தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை நடைமுறையில் இருக்கிறது. ஏதோ… ஹிந்தி கற்காததால் தமிழ்நாடே வீழ்ச்சியில் இருப்பதாக, சிந்தனையற்ற சிலர் கூறி வருகின்றனர். ஆனால் திராவிடர் கழகத்தில் உள்ளவர்களுக்கும் ஹிந்தி தெரியும் என்பதோடு, இயக்க மகளிர் ஒருவர் ஹிந்தி ஆசிரியராகவே இருந்துள்ளார் என்பதையும் பதிவு செய்கிறோம். ஆக விருப்பப்பட்டால் கற்பது வேறு; கற்றே ஆக வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் வேறு! சரியாகப் புரிந்து கொண்டால் பெரியார் கொள்கையை விட, சிறந்த வாழ்க்கை நெறி வேறெதுவும் இருக்க முடியாது! இந்த வாரம் இயக்க மகளிரில் ஹிந்தி ஆசிரியரைச் சந்திக்க இருக்கிறோம்!
அம்மா வணக்கம்!
நீங்கள் ஹிந்தி ஆசிரியர் என்று அறிந்தோமே?
ஆமாம்! 25 ஆண்டுகள் தனியார் பள்ளியில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆசிரியராகப் பணியாற்றினேன். அதன் பிறகு மழலையர் பள்ளியொன்றில் தலைமை ஆசிரியராகவும் இருந்து, பிறகு ஓய்வு பெற்றேன். இப்போது வயது 61 ஆகிறது. குமரி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு வரை முடித்து, முதுகலை ஆங்கிலம் அஞ்சல் வழி மூலம் கற்றேன். பின்னர் ஹிந்தி மொழியில் பேசவும், எழுதவும் கற்றுக் கொண்டேன். அதைப் பயிற்றுவிக்கும் அளவிற்கும் உருவானேன். அந்த அடிப்படையில் தனியார் பள்ளியொன்றில் 1985 – 2009 வரை ஆங்கிலம், ஹிந்தி என இரண்டு மொழிகளுக்கும் ஆசிரியராக இருந்தேன்.
தங்களின் சொந்த ஊர் உள்ளிட்ட விவரங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்?
எனது பெயர் ச.சா.மணிமேகலை. சொந்த ஊர் நாகர்கோயில் அருகே கோட்டாறு. பெற்றோர் வே.சண்முகம் – சரஸ்வதி. அப்பா கணக்கு எழுதும் பணி செய்து வந்தார். அவர் ஒரு பெரியாரிஸ்ட். எனது தாத்தா வே.பி.வேலாயுதம் அவர்கள் சுயமரியாதைச் சிந்தனை கொண்டவர். தமிழார்வம் மிக்கவர். கவிமணி தேசிய விநாயகம், சதாவதானி ஷேக் தம்பி பாவலர், பூதப்பாண்டி தியாகி ஜீவானந்தம் ஆகியோர் தாத்தா வீட்டிற்கு அடிக்கடி வருவார்கள். ஜாதி வேறுபாடுகளைக் களையும் பொருட்டு அந்தக் காலத்தில் தாத்தா “சமபந்தி போஜனம்” நடத்துவார்.
தாத்தாவின் சிந்தனைகள் மூலமாக, அப்பா பெரியார் கொள்கையை வந்தடைந்தார். தந்தையின் வழியில் நானும் வந்தேன். அப்போது வீட்டிற்கு ‘விடுதலை’ நாளிதழ் வரும். நாங்கள் படித்துவிட்டு, “கந்தசாமி அண்ணாச்சி முடித்திருத்தகம்” எனும் கடைக்குக் கொடுத்துவிடுவோம்.
என்னுடன் பிறந்தோர் 8 பேர். மல்லிகா, அண்ணாதுரை, இளங்கோ, வெற்றிச்செல்வி, கண்ணகி, மணிமேகலை, தமிழரசன், கருணாநிதி, சத்யராணி என அனைத்துமே இலக்கியம் மற்றும் தலைவர்களின் பெயர்கள். சகோதரர் தமிழரசு மூலம் கொள்கையில் கூடுதல் புரிதல் கிடைத்தது.
தங்களின் கொள்கை அனுபவங்கள் குறித்துக் கூறுங்கள்?
தந்தை வழியில் சிந்தனைகளைப் பெற்றாலும், 2003 ஆம் ஆண்டு முதலே இயக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டேன். மாவட்ட மகளிர் பாசறை தலைவர், பொதுக்குழு உறுப்பினர், மண்டல மகளிரணி செயலாளர் போன்ற பொறுப்புகளில் செயல்பட்டு, தற்போது கோட்டாறு பகுதி கிளைக் கழகத் தலைவராக உள்ளேன். 40 ஆவது வயதில் முதன்முதலாகக் குற்றாலம் பயிற்சி முகாம் போனேன். அந்த நிகழ்ச்சியே புதுமையாக இருந்தது. அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக ஒழுங்குடன் நடந்தன.
