மும்பை புறநகரில் பாஜக கூட்டணியில் உள்ள ஷிண்டே ஆதரவு சிவசேனா கட்சியின் பிரமுகர் நடத்தும் பள்ளியில் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகினார். இது தொடர்பாக மும்பையில் கடுமையான போராட்டம் வெடித்தது. பதலாபூர் ரயில் நிலையம் ஒரு நாள் முழுவதும் இயங்கவில்லை.
இந்த நிலையில் குற்றவாளி என்று கூறிக்கொண்டு அப்பள்ளியில் வேலைபார்க்கும் துப்புரவுத் தொழிலாளி அக்ஷய் ஷிண்டே என்பவரைக் கைதுசெய்தனர்.
மகாராட்டிராவில் ஆகஸ்ட் 23ஆம் தேதி நடந்த இந்த நிகழ்விலும் தேர்தல் ஆதாயம் பார்க்க மகாராட்டிரா துணை முதலமைச்சரும் உள்துறை அமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ் திட்டமிட்டார்.
குறிப்பாக அந்தப் பள்ளி பாஜக ஆதரவு பெற்ற நபரான பதலாப்பூர் நகர மேயரின் உறவினருக்குச் சொந்தமாக இருப்பதால் அப்பள்ளியின் மீது – நீண்ட போராட்டத்திற்குப் பிறகும் – எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது பெரும் பிரச்சினையாக உருமாறிக்கொண்டு இருக்கும் போது தேர்தலுக்கான வாக்குகளை அறுவடை செய்ய திட்டமிட்ட தேவேந்திர பட்னாவீஸ் கைது செய்யப்பட்ட நபரை என்கவுண்டர் செய்ய மறைமுகமாக உத்தரவிட்டார் என்று உள்ளூர் மராட்டிய நாளிதழ்கள் எழுதின. அதற்கு வலு சேர்க்கும் வகையில் நிகழ்வுகள் நடந்தது
நவி மும்பை தலோஜா சிறையில் இருக்கும் பாலியல் வன்கொடுமை குற்றவாளி அக்ஷய் ஷிண்டேயை மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். கைவிலங்கிட்டு அழைத்துச்சென்ற போது திடீரென குற்றவாளி காவல் துறை ஆய்வாளரின் கைத்துப்பாக்கியை எடுத்து சுட முயன்றதால் உடனடியாக மற்றொரு ஆய்வாளர் தனது துப்பாக்கியால் குற்றவாளியை நோக்கி சுட்டார் என்று கூறப்பட்டது. குண்டு குற்றவாளி தலையில் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
குற்றவாளி என்கவுண்டர் செய்யப்பட்ட மறுநாள் மும்பை நகரெங்கும் தேவேந்திர பட்னாவிஸ் கையில் துப்பாக்கியை வைத்துள்ளது போன்று மராட்டியில் – ‘பதலா பூரா’ (பழி தீர்த்துக்கொண்டார்) என்று பதாகைகளை வைத்தனர்.
அதன் பிறகு சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை அமைப்பினரின் அய்யம் வலுவடைந்தது.
பாலியல் குற்றம் நடைபெற்ற பள்ளி நிர்வாகத்தின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அப்பள்ளியில் பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பெற்றோர்கள் பல முறை புகார் அளித்ததும் தொலைக் காட்சி பேட்டிகளில் வெளிவந்தது.
இந்த நிலையில் என்கவுண்டர் நிகழ்வு நடந்த போது காவல்துறை அதிகாரிகளின் நடவடிக்கையும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
குற்றவாளி அக்ஷ்ய் சிண்டேவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் காவல்துறை ஆய்வாளர்களிட மிருந்து துப்பாக்கியை பிடுங்கி சுட்டதாக குறிப்பிட் டுள்ளனர். துப்பாக்கியில் குண்டு இருந்ததா? அப்படியே இருந்தாலும் அதைச் சுடுவதற்கு குறைந்தபட்ச பயிற்சி தேவை. பொதுவாக சமூகவிரோதிகள் துப்பாக்கியால் சுட்டு பழகியிருப்பார்கள். அவர்கள் காவல்துறையினரின் துப்பாக்கியை பறித்து சுடுவதற்கு வாய்ப்புகள் உண்டு, ஆனால், 8ஆம் வகுப்புகூட தாண்டாத அக்ஷய் ஷிண்டே துப்பாக்கியை எடுத்துச் சுடும் அளவிற்கு திறமையானவர் கிடையாது.
மேலும் காவல்துறை ஆய்வாளர்கள் இடுப்பில் உள்ள பெல்டில் பிரத்தியேகமாக செய்யப்பட்ட பகுதியில் துப்பாக்கியை வைப்பார்கள். அதனை எடுக்க முதலில் கீழே ஒருமுறை அழுத்தினால் கவரின் லாக் விலகும். அதன் பிறகு பட்டனை விலக்கி கவரில் இருந்து துப்பாக்கியை எடுப்பார்கள். குற்றவாளி இவ்வாறு காவல்துறை அதிகாரியின் பெல்ட் கவரில் இருந்து துப்பாக்கியை எடுத்து வேறு நபரை சுட முயல்வது கிட்டத்தட்ட இயலாத காரியம்.
அப்படி இருக்க பாதுகாப்பிற்காக துப்பாக்கியால் சுட்டோம் என்று மும்பை காவல்துறையினர் கூறுவது நம்ப இயலாத ஒன்று ஆகும். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் 23.10.2024 அன்று விசாரணைக்கு வந்த போது, மகாராட்டிய மாநில அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பிரேந்திர சாரப், ‘‘காவல்துறை விசாரணை அறிக்கையில், ஒரு அதிகாரி கடமை தவறியது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான அறிக்கை காவல் ஆணையருக்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார்.
மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க. வெற்றி பெறுவது மிகவும் சிக்கலான ஒன்றாக இருப்பதால் பள்ளி நிர்வாகத்தின் தவறால் நடந்த பாலியல் சீண்டல் நிகழ்வில் அப்பாவி ஒருவர் மீது பழியைப் போட்டு அவரை வில்லனாக காட்டி தேவேந்திர பட்னாவிஸை கதாநாயகனாக காட்டி தேர்தலுக்காக வெளியான படம் ‘பதலாபூர்’ (பழிவாங்கி விட்டோம்) என்று மராட்டிய மாநில எதிர்கட்சியினர் கூறிவருகின்றனர்.