருக்கிறோம்.”
‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்!’’
இந்த நூலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற, நம்முடைய ஒப்பற்ற நூற்றாண்டு விழா நாயகர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் வழியிலே தன்னை செதுக்கிக் கொண்டு, ‘‘ஒரே வரியிலே உங்களை விமர்சித்துக் கொள்ளுங்கள்” என்று கேட்டபொழுது, ‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்” என்று சொன்ன கலைஞர் அவர்கள், ஆங்கிலத்தில் இருந்த இந்த நூலுக்கு அணிந்துரை கொடுத்திருக்கிறார்.
அந்த அணிந்துரை என்பது சாதாரணமானதல்ல. உங்களுக்கெல்லாம் தெரியும், கலைஞர் அவர்கள் எந்தப் புத்தகத்தையும் எளிதில் படித்து முடித்து விடுவார். அதுமட்டுமல்ல, எதை, எப்பொழுது சுட்டிக் காட்டவேண்டுமோ, அப்படி அருமையாகச் சுட்டிக்காட்டுவார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அணிந்துரை!
அந்த வகையில் நண்பர்களே, இந்த நூலில் கலைஞர் அவர்களின் அணிந்துரையை அப்படியே தருகிறோம்:
‘‘திராவிட இயக்கமும் கருப்பினத்தவர் இயக்கமும்” என்ற ஆய்வில் முனைவர் க.பொன்முடி அவர்கள் மிகவும் முயற்சியெடுத்து, பல புத்தகங்களை ஆராய்ந்து, தான் கண்டடைந்த முடிவுகளை முறையாக எழுதியுள்ளார் என்பது தெளிவுறத் தெரிகிறது. இந்தியாவின் திராவிட இயக்கம், அமெரிக்காவின் கருப்பினத்தவர் இயக்கம் ஆகிய இருபெரும் சமூக இயக்கங்கள், பார்ப்பனரல்லாதோரும் கருப்பினத்தவரும் நீண்டகாலமாக சமூக-கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல்ரீதியிலான ஓதுக்கப்படுதலால் பாதிக்கப்பட்டதன் விளைவாகத் தோன்றி யவை. இந்த இரண்டு இயக்கங்களும் வர லாற்றுப்பூர்வமானவை, வரலாறாக நிற்பவை. முனைவர் பொன்முடி இந்நூலில் இவ்விரு இயக்கங்களின் தோற்றம், வளர்ச்சி, அவை தத்தமது இலக்குகளை அடைந்த விதம் ஆகியவற்றை விவரிக்கிறார். இந்த இரண்டு இயக்கங்களை ஒப்பிட்டு ஆய்வாக முன்வைத்துள்ள அவர் தனது ஒப்பீட்டில் அவற்றின் பரிமாணங்களையும், தொலைநோக்குகளையும் ஆழ ஆராய்ந்துள்ளார். தனது ஆய்வேட்டின் முடிவில் அவர் தொடர் ஆராய்ச்சிக்கான வழிகாட்டுதல்களையும் வழங்கி யுள்ளார். அவை கருத்தைக் கவர்வனவாகவும் அறிவார்ந்தனவாகவும் அமைந்துள்ளன. அவர் தனது ஆய்வை மிக நேர்மையாகவும், புற வயமாகவும் மேற்கொண்டுள்ளார். அவர் எடுத்துக்கொண்ட ஆய்வு வடிவம் கோட்பாட்டு வழியிலமைந்ததும், தெளிவானதுமாகும்.
முனைவர் க.பொன்முடி இந்த இரண்டு இயக்கங்களிலும் உள்ள பொதுவான, ஒப்பீட்டுக்குகந்த அம்சங்களை அழுத்தமாகப் பட்டியலிட்டுள்ளார். இரண்டு இயக்கங்களிலும் ஆதிக்கக் குழுக்களுக்கு நேர்கீழே இருந்தவர்கள், அதாவது கீழ்நிலைப்படுத்தப்பட்டக் குழுக்களின் மேல்தட்டினர், தாங்கள் ஒதுக்கப்பட்டதாக உணர்ந்து இயக்கங்களைத் தோற்றுவித்தனர் அல்லது அவற்றில் இணைந்தனர்.
