சிவகுருபிரபாகரன் அய்.ஏ.எஸ். இவரது சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள மேல ஒட்டங்காடு கிராமம். சாதாரண கூலி வேலை செய்யும் குடும்பத்தில் பிறந்த பிரபாகரன் அய்.ஏ.எஸ். ஆகி உள்ளார்.
தாய் கனகா, தந்தை மாரிமுத்து, பாட்டி நல்லம்மாள், இவர்களின் தொழில் தென்னங்கீற்று பின்னி விற்பது அல்லது மரம் அறுக்கும் ஆலையில் கூலிக்கு வேலை செய்வது.
இந்தக் குடும்பத்தில் பிறந்த சிவகுருபிரபாகரன் தொடக்கப் பள்ளி படிப்பை அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அருகில் உள்ள புனவாசல் கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ அரசு உதவி பெறும் பள்ளியிலும் படித்தார். தொடர்ந்து புதுக்கோட்டை அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பட்டய படிப்பு முடித்துவிட்டு, சிவில் பொறியியல் படிப்பை வேலூர் தந்தை பெரியார் கல்லூரியில் படித்தார். பின்னர் பொறியியல் உயர்கல்வியை (M.Tech.) சென்னை அய்.அய்.டி.யில் படித்த இவர், தொடர்ந்து போட்டித் தேர்வுகள் எழுதினார்.
ரயில்வேயில் பணி கிடைத்தது. அந்த பணியே போதும் என்று அவரது உறவினர்களும், நண்பர்களும் சொன்ன போதும், தன் கனவு மாவட்ட ஆட்சியர் ஆவது என சொல்லி தொடர்ந்து படித்தார். அய்.ஏ.எஸ். ஆனார்.
அய்.ஏ.எஸ். அதிகாரியான பிறகு திருமணம் செய்ய வேண்டிய நிலையில், பல படித்த பெண்களும் IAS, IPS, IRS படித்த பெண்களும் மணமகளாய் வர தயாராக இருந்தும், ஒரு மருத்துவரைத் தான் திருமணம் செய்வேன் என்று உறுதியாக இருந்தார்.
இதை மனதில் கொண்டு அவர்களுடைய பெற்றோர் மருத்துவம் படித்த பெண்ணை தேடி வந்த நிலையில், மருத்துவம் படித்த பெண்கள் பலர் கிடைத்தும், இவருடைய நிபந்தனைகளை கேட்டு அனைவரும் ஓட்டம் பிடித்தனர்.
கடைசியாக சென்னை நந்தனம் கல்லூரி கணித பேராசிரியரின் மகள் மருத்துவர் கிருஷ்ணபாரதி திருமணத்துக்கு ஒப்புதல் அளித்த பின் திருமணம் நடந்து முடிந்தது.
இதில் என்ன ஆச்சரியம்?… அவருடைய நிபந்தனைதான் என்ன? தன்னை திருமணம் செய்துகொள்ளும் மருத்துவர் வாரத்தில் இரண்டு நாள்கள், தான் பிறந்த ஒட்டங்காடு கிராமத்திற்கும், சுற்றியிருக்கும் கிராமங்களிற்கும் இலவசமாய் மருத்துவம் பார்க்க வேண்டும் என்கின்ற நிபந்தனையையே வரதட்சனையாகவும் இவர் கேட்டதுதான்.திருமணம் தள்ளிப் போய்க் கொண்டிருக்க இவர் கேட்ட வரதட்சனையை கொடுத்து மருத்துவர் திருமதி கிருஷ்ணபாரதி சிவகுரு பிரபாகரன் ஆகி உள்ளார்.
2020ஆம் நடந்து முடிந்த திருமணத்திற்குப் பிறகு தவறாமல் தனது கணவரின் கிராமத்திற்குச் சென்று மருத்துவம் பார்த்துவருகிறார். தனக்கு வேறு பணிகள் இருந்தாலும் தனது மருத்துவ தோழியர்களை அங்கு அனுப்பி தொடர்ந்து சேவை செய்து வருகிறார்.