குடந்தய் வய்.மு.கும்பலிங்கன்
பொதுவாக மதக்காரர்களே மகாப் புளுகர்கள் ஆவார்கள். எனினும் அவர்களினும் நனி சிறந்த உத்தமப் புளுகர்கள் இந்து மதக்காரர்களே ஆவர். எப்படி? எவ்வாறு? எங்கனம் எவ்விதத்தில்? குந்திதேவி அவள் மகன் கர்ணன் வாழ்வு.
மகாபாரதக் கதையில் நிகழ்ச்சியை எடுத்துக் கொள்வோம். மகாபாரதமே மகாமகா புரட்டுப் பொய்க் கதையாகும். அதில் வருகிற குந்திதேவிக் கதையோ குதர்க்கமும், குமட்டலும் நிறைந்த மகாமகாக் கேவலக் கதையாகும்.
எப்படி? எவ்வாறு? சூரியன் என்பது ஒரு கோள். இயற்கை வஸ்து ஒரு கிரகம்; அறிவியலுக்கு உட்பட்ட ஓர் ஆய்வுப் பொருள் இஃது உலகிற்கே சொந்தமானது – பொதுவானது – நாடு, மொழி, மதம், இனம், ஜாதி, சமயம், குலம், கோத்திரம் அனைத்தையும் கடந்தது.
இந்த உலக மகாப் பொதுச் சூரியனை இந்துமதக் கற்பனைக் கதையாக வருகிற பாரதத்தின் ஒரு பாத்திரப் படைப்பாகிய குந்திதேவியின் கணவனாகவும் கர்ணனின் தந்தையாகக் காட்டவும் வர்ணிக்கவும் எந்த ஆதார அடிப்படையில் வியாச முனிவர் முன் வந்தார்? அந்த வியாச முனிவனுக்கு எவ்வளவு கொழுப்பும், திமிரும் இருந்திருக்க வேண்டும்! சூரியக் கடவுள் தோற்றம் எப்போது? மகாபாரதக் கதை நடந்தது
எப்போது? மகாபாரதக் கதையின் காலத்தில் சூரியனின் மனைவி குந்திதேவி என்றால், அதற்கு முன்னர் சூரியக் கடவுளின் மனைவி யார்? அவர் பெயர் என்ன? தொடக்கக் காலத்திலிருந்து – குந்திதேவி வருகைக்கு முன்னர் வரை ஏதோ ஒரு மனைவியுடன் வாழ்ந்தாரா? பல மனைவியருடன் வாழ்ந்தாரா? தற்போது இற்றைய நாளில் சூரிய பகவானின் மனைவி யார்? இந்தக் கேள்விகள் வரவும், எழவும் நியாயம் அவசியம் உண்டல்லவா?
பக்த கோடிகளே தாங்கள் தரப்போகும், அளிக்க இருக்கும் பதில் என்ன?
உலகத்திற்கே பொதுவான – சொந்தமான சூரியக் கோளை இந்துமத பாரத எழுத்தாளர் ஆக்கிரமிப்பு செய்தபோது மற்ற மற்ற மதக்காரர்கள் என்ன சொன்னார்கள்? என்ன செய்தார்கள்? எந்த நடவடிக்கையில் இறங்கினார்கள்? வரலாற்றில் எந்த ஆதாரக் குறிப்பும் கண்டனத் தகவலும் இல்லையே – எந்தப் பாதிரியாரும் மறுத்ததாக எந்த அறிஞரும் கண்டித்ததாகத் தெரியவில்லையே? இந்து மதம் என்றாலே அது பொய் மதம் – மதம் என்கிற பெருந் தன்மைக் குணத்தால் விட்டுவிட்டார்களோ? அது புளுகு.
மேலும், ஒரு வினா எழ நியாயம் இருக்கிறது – சூரிய பகவான் குந்தி தேவியுடன் கூடிக் குலவிக் குடும்பம் நடத்தியது எந்தக் காலத்தில்? எந்த ஆண்டில்?
கி.மு.வா அல்லது கி.பி.யா? சூரிய பகவான் குந்தி தேவியோடு குடும்பம் நடத்திய போது கூடிக் குலவிய போது – கட்டிப் புரண்டு புணர்ந்த போது மற்றைய உலகின் நிலை – உலகினர் நிலை என்னவானது? வரலாற்றுக் குறிப்புகளில் ஆதாரம் ஏதும் இல்லையே!