கீழ்நிலைப்படுத்தப்பட்டக் குழுக்களில் ஒதுக்கப்பட்ட நபர்களிடையேயான உரையாடல் மூலமும், தொடர்பாடல் மூலமும் இயக்கங்களின் கொள்கைகள் உருவாயின. இந்த இரு சமூகக் குழுக்களும் சமூகத்தில் அவர்களது தாழ்நிலைக்கு ஆதிக்கக் குழுக்களே காரணம் என்று கண்டறிந்தன. இரண்டு இயக்கங்களும் வரலாற்றை மறுவிளக்கம் செய்வதன் மூலமும், ஒப்பீட்டுக் குழுக்களை மறுவரையறை செய்வதன் மூலமும் தங்களது உறுப்பினர்களுக்கென தனித்துவமான ஓர் அடையாளத்தை உருவாக்கின. இவ்விரு இயக்கங்களின் அமைப்பாக்கமும், அவற்றின் சூழலுக்கான எதிர்வினையாக வெளிப்பட்டன. இரு அமைப்புகளும் கொள்கைகள், மாநாடுகள், நேரடிச் செயல்திட்டங்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் போன்ற அமைப்புசார் செயல்பாடுகள் மூலம் தங்களது உறுப்பினர்களை ஒருங்கிணைத்தன. இரண்டு அமைப்புகளிலும் வசீகரமிக்க, கொள்கைசார்ந்த, நடைமுறைசார்ந்த, தலைவர்கள் அமைப்பின் இலக்குகளை அடைவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றினர்.
இந்த இயக்கங்கள் இரண்டுக்குமிடையிலான எண்ணற்ற ஒற்றுமைகளுக்கு நடுவே முனை வர் க.பொன்முடி மிகவும் நேர்த்தியாக, குறிப்பிட்ட சில மாறுபட்ட காரணிகளையும் அடையாளம் கண்டுள்ளார். திராவிட இயக்கம் பகுத்தறிவுவாதத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கையில், கருப்பினத்தவர் இயக்கமோ மதத்தை நம்புகிறது. திராவிட இயக்கம் “எதிர்ப்பரசியல்” அல்லது நேரடி நடவடிக்கையை நாடியது, கருப்பினத்தவர் இயக்கமோ “ஒழுங்கமைவு அரசியலில்” நம்பிக்கை வைத்தது.
முனைவர் க.பொன்முடியின் குறிப்பிடத்தக்க, அற்புதமான இந்த ஆய்வேடு நிகழ்காலத்துக்கு மட்டுமல்ல வருங்கால தலைமுறையினருக்குமான பயனுள்ள தகவல்களின் கருவூலமாக அமைந்துள்ளது. பயன்மிக்கதும், ஆழ்ந்த பொருளு டையதுமான இந்த ஆராய்ச்சிப் பணிக்காக முனைவர் க.பொன்முடி பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் உரியவராகிறார். ஒரு மூத்த உடன்பிறப்பாக அவரைக் குறித்தும், அவரது மிகச்சிறந்த, ஒளிபாய்ச்சும் இந்த ஆய்வு குறித்தும் நான் மிகவும் பெருமைகொள்கிறேன். அவருக்கு என் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்” என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தன் அணிந்துரையில் எழுதியுள்ளார்.
திராவிடம் என்பது ஒரு பண்பாடு – பண்பாட்டு உரிமை!
இதுதான் திராவிடம். திராவிடம் என்பது வேறொன்று மில்லை. திராவிடம் என்பது ஒரு பண்பாடு. இது பண்பாட்டு உரிமை. இந்த இயக்கம் இனவெறி இயக்கம் அல்ல. இதற்கும் ஆதாரம் சொல்லவேண்டுமானால், இன்னொன்றை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டவேண்டும்.
கலைஞர் அவர்களைப்பற்றி புத்தகம் வெளியிட்டது ‘இந்து’ பத்திரிகை. ‘‘தெற்கிலிருந்து சூரியன்” என்ற அந்த நூலை எழுதியவர் மிக முக்கியமான ஒரு ஆய்வாளர், சமூகவியல் அறிஞர் டி.ஜே.எஸ்.ஜார்ஜ் என்பவர்தான். அவர் ஒரு மூத்த பத்திரிகையாளர்.
அந்த மூத்த பத்திரிகையாளரிடம் ‘‘இந்து பத்திரிகையினுடைய ‘‘இந்து தமிழ்த்திசை’’ ஏட்டினர் கட்டுரைகளை வாங்கி வெளியிட்டனர். அக்கட்டுரைகளில் கலைஞருடைய பெருமைகளைப்பற்றியும், திராவிட இயக்கத்தைப்பற்றியும் அவர் எழுதினார்.
