பாணன்
பா.ஜ.க. தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் அந்த மாநில உரிமைகள் மட்டுமல்ல, அந்த மாநில தன்மான உணர்விற்கும் பங்கம் வரும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
கருநாடக மாநிலம் பெங்களூரு மெட்ரோபாலிடன் நகரம். அதாவது தொழில் வளர்ச்சி மற்றும் மென்பொருள் வளர்ச்சியில் முன்னேற்றம் கண்ட நகரம்.
இதன் காரணமாக குறிப்பாக வட இந்தியாவில் இருந்து மென்பொருள் பட்டதாரிகள் அதிகம் பெங்களூருவிற்கு படைஎடுக்கின்றனர். அவர்களுக்குள் குறிப்பாக வட இந்திய பெரு நிறுவன உயரதிகாரிகள் பெங்களூருவிலேயே குடும்பத்தினரையும் தங்களது ஊர்க்காரர்களையும் அழைத்து வந்து குடியேறுகின்றனர்.
இந்த நிலையில் பெஙகளூரு புறநகர் எலக்ட்ரானிக் சிட்டி அருகில் உள்ள அனிக்கேல் செந்தன்புரா பகுதியில் பிளாட்டுகளை (நிலம்) வாங்கி தொடர் வீடுகளைக் கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் செந்தன்புரா நகர நிர்வாகம் அங்குள்ள சாலைகளுக்கு கன்னட கவிஞர்கள் மற்றும் கன்னட சுதந்திரப் போராட்ட தியாகிகள் பெயரைச் சூட்ட முடிவு செய்து தீர்மாணம் நிறைவேற்றியது.
இதன