செயற்கை செயற்கையாக இருக்க வேண்டும். செயற்கை செயற்கையாகத் திகழ வேண்டும். இயற்கை இயற்கையாக இருக்க வேண்டும்; இயற்கை இயற்கை யாகத் திகழ வேண்டும். செயற்கையில், இயற்கையைக் கலக்கக் கூடாது. தண்ணீர் – தண்ணீராக இருக்க வேண்டும். பால் பாலாக இருக்க வேண்டும். தண்ணீரில் பாலைக் கலக்கக் கூடாது என்கிற அடிப்படை அறிவு கூட மகாபாரத எழுத்தாளனுக்கு கவிஞனுக்கு இல்லாமல் போய் விட்டதே!
சில பட்சணக் கடைகளில், சில பலகாரக் கடைகளில் “இங்கு செய்யப்பட்டவை உண்மையான நெய்யினால் அல்ல. டால்டாவால் செய்யப்பட்டவை” என்கிற விளம்பரப் பலகை வைத்திருப்பார்கள். அவர்தாம் நேர்மையான வியாபாரி ஆவார். இது போன்று எழுத்தாளர்கள் தங்கள் எழுத்து நிலை குறித்த கதை நிலை குறித்த உண்மையைத் தம் முன்னுரையில் வெளிப்படுத்திவிட வேண்டும்.
இன்னும் சில நாகரிகமான நளினமான எழுத்தாளர்கள் “கதையில் வரும் சம்பவங்களும், காட்சிகளும் பெயர்களும் கற்பனையே; உண்மை அன்று” என்று முகப்புரையிலேயே சொல்லி விடுவார்கள்.
இந்த நாகரிக நளினப் பண்பு அந்நாளைய மகாபாரத எழுத்தாளருக்கு இல்லாமல் போய்விட்டது போலும் இதில் இன்னுமொரு பெருங்கூத்து என்னவெனில், உலக முழுமுதல் கடவுளான விநாயகப் பெருமான் சொல்ல வியாச முனிவர் கதையை எழுதினாராம்.
காரணம், புளுகுவதுதான் புளுகுகிறோம். அதை அண்டப் புளுகாகவும், ஆகாசப் புளுகாகவும் புளுகி விடுவோமே என்ற அசகாய முடிவுக்கு வந்துவிட்டனர் போலும்!
மேலும், பக்தி மார்க்கக் கடவுள் கதை என்றால். கடவுள் வரலாறு என்றால் அதைக் கேட்டுக் கொள்ள வேண்டுமே தவிர, எதிர் வினா போட்டுச் சிந்திக்கக் கூடாது என்றும் வாய்ப்பூட்டுப் போட்டுவிட்டார்கள்.
மேலும், ஒரு சிறப்பு என்னவெனில், எதுவும் தமிழ் நாட்டில், தென்னாட்டில் இராமாயணப் பாரதக் கதைகள் திராவிட நாட்டில் நடந்ததாக வரலாறு கிடையாது.
அனைத்துக் கதைகளுமே வடநாட்டில் – வட இந்தியாவில் நடந்ததாகத்தான் வரலாறு சொல்லப் பட்டிருக்கிறது – எழுதப்பட்டிருக்கிறது. மேலும் அவ்வரலாறுகள் தவறு தவறு மன்னிக்கவும். கதைகள் எழுதப்பட்ட மூல மொழி வடமொழி என்னும் சமஸ் கிருதத்திலேயே, தமிழில் அன்று என்பது நமக்குப் பெரிதும் ஆறுதல் மொழி தருவதாகவே உள்ளது. மேலும் அந்நூற்களை எழுதியவர்கள் – சிந்தித்தவர்கள் – புனைந்தவர்கள் தமிழர்கள் அல்லர் என்பதும், ஆரிய வடவர்களே என்பதும் நமக்குப் பெரிதும் ஆறுதல் அளிப்பனவாகவே உள்ளன.
ஆம், இஃதுதான் எம் முடிவு.
ஆரியப் பார்ப்பனப் பிராமணர்கள் மொழியில் வடமொழியில் எழுதிய இராமாயண பாரதக் கதைகள் கற்பனைகள் நிறைந்த பொய்மை சூழ்ந்த நிச்சயமானக் கட்டுக் கதைகள் என்பதையும் தென்னகத் திராவிடத் தமிழர்கள் தங்கள் உயர்மொழியாம் தமிழில் எழுதிய திருக்குறள், நாலடியார், சிலப்பதிகாரம் போன்ற செம்மைச் சார்ந்த நூல்கள் வரலாற்றுக் கருத்துச் சம்பவ நிகழ்ச்சிகள் என்பதையும் இங்கு கண்டும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
பொற்கலம் நிகர்த்தது – தமிழ்மறை. மட்கலம் நிகர்த்தது – மறையவர் நான்மன்று. தமிழ் பொன்குடம் – இது உடையாதது. வடமொழி மண்குடம் – இஃது உடையும் தன்மையது.