‘‘தெற்கிலிருந்து சூரியன்’’ நூலிலிருந்து….
அதில் ஒரு பகுதியில் சொல்லியிருக்கிறார்.
இன்றைக்குத் திராவிடம் என்பதைத் திசை திருப்பவேண்டும்; திராவிடம் என்பது உகந்ததல்ல; அது ஒவ்வாமையால் வந்தது – அது கற்பனை என்றெல்லாம் இன்றைக்குப் பொறுப்பற்று பேசுகிற அரைவேக்காடுகள் எங்கே இருந்தாலும், எந்த இடத்தில் இருந்தாலும், இது நம்முடைய பதில் அல்ல.
நானோ, முதலமைச்சர் அவர்களோ, துணை முதலமைச்சர் அவர்களோ, துரைமுருகன் அவர்களோ, பொன்முடி அவர்களோ கூறுவது அல்ல.
தொலைநோக்கோடு சொல்கிறார் டி.ஜே.எஸ்.ஜார்ஜ்.
‘‘நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்” பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையின் ஒரு பகுதியை மட்டும் சொல்கிறேன்.
பெரியார் அற்புதமான சிந்தனையாளர்!
‘‘1916 ஆம் ஆண்டில் நீதிக்கட்சி உருவாகிய பிறகு, உருவான திராவிட இயக்கம், இயல்பாக ஓர் இன வெறி இயக்கமாக மாறியிருக்க முடியும். மாறாக, அது தமிழ் மொழி, பண்பாடு, சமூகநீதி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தந்து, ஒரு கலாச்சார இயக்கமாக வலுப்பெற்றது. அதற்கான காரணம் இதுதான்! திராவிடர் கழகத்துக்கு ரத்தத்தையும், சதையையும் வழங்கிய கலாச்சார அடையாளங்கள் – திரிமூர்த்திகளான பெரியார் – அண்ணா – கருணாநிதி ஆகியோர்.
பெரியார் அற்புதமான சிந்தனையாளர்; அவரது புதுமையான கருத்துருக்கள் அவரை உலக வரலாற்றின் அறிஞர்கள் வரிசையில் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. வேறு கால கட்டத்தில் -வேறு சூழலில், அவர் உலக சீர்திருத்தவாதியாகக் கூட கொண்டாடப்பட்டு இருப்பார். சுதந்திரப் போராட்டத்திற்கு முந்தைய காலமாக இருந்ததாலும், தமிழ்நாட்டின் பின்னணி காரணமாகவும் அவர் மாநிலத்துக்குள்ளேயே முடக்கப்பட்டார். அண்ணாவும், கருணாநிதியும் தரம் வாய்ந்த எழுத்தாளர்கள். சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு திராவிட இயக்கத்துக்கு உரம் ஏற்றியதற்கு அவர்களைத்தான் பாராட்ட வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார்.
ஒரு நல்ல படைக்கலன் நமக்குக் கிடைத்திருக்கின்றது!
எனவே நண்பர்களே, இந்த நூல் ஓர் அற்புதமான அறிவாயுதம். கருத்தியல் போரை நாம் நடத்திக் கொண்டி ருக்கின்ற காலகட்டத்தில், ஒரு நல்ல படைக்கலன் நமக்குக் கிடைத்திருக்கின்றது.
கருப்பின்மீதிருந்த வெறுப்பு மாறி,
விருப்பு வளர்ந்திருக்கின்றது!
கருப்பினம் என்று சொல்லுகின்ற நேரத்தில், தலைமை வகித்த அமைச்சர் துரைமுருகன் அவர்கள் அழகாகச் சொன்னார்; ஒரு காலத்தில் ‘நீக்ரோ’ என்ற சொல்லை சாதாரணமாகப் பயன்படுத்தினார்கள். ஆனால், இன்றைக்கு யாரும் அந்த வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது; பயன்படுத்தவும் அனுமதிக்க மாட்டார்கள். இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மாறி, கருப்பர்கள் என்று சொல்வது ஒரு காலத்தில் கொச்சைப்படுத்தப்பட்ட ஒரு வார்த்தை என்பது மாற்றப்பட்டு, ‘‘பிளாக் இஸ் பியூட்டிபுல்” என்று சொல்லக்கூடிய அளவிற்கு, ‘‘கருப்புதான் எனக்குப் பிடித்த கலரு” என்று எல்லோரும் சொல்லக்கூடிய அளவிற்கு, கருப்பின்மீதிருந்த வெறுப்பு மாறி, விருப்பு வளர்ந்திருக்கின்றது என்று சொன்னால், திராவிட இயக்கத்திற்கும், அந்த வரலாற்றுக்கும் மிக முக்கியமான பொருத்தம் உண்டு.
