கேள்வி 1: மராட்டிய மாநிலத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வி.சி.க. 10 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக செய்திகள் வந்திருக்கின்றதே – ‘இந்தியா’ கூட்டணிக்கு பாதிப்பு வரக்கூடாது என்று ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், கொள்கை ரீதியான அரசியலில் ஈடுபடும் வி.சி.க. போட்டியிடுவதால் இந்தியா கூட்டணிக்கு பாதிப்பு வருமோ (வாக்கு பிரியும்) என்ற அச்சம் ஏற்படுகிறதே?
– பெரியார் பாலா, நியூ மும்பை.
பதில் 1: நல்ல நியாயமான கேள்வி. “கூட்டணி” என்பதும் “தொகுதி உடன்பாடு” என்பதும் இருவகைத் தன்மை கொண்டவை.
கூட்டணிக் கட்சிகள் இப்படி அதில் இருந்துகொண்டே – பா.ஜ.க.விற்கு வாக்குகளின் பலன் கிடைக்கும்படி – தெரிந்தோ – தெரியாமலோ, புரிந்தோ – புரியாமலோ நடந்து கொள்ளுகின்றன. இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள அத்துணை கட்சிகளும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
கூட்டணியில் ஏற்படும் இப்படிப்பட்ட போட்டிகளால் பயன் பெறப் போவது பா.ஜ.க. அணியே என்பதை எவரே மறுக்க முடியும்?
– – – – –
கேள்வி 2: “உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் சிறையில் ராமலீலா நாடகத்தை பயன்படுத்தி வானர சேனை வேடமிட்ட தண்டனைக் கைதிகள் இருவர் தப்பிவிட்டார்களாமே?
– க.கார்த்திக். சத்திரம்
பதில் 2: தப்பி ஓடும் கைதிகளுக்கும்,இராமரும் இராமாயணமும் எப்படிப் பயன்படுகிறது பார்த்தீர்களா?
சட்டத்தால் முடியாதது பக்தி வேஷத்தால் சாத்தியமாகிறது போலும்!
– – – – –
கேள்வி 3: “சங்கி” என்ற பொதுப்பெயரில் பார்ப்பனர்கள் பதுங்கிக் கொள்கிறார்களே! பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் என்று அழைப்பதுதானே அவர்களை அடையாளப்படுத்தும்?
– கோ.பாண்டியன், ஆண்டிமடம்.
பதில் 3: ‘பார்ப்பனரல்லதார்’ என்று பெரும்பாலான மக்கள் – நம்மை அழைப்பதைவிட ‘திராவிடர்கள்’ என்றே கூறவும். பார்ப்பானை ‘திராவிடர் அல்லாதார்’ என்றும் கூட அழைக்கலாமே! திராவிடரல்லாதவர் என்பதே வெகு சிறப்பானது என்பதால் அச்சொல் பொருத்தமே!
– – – – –
கேள்வி 4: கடவுள்களின் “வாகனங்கள்” காலத்திற்கேற்ப மாறாதது ஏன்? அவைகளுக்கு தகுதிச் சான்றிதழ் கிடையாதா?
– மா.கவுதம், தாம்பரம்
பதில் 4: அசையா கடவுள்களுக்கு அசையும் வாகனங்களால் என்ன பயன்?
ஓடாத தேர்களைக்கூட திருவெறும்பூர் B.H.E.L.இல் தனி சக்கர அச்சு தயாரித்துத் தான் ஓட வைத்தார் கலைஞர். கடவுளால் முடியாதது மனிதரால் முடிகிறதே!
– – – – –
கேள்வி 5: மதச்சார்பின்மையை அடிப்படையாக வைத்துத்தான் அனைத்துத் தீர்ப்புகளும் சொல்லப்படுகின்றன என்று கூறியுள்ளார் ஒரு நீதிபதி. அப்படியிருக்கும்போது பல தீர்ப்புகள் நமக்கு (தடு)மாற்றமான தீர்ப்புகளாய் வந்த காரணம் மதச்சார்பின்மையை மறந்துபோய் விட்டதனாலா?
