விஜிமுருகு
பிரபஞ்சத்தில் ஆண்களும் பெண்களும் சரிபாதியாக இருந்தாலும்… ஆணுக்கும் பெண்ணிற்குமான ஏற்ற தாழ்வுகள் பெண்ணை அடிமைப்படுத்தியே வந்திருக்கிறதை உணர்ந்து கொள்ள முடியும். பெண்களிடம் சென்று நீங்கள் உங்களை அடிமைப்படுத்தும் பழக்கவழக்கங்கள் மூலம் அடிமைப்பட்டு இருக்கிறீர்கள் என்று சொன்னால் நம்மை கேலியாக பார்ப்பார்கள். அந்த அளவிற்கு அடிமைத்தனம் என புரியாமல் வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
இதற்கெல்லாம் காரணம், பெண்கள் வளர்ப்பு முறையும் ஆண்களின் வளர்ப்பு முறையும் வேறு வேறு. பாகுபாடில்லாமல் இருக்கும் குடும்பங்களை பார்த்தால் அங்கிருக்கும் மனிதர்கள் பாலின பாகுபாடு இல்லாமல் சமத்துவமாக இயல்பாக இருப்பது புரியும்.
வளர்ப்பு முறையில் உடனடி மாற்றத்தை கொண்டு வர முடியுமா என்ன? வளர்ப்பு முறையில் சமத்துவத்தை கடைப்பிடிக்க இங்குள்ள மதங்களோ ஜாதியோ அவ்வளவு சீக்கிரம் அனுமதிப்பதில்லை ..
பண்பாடு, கலாச்சாரம் என்ற புனைவுகளை பயன்படுத்தி மக்கள் மனதை கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள்.
எத்தனை படித்த கல்வியாளர்களாக இருந்தாலும் இதை ஏன்!? எதற்கு? என்று கேள்விகளுக்கு உட்படுத்தாமலேயே மனித இனம் இத்தனை ஆண்டுகளாக கடந்து வந்திருக்கிறதுஎன்பது வேதனையான விடயம் ஆகும்?
இங்கு மட்டுமல்ல பன்னாட்டு பெண்களின் நிலையும் இது தான் என்பதை அங்கிருந்து வெளிவரும் காட்சிப் பதிவுகள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
பிரபஞ்சத்தில் எங்கெங்கும் பெண்கள் சமையல் கூடங்களில் நிறைந்திருக்கிறார்கள். என்பது மறுக்கமுடியாத உண்மை. எங்கு ஊதியம் அதிகம் கிடைக்கிறதோ அங்கே ஆண்கள் இருக்கிறார்கள். உலகம் முழுமைக்குமான இந்த பாகுபாடுகளை போக்கிவிட மதங்கள் அனுமதிப்பதில்லை..
மனிதர்கள் மதத்தின் கட்டுப்பாட்டிற்குள்ளேயே வாழ்கிறார்கள். வாழப் பழக்கப்பட்டிருக்கிறார்கள். இந்திய குடும்பங்களில் சாஸ்திர சம்பிராதயங்களே அதிகமாக மனிதர்களை கட்டுப்படுத்துகிறது.இதன் விளைவு ஆண்களுக்கு வாய்ப்பான வாழ்க்கையையே உறுதிப்படுத்துகிறது.
மேற்கத்திய நாடுகளில் கூட பெண்கள் பாலின சமத்துவத்தோடு வாழ்கிறார்களா என்றால் பெரும்பான்மை இடங்கள் ஆண்களுக்கானதாகவே இருக்கிறது.
இப்போதிருக்கும் தலைமுறைகள் சற்று மாறுபட்டு சிந்திப்பது சற்று ஆசுவாசமாக இருக்கிறது. சமீபத்தில் ஒரு காணொலி – இக்கால இளைஞர்களின் மனதை பிரதிபலிப்பதாக இருந்தது.
ஒரு பெண் மணம் முடித்து கணவர் வீட்டில் காலடி எடுத்து வைக்கிறார் – அப்போது அவளது கையில் தோசைக்கல்லும், விளக்குமாறும் இருப்பது போல் நினைக்கிறாள். மீண்டும் கணவர் முகத்தை பார்க்கிறாள். அடுத்த காலடியை வைக்கும் போது அதே தோசைக்கல்லுடனான காட்சி – சட்டென மாலையை கழற்றி கணவனிடம் தந்து விட்டு வெளியேறி விடுகிறாள். இது சிரிப்பதற்கான காட்சியாக சித்தரிக்கப்பட்டாலும் யதார்த்தம் இங்கு இப்படித்தானே இருக்கிறது.