இதற்கு என்ன காரணம்?
தலைமுறை தலைமுறையாக அது வந்திருக்கிறது. நேற்று பெய்த மழையில், இன்று முளைத்த காளான் அல்ல. இது ஆயிரங்காலத்துப் பயிராகும்.
நேற்று வந்து, இன்று ஆட்டம் போடுகின்றவர்கள்; அல்லது ஊடக விளம்பர வெளிச்சங்களைப் பெற்றுக் கொண்டிருக்கின்றவர்களுக்குச் சொல்லுகிறோம்; இந்த இயக்கம் பல வரலாறுகளைக் கண்டது. உலக இயக்கமாக – உலகத் தலைவர்களாக இவர்கள் உயர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு நிகழ்வை இங்கே சொல்லவேண்டும்.
சரசுவதி என்ற ஓர் அம்மையார், பெரியார் திடலில் உள்ள ‘விடுதலை’ அலுவலகத்திற்கு வந்து, ஆய்வுக்கான வரலாறுகளைத் தெரிந்துகொள்வதற்காக ‘விடுதலை’ ஏடுகளையெல்லாம் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது தந்தை பெரியார் அவர்கள், ‘‘ஆசிரியர் எங்கே இருக்கிறார், அவரைக் கூப்பிடுங்கள்” என்று சொல்லியனுப்பினார்.
கொஞ்ச நேரத்தில் நான் சென்றேன்.
‘‘என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?” என்று தந்தை பெரியார் அவர்கள் கேட்டார்.
‘‘இதுபோதும்; இதுபோதும்” என்று
மகிழ்ச்சியாக சொன்னார் தந்தை பெரியார்!
‘‘அய்யா, சரசுவதி என்ற ஓர் அம்மையார், சென்னை பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்கிறார். திராவிட இயக்கத்தைப்பற்றியும், அதனுடைய பணிகள் எப்படி ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கப் பயன்படுகிறது என்பதைப்பற்றி ஆய்வு செய்கிறார்” என்று நான் சொன்னேன்.
ஒரு நிமிடம் அமைதியான தந்தை பெரியார் அவர்கள், ‘‘நம்முடைய இயக்கத்தைப்பற்றி பல்கலைக் கழகங்கள் ஆய்வு செய்கின்ற அளவிற்கு வந்துவிட்டோமா? ரொம்ப மகிழ்ச்சி – இதுபோதும்; இதுபோதும்” என்று மகிழ்ச்சியாக சொன்னார்.
முதலில் நம்முடைய கருத்துகளைக் கேட்க வைப்பதற்கே பாடுபட்டோம். கேட்க வைத்தோம், பிறகு சிந்திக்க வைத்தோம். பிறகுதான் போராட வைத்தோம். இன்றைக்கு மற்றவர்கள் எல்லாம் அஞ்சக்கூடிய அளவிற்கு இந்த இயக்கம் வளர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்திய அளவிலே; இந்திய அளவிலே மட்டுமல்ல, உலகளவில் வந்திருக்கிறது என்றால், அதற்குக் காரணம், இங்கே அமர்ந்திருக்கின்ற நான்காவது தலைமுறை, அய்ந்தாவது தலைமுறையான எங்களுடைய ஆற்றல்மிகு தலைவர்கள்தான்.
கல்வியில் சாதனை படைத்த
‘திராவிட மாடல்’ ஆட்சி!
‘திராவிட மாடல்’ ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சி யைத் திறந்தால் நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள். கல்வியில் சாதனை, நம்முடைய முதலமைச்சர் அதனைப் பெருமிதத்தோடு சொல்கிறார்.
இந்திய நாட்டிலே, வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சாதனையை தமிழ்நாட்டில் உள்ள ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் செய்திருக்கிறது கல்வித் துறையில் என்று சொன்னால், இது திடீரென்று இன்றைக்கு வந்ததா?