– பா.ஓவியன், அரும்பாக்கம்
பதில் 5: உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. சங்கிகள், காவிகள் ஊடுருவியதன் மோசமான விளைவு அது!
அதனால்தான் தோல் இருக்க சுளை முழுங்கிகளாகும் இதுபோன்ற இக்கட்டான நிலை.
– – – – –
கேள்வி 6: “பி.ஜே.பி.யினரை தமிழுக்கு எதிரிபோல வேண்டுமென்றே சித்தரிக்கிறார்கள்” என்று ஒரு பி.ஜே.பி.காரர் கூறியுள்ளாரே? அப்படியானால் கோயில்களில் ஏன் தமிழில் பூஜை செய்வதில்லை?
– கல.சங்கத்தமிழன், காஞ்சி
பதில் 6: சமஸ்கிருதம் ‘தேவபாஷை’, தமிழ் நீச்ச பாஷை என்பதை சொன்னவர்கள் யார்? “பூஜை செய்த பிறகு நீச்ச பாஷையான தமிழில் பேச முடியாது” என்று கூறிய முந்தைய காஞ்சி சங்கராச்சாரியின் செயலுக்கு வேறு என்ன பொருள்!
சமஸ்கிருத ஹிந்தி ஒரே மொழிதான் – நாட்டில் உயர்ந்தது என்று கூறும் ஹிந்துத்துவாதானே பி.ஜே.பி.யின் கொள்கை! பிறகு ஏன் இந்த இரட்டை வேடம்?
– – – – –
கேள்வி 7: இந்திய மாணவர்கள் வெளிநாடு சென்று படிப்பதை குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் “புதிய நோய்” என்று கூறியுள்ளாரே?
– வே.காளிதாசன், மதுரை
பதில் 7: புதிய நோயா? பழைய நோயா என்பது பிறகு இருக்கட்டும்; அவரது பேத்தியை வெளிநாட்டுப் படிப்புக்கு அனுப்பியதற்கு என்ன பொருள்? இவரும் நோயாளியே என்பதற்கான சான்றுதானே!
– – – – –
கேள்வி 8: ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தி மொழி குறித்த நிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்று திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியிருப்பது குறித்து?
– கி.சாக்கியமுனி, நுங்கம்பாக்கம்
பதில் 8: நியாயமான யோசனை – கேளாக் காதர்களுக்கு எப்படி இது உறைக்கும்?
– – – – –
கேள்வி 9: 1891இல் மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்தில் இடம்பெற்ற “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்” என்ற வரியை நீக்கி பாட வைத்து ஆனந்தப்படுபவர்களுக்கு அதே பாடலில் இடம் பெற்று தற்காலிகமாக நீக்கப்பட்ட “ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்” என்ற வரியை மீண்டும் இடம் பெறச் செய்து நாடு முழுவதும் ஒலிக்க செய்யுமா திராவிட மாடல் அரசு?
– மன்னை சித்து, மன்னார்குடி – 1.
பதில் 9: முதலில் – செயல்படும் வழக்கில் உள்ள வரிகளுக்கு ஆபத்து வராமல் பார்ப்பது முக்கியம்.
பிறகு ஒரு நாள் உங்கள் யோசனையும் செயலுக்கு வரும்.
– – – – –
கேள்வி 10: சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் போக்கு மோசமாகி வருகிறது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வருத்தம் தெரிவித்துள்ளாரே?
– தி.அறிவுமொழி, தஞ்சை
பதில் 10: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசும், மக்கள் அணியும் தனித்தனியே சிதம்பரம் கோயிலை தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து செய்தல் அவசியம் – அவசரம்!
முந்தைய தீர்ப்பின் பல அம்சங்கள் சட்டத்தின் கவனச் சிதறலால் பெறப்பட்ட தீர்ப்பு.
புதிய வழக்கு – தொடர் போராட்டம் மீண்டும் வெடித்துக் கிளம்ப வேண்டும்.