ஆண்கள் கல்வி கற்று வேலைக்கு போனால் சரியாகி விடும் என்றுதான் நம்பப்பட்டு வந்தது. நன்கு படித்த அதிமேதாவிகள் தங்கள் வாழ்க்கையை சாமியார் மடங்களில் மூடப்பழக்கவழக்கத்தில் தான் இருத்தி வைத்திருக்கிறார்கள். பெண்களுக்கு பாலின சமத்துவத்தை தருவதற்கான எந்த முகாந்திரங்களும் இங்கு அழுத்தமாக இல்லை என்பது தான் உண்மை. பகுத்தாய்ந்து வாழ்க்கையை பகுத்தறிவு கொண்டு சிந்திக்கும் மனிதர்களலேயே இது சாத்தியப்படும். இதனால் தான் பெண் பிள்ளைகளை படிக்க வைத்து பொருளீட்ட கற்றுத் தந்தாலே போதுமானது என பெரியார் அவர்கள் சொன்ன கருத்து இங்கு நினைவு கூரப்பட வேண்டும்.
ஆண் பிள்ளைகளை போலவே பெண் பிள்ளைகள் வளர்க்கப்பட வேண்டும் என்று பெரியார் சொல்வார். ஆண்கள் விழிப்புணர்வு பெறுவதை விட குழந்தைகளை பெற்று வளர்த்து அவர்களை பராமரிக்கும் பெண்களால் மட்டுமே சமத்துவ சமூகத்தைஉருவாக்கி பாலின சமத்துவத்துடன் குழந்தைகளை வளர்க்க முடியும். அடிப் படை கல்வியுடன் பாலின சமத்துவத்தை போதிக்க பாடப் பிரிவுகளை இணைத்து புத்தகங்கள் மூலமாக கற்பிக்கப்பட வேண்டும். இங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் சமத்துவத்தை உணர்ந்தவர்களாக இருக்க தனிப்பயிற்சி அவர் களுக்கு அளிக்கப்பட வேண்டியது – கவனத்தில் கொள்ள வேண்டியது காலத்தின் அவசியம்.
அடுத்து இங்கு இருக்கும் தொலைக்காட்சி நேரடியாக வீட்டிற்குள் வந்து மூடப் பழக்க வழக்கங்களை பரப்புவதாக இருக்கிறது.
அதோடு மட்டுமல்ல சீரியல்களில் பாலின சமத்துவத்திற்கு எதிரான சடங்கு, சாஸ்திரம், மூடநம்பிக்கைகளை மக்கள் மனதில் பதிய வைக்கிறது.
மக்களை விழிப்புணர்வு பெற வைக்க ஏற்படுத்தப்பட்ட காட்சி ஊடகங்கள் மக்களின் அறியாமையை போக்குவதாக மாற வேண்டும். அப்படி மூடநம்பிக்கைகளை பரப்பும் தொலைக்காட்சிகளை தடை செய்ய வேண்டும் . ஒரு நாடு அல்லது உலகம் ஒரு இனத்தை ஆண்டான் அடிமையாக இத்தனை காலம் சித்தரித்து அடிமையாக வைத்திருப்பதை எண்ணி வெட்கப்படவேண்டும்.
அதை விடுத்து கலாச்சாரம் – பண்பாடு என்ற பெயரில் பெண்களை தங்களைத் தங்களே அடிமையாக வாழ வைக்கும் முறைகளை கடந்து தெளிவு பெற்று அறிவார்ந்த மனிதர்களாக வெளிவர வேண்டும் – தந்தை பெரியாரின் கருத்துகளை சிந்தனைகளை கற்று தெளிந்தவர்களாலேயே நல்லவைகளை தெரிந்து கொண்டு தங்களைத் தாங்களே மேம்படுத்திக்கொள்ளும் மனிதர்களாக முடியும். நல்ல சமூகத்தினை உருவாக்கும் முயற்சி. பாலின சமத்துவத்தை நோக்கி நகர்வதே, பெண் இனத்திற்கு நாம் செய்யும் கடமை!