மனுதர்மத்தையே நாட்டின் அரசமைப்புச்
சட்டமாக்கத் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள்!
‘‘எதைக் கொடுத்தாலும் சூத்திரர்களுக்குக் கல்வியைக் கொடுக்காதே, அறிவைக் கொடுக்காதே!
படித்த சூத்திரன், குளித்த குதிரை, மதம் பிடித்த யானை ஆகிய மூன்றும் ஆபத்து” என்று மனு தர்மத்தில் எழுதி வைத்தது மட்டுமல்ல, அந்த மனுதர்மத்தையே நாட்டில் சட்டமாக ஆக்கத் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம்.
பெண்களா, படியுங்கள்!
இளைஞர்களா, படியுங்கள்!
இதற்கு வேர் எங்கே இருக்கிறது என்பதை நினைத்துப் பாருங்கள் நண்பர்களே!
இந்த நூலை வாங்கிப் படிக்கவேண்டும்; ஆய்வு செய்யவேண்டும். ஏனென்றால், இவையெல்லாம் சாதாரணமாகக் கிடைக்காது. பல நூல்களிலிருந்து ஆய்வுகளைப் பிழிந்து எடுத்துக் கொடுத்திருக்கிறார்கள். மேடையில் பேசக்கூடியவர்கள் மட்டுமல்ல, இந்த இயக்கம் எப்படி உலகளாவிய இயக்கமாக இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக ஒன்றைச் சொல்லவேண்டும்.
நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நேற்றுகூட கல்வியைப் பற்றி சொன்னபொழுது, எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.
இன்றைக்கு இந்த இயக்கம், இந்தக் கொள்கை எப்படி அறுபடாத ஒரு தொடராக வந்திருக்கிறது?
அண்ணா அவர்களைப் பார்த்து,
1967 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கின்ற நேரத்தில், செய்தியாளர்கள் அவரிடம், கட்சியைத் தொடங்கி, 10 ஆண்டுகளில் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுவிட்டீர்களே? என்று கேட்டார்கள்.
அதற்கு அண்ணா அவர்கள் பதில் சொன்னார். மற்றவர்களாக இருந்தால், மார்தட்டிப் பதில் சொல்லியிருப்பார்கள் என்றுகூட நினைக்கலாம்.
என்னுடைய பாட்டன் நீதிக்கட்சி;
அதனுடைய தொடர்ச்சிதான் தி.மு.க.!
ஆனால், அண்ணா அவர்களுடைய அடக்கம், உறுதி, தெளிவாகச் சொல்கிறார், ‘‘நாங்கள் 10 ஆண்டு காலத்தில் ஆட்சிக்கு வரவில்லை. என்னுடைய பாட்டன் நீதிக்கட்சி; அதனுடைய தொடர்ச்சிதான் இது” என்று சொல்லிவிட்டு, ‘‘நீதிக்கட்சியைக் குழிதோண்டி புதைத்துவிட்டோம் என்று சொன்னார்களே, அவர்கள் தோண்டிய குழியில், அவர்கள்தான் விழுந்தி ருக்கிறார்கள்” என்று சொன்னார்.
அதனுடைய தொடர்ச்சியாகத்தான் கலைஞர். அதனுடைய மீள் தொடர்ச்சியாகத்தான் நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சராக இன்றைக்கு இருக்கின்ற முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
மிகப்பெரிய சாதனையைச் செய்த பனகல் அரசர், நீதிக்கட்சியினுடைய வரலாறு, திராவிட இயக்கம். கல்வியில், ‘‘பிளாக்ஸ்” என்று சொல்லக்கூடிய கருப்பர் இனமும் கவனம் செலுத்தினார்கள்.
குலக்கல்வித் திட்டத்தை ஒழித்ததிலிருந்து, புதிது புதிதாக காமராஜர் மூலமாக பள்ளிக்கூடங்களைத் திறந்து, கல்லூரிகள் வந்து, கலைஞர் காலம், இப்படி வரிசையாக வந்து, இன்றைக்குப் பொற்காலமாக இருக்கக்கூடிய இந்த நேரத்தில், ஒன்றை நீங்கள் கவனிக்கவேண்டும்.
இப்படிப்பட்ட ஆய்வு நூல்கள் ஏராளமாக வரவேண்டும். அந்த ஆய்வுகளுடைய கருத்துகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
நீதிக்கட்சியினுடைய வரலாறு. நீதிக்கட்சி இயக்கம், திராவிட இயக்கம் 1916 ஆம் ஆண்டு தொடங்குகிறது. இயக்கம் தொடங்கி 9 மாதங்களிலேயே முதல் மாநாட்டினைப் போடுகிறார்கள் கோவையில்.
அந்த மாநாட்டிற்குத் தலைமை தாங்குகிறவர், பனகல் அரசர் என்று சொல்லக்கூடிய இராமராயர் நிங்கார்.
அவர் மாநாட்டுத் தலைமை உரையாற்றினார். அந்தத் தலைமை உரையைப் படித்த நேரத்தில் எனக்கு ஒரு பெரிய வியப்பு. ஏனென்றால், இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் எதைப் பேசுகிறாரோ, அதனை 1917 ஆம் ஆண்டு பனகல் அரசர் பேசியிருக்கிறார் என்றால், இந்த இயக்கம் எப்படி ஒரு தொடர் இத்துப் போகாத ஒரு வரலாற்று சங்கிலி என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
நமக்குக் கல்வியைக் கொடுக்கக் கூடாது
என்று தடுத்தார்கள்
நம்மைப் போன்றவர்கள் பிறக்காத காலத்தில், 107 ஆண்டுகளுக்கு முன்பு, திராவிட இயக்கம் எப்படி யெல்லாம் கருப்பர் இனம் தங்களுடைய எழுச்சிக்குக் கல்விதான் மிக முக்கியம் என்று நினைத்தார்களோ, அதனை எதிரிகளும் பார்த்துத்தான் கல்வியைக் கொடுக்கக் கூடாது என்று தடுத்தார்களோ, அதனை நன்றாகப் புரிந்துகொண்டதுதான் திராவிட இயக்கம்.
திராவிட இயக்கம் மானத்திற்காக, உரிமைக்காக, எழுச்சிக்காக தொடங்கப்பட்ட இயக்கம்!
திராவிட இயக்கம் வெறும் பதவிக்காகத் தொடங்கப் ப்பட்டதல்ல; மனிதர்களுக்காக, மானத்திற்காக, உரி மைக்காக, எழுச்சிக்காக தொடங்கப்பட்ட இயக்கமாகும்.
நம்முடைய முதலமைச்சர் அவர்கள், நம்முடைய அமைச்சர்களின் களப் பணியால், தமிழ்நாட்டில் ஏற்படுகின்ற கல்வி வளர்ச்சி – அதனைக் கண்டு மற்ற மாநிலங்கள் எல்லாம், இதோ, அதோ ஒரு கற்றிடம் – அதைப் பார்த்து நாம் கற்றுக்கொண்டு போகவேண்டும் – நம்முடைய மாநிலத்திலும் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறார்கள், அந்த உணர்வின்படி 1917 ஆம் ஆண்டு பனகல் அரசர் பேசிய பகுதியை எண்ணிப் பார்க்கவேண்டும்.
திராவிட இயக்கம் என்பது சாதாரண இயக்கமல்ல; இனவெறி இயக்கமோ, ஜாதிவெறி இயக்கமோ, மதவெறி இயக்கமோ, வெறுப்பு இயக்கமோ அல்ல – மனிதர்களின் உரிமைக்காக, சமத்துவத்திற்காக இருக்கின்ற ஓர் இயக்கம் என்பதை அன்றைக்கே பிரகடனப்படுத்தினார்கள். அந்தப் பாதை இன்றைக்கு அகலப்படுத்தப்பட்டு இருக்கின்றது; விரிவுபடுத்தப்பட்டு இருக்கின்றது உலகளாவிய நிலையில்.
1917 இல், கோவை மாநாட்டில்
பனகல் அரசரின் உரை!
19, 20.8.1917 ஆகிய இரு நாள்கள் கோவையில் நடைபெற்ற மாநாட்டில் பனகல் அரசர் பேசுகிறார்.
‘‘நாம் எதிர்கொண்டுள்ள ஒரு மாபெரும் சமூகப் பிரச்சினைபற்றி உங்கள் கவனத்தை ஈர்க்க முதலில் நான் விரும்புகிறேன்.
அரசியல் இயக்கம் என்பதற்கும் மேலாக, ஒரு சமூக இயக்கமே நமது இயக்கம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஓர் அகண்ட, நீடித்து நிற்க இயன்ற சமூகநீதியின் அடிப்படையில் பார்ப்பனரல்லாத அனைத்துச் சமூகப் பிரிவு மக்களையும் ஒன்று சேர்க்க ஆவல் உள்ளவர்களாக நாம் உள்ளோம்.
ஓர் உயர்ந்த அரசியல் நிலையை நம்மால் எட்ட இயலும்முன், தற்போது நமது சமூகத்தில் நிலவும், முன்னேற்றத்தையும், சமூகத்தினை திறமைமிக்கதானதாக ஆக்குவதையும் தடுக்கும் அனைத்துச் சமூக வேறுபாடுகளையும், சமமின்மைகளையும் நாம் கட்டாயமாக அகற்றியாகவேண்டும்.
உயர்ஜாதி மனிதன், கீழ்ஜாதி மனிதன், நம்பிக்கையில் மாறுபடும் சமூகங்கள் ஆகிய அனைவரும் ஆங்கிலேய அரசாட்சியின் பயன்களை சம அளவில் அனுபவிக்கும் சுதந்திரம் பெற்றவர்களாக இருக்கவேண்டும். இந்த நோக்கத்தை நாம் எட்டவேண்டுமானால், முதலில் நாம் செய்யவேண்டிய கடமை என்னவென்றால், கீழ்ஜாதி மக்கள்மீது, குறிப்பாக மதத்தின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்கள்மீது திணிக்கப்பட்டு இருக்கும் இயலாமைகளை உடனடியாக, பயன்தரும் வகையில், நீக்குவதே ஆகும்.
செயற்கையான காரணங்களால் உரு வாக்கப்பட்டு, சமூகத்தில் இன்றைக்கு நிலவி வரும் அனைத்து வேறுபாடுகளும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முற்றிலுமாக துடைத்தெறியப்படும் வகையில் நமது இயக்கம் வடிவமைக்கப்பட்டு, நமது பணிகள் அமையவேண்டும்” என்று முதல் குரல் கொடுத்தார் பனகல் அரசர்.
இன்றைய தலைமுறையில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்று சொல்லுகின்ற நேரத்தில், தந்தை பெரியார் மறைவுள்ள நேரத்தில், ‘‘பெரியாருக்கு, நான் அரசு மரியாதையைத்தான் கொடுத்தேன். ஆனால், அவருடைய நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற முடியவில்லை” என்று நமது நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் அவர்கள் சொன்னார்.
பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றினார் சமூகநீதிக்கான சரித்திர நாயகர்!
இதோ இங்கே இருக்கின்ற நம்முடைய முதல மைச்சர் அவர்கள் செய்த முதல் பணியே, பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றினார். இதுதான் திராவிடத்தினுடைய எதிரிகளுக்கெல்லாம் கோபம்.
இதற்காகத்தான் திராவிடத்து எதிரிகள் எல்லாம் போர்க் குரலை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
எனவேதான், களம் தெளிவாக இருக்கிறது; கொள்கைகள் எங்களுக்குத் துணிவாக இருக்கிறது. எதிர்நீச்சல் என்பது எங்களுக்கு சாதாரணமான நிலை.
எனவேதான், இது ஒரு படைக்கலன்; சரியான நேரத்தில் இந்த ஆயுதங்கள் கிடைத்திருக்கின்றன. வரலாறு ஒருபோதும் அவர்களுக்குக் கிடையாது; இனிமேல் எங்களுடைய வரலாறு; இனிமேல் எங்களுடைய தொடர்ச்சி.
இந்த ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது. தேர்தல் என்பது எங்களுக்கு சாதாரண ஒரு வாய்ப்பே தவிர, மக்களிடம் இருக்கின்ற வேரே உங்களால் ஒருபோதும் பறிக்க முடியாது.
எனவே, இந்த ஆய்வு நூல் என்பது புதிய படைக்கலனாகும். புதிய படைக்கலனைத் தந்த ஆசிரியர் பொன்முடி அவர்களே, இதனை வெளியிட்ட முதலமைச்சர் அவர்களே, இதனைக் கேட்கின்ற நண்பர்களே, இந்தப் படைக்கலனை, இந்தத் தத்துவங்களை வீடெலாம், நாடெலாம், உலகெலாம் பரப்புங்கள்!
வெல்க திராவிடம்!
வாழ்க பெரியார்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.