தேநீர் நேரம், உணவு இடைவேளை என அந்தக் கட்டமைப்பே என்னை ஈர்த்தது. உணவிற்காக வரிசையில் நிற்பது, அவர்களே தட்டைக் கழுவி அடுக்கி வைப்பது என, என் முதல் அனுபவமே சிறப்பாக இருந்தது. அவர்கள் எவ்வளவு பெரிய பொறுப்புகளில் இருந்தாலும், இதுதான் நடைமுறை. அதேபோல மாணவர்கள் நன்கு கவனித்து, குறிப்பெடுத்த முறையும் அழகாக இருந்தது.
கொள்கையில் இருந்ததால்,
பணியிடத்தில் பாதிப்புகள் ஏதும் வந்ததா?
நிறைய வந்துள்ளது. எனினும் தவிர்க்க முடியாதவாறு பணியில் ஈடுபாடு காட்டினேன். நான் அவ்வப்போது கருப்புச் சேலை கட்டி பள்ளிக்குச் செல்வேன். ஒருமுறை முதல்வர் அழைத்துக் கண்டித்தார். வாரம் ஒருமுறை ஆசிரியர்கள் கொடி ஏற்றுவார்கள். நான் கொள்கையில் இருந்ததால், எனக்கு அந்த வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை. பூ, பொட்டு வைக்காமல் செல்வது கூட அவர்களுக்குப் பிடிப்பதில்லை. அதேநேரம் மதத்தைக் காரணமாக வைத்துச் சிலர் அப்படி வருவார்கள். அவர்களுக்குக் கேள்விகள் வருவதில்லை.
மேனாள் குமரி மாவட்டத் தலைவராக இருந்த சங்கர நாராயணன் அவர்கள், உலகப் போதை ஒழிப்பு நாளையொட்டி எங்கள் பள்ளிக்கு வந்தார்கள். அப்போது அவர்கள் அறிமுகம் கிடைத்தது. அப்போதிருந்து குமரி மாவட்டச் செய்திகள் அஞ்சல் அட்டை மூலம் எனக்கு வரும். பணியின் போதே பெரியார் 1000 நிகழ்ச்சியில் அதிகம் முனைப்புக் காட்டுவேன். மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகளுக்கும் சென்று, உரிய ஏற்பாடுகள் செய்வோம்.
கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனுபவங்கள் குறித்துக் கூறுங்கள்?
பணியில் இருந்த வரை வெளியூர் பயணங்கள் குறைவுதான். உள்ளூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன். ஓய்வுக்குப் பிறகு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என பல நிகழ்வுகளில் கலந்து கொண்டு, அதில் 3 முறை சிறை சென்றுள்ளேன். திருச்சி, சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகம் அடிக்கடி அடிக்கல் நாட்டு விழா, தஞ்சையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆணைப் பிறப்பித்த கலைஞருக்குப் பாராட்டு விழா, சென்னை திருவொற்றியூர் மகளிர் மாநாடு, ஈரோடு பவள விழா மாநாடு, திருச்சியில் அன்னை சோனியாகாந்தி, மன்மோகன் சிங், கலைஞர் ஆகியோருக்குப் பாராட்டு விழா போன்றவை முக்கியமாக நான் கலந்து கொண்டவை. இந்த நிகழ்ச்சியில் தீர்மானம் வாசிக்கும் வாய்ப்பைத் தமிழர் தலைவர் அவர்கள் எனக்கு வழங்கினார்கள்.
இயக்க நிகழ்ச்சிகளுக்காகப் பயணம் செய்வதில் எப்போதும் நான் சோர்வு அடைந்ததில்லை. 2023 ஆம் ஆண்டு பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சேலத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி முகாமில் கூட கலந்து கொண்டேன். கருஞ்சட்டைத் தோழர்களைச் சந்திப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி. பிரச்சாரம் செய்வதிலும், அதில் கலந்து கொள்வதிலும் தான் ஊக்கம் பெறுகிறேன்.
தாங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று அறிந்தோமே?
ஆமாம்! அதனால் என்ன? அதுதான் நான் இயக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க முக்கியக் காரணமாக இருக்கிறது. எனக்குத் திருமணத்தில் ஈடுபாடு இல்லாமலே போய்விட்டது. நிறைவாகவும், வாய்ப்பாகவும் இருக்கிறேன் என்றே சொல்ல வேண்டும். எந்த நாளிலும், எந்த நேரத்திலும் தோழர்கள் மாவட்டத்திற்கு வருவார்கள். குறிப்பாக மகளிரணி தோழர்கள் வரும்போது கூடவே இருப்பேன்.
தோழர்கள் திருமகள், பார்வதி, அருள்மொழி, கலைச்செல்வி, கலைவாணி உள்ளிட்ட பலர் நாகர்கோயில் வந்துள்ளனர். செட்டி குளத்தில் மகளிரணி மாநாடு நடத்தினோம். அதில் நானும் தீச்சட்டி ஏந்தினேன்.
நாகர்கோயிலில் சுயமரியாதைத் திருமண நிலையமும் ஏற்படுத்தித் தந்தார்கள். பெரியார் திடலில் பணிபுரியும் உடுமலை வடிவேல் – மணிமேகலை இரு வருக்கும், வடசேரி தோழர் என்.ஆர்.சந்திரன் மூலமே திருமணம் ஏற்பாடு செய்யப் பட்டது. அந்தப் பெண் நாகர்கோயிலை சேர்ந்தவர்.
ஒருமுறை திருமகள் அம்மா கோட்டாறு வந்தார்கள். “ஒரு மனிதரிடம் ஒரு ரூபாய்” என்கிற அடிப்படையில் நன்கொடைத் திரட்டினோம். முதல் நாளிலே ரூபாய் 2,400 கிடைத்தது. தொடக்கத்தில் தயக்கம் இருந்தாலும், பின்னர் பழகிவிட்டது. “நமக்காகக் கேட்கவில்லை; கொள்கைக்காகக் கேட்கிறோம்” என்கிற சிந்தனை பிறகு எழுந்தது. இப்போது மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், செயலாளர் கோ.வெற்றிவேந்தன் ஆகியோர் தலைமையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம்.
பெரியாரைச் சந்தித்துள்ளீர்களா?
குமரி மாவட்டத் தலைவராக இருந்தவர் கணேசன். இவர்தான் நாகர்கோவில் நகராட்சியில் பெரியார் படம் வைக்கக் காரணமாக இருந்தவர்.
இவரது மகள் மல்லிகா திருமணம் 1971ஆம் ஆண்டு கோட்டாறு பகுதியில் நடைபெற்றது. அதில் பங்கேற்க வந்த பெரியாரும், மணியம்மையாரும் எங்கள் இல்லத்திற்கும் வந்தனர்.
அதேபோன்று செட்டிகுளம் மாநாட்டிற்கு வந்தபோது, ஆசிரியர் அவர்களும் எங்கள் இல்லம் வந்தார்கள். எனது வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத நினைவு அது!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் குறித்த எண்ணவோட்டங்களைப்
பகிர்ந்து கொள்ளுங்கள்?
ஆசிரியர் அவர்கள் அண்மையில் ஜப்பான் சென்று வந்தது மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. நேரலையில் நிகழ்ச்சி முழுவதையும் பார்த்தேன். அய்யா அவர்கள் ஜப்பானிய மொழியில் “ஒகாயோ குசைமாஸ்” என்று சொன்னதை நானும் கற்றுக் கொண்டேன். ஆசிரியரின் சுறுசுறுப்பிற்கு எந்தக் காலத்திலும் ஈடுஇணை கிடையாது. பேச்சில் நீடிக்கும் அதே கம்பீரம், அதேபோல எக்காலத்திலும் அலுக்காத பேச்சு!
“நம்மால் முடியாதது யாராலும் முடியாது! வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்”, என்பது எனக்குள் அழுத்தமாகப் பதிந்த ஒன்று.
பணியில் இருந்த காலத்தில்
வகுப்பறையில் இதை எழுதிப் போட்டுள்ளேன். ஆசிரியர் அவர்கள் தென்காசியில் உருவாக்கிய “மானமிகு” என்ற சொல்லும், அதேபோல “தொண்டறம்” என்கிற சொல்லும் மிகவும் ஈர்ப்பானவை. ஆசிரியர் அவர்களின் சுற்றுப்பயணம் எப்போதும் வியப்பானவை. நம் தலைவர் மனவலிமை மிக்கவர்.
‘மின்சாரம்’ கட்டுரைகள், ‘வாழ்வியல் சிந்தனைகளை’ விரும்பிப் படிப்பேன். ஆசிரியரின் அறிக்கையைச் சத்தம் போட்டு படிக்கும் வழக்கமும் என்னிடம் இருக்கிறது” என கோட்டாறு மணிமேகலை தெரிவித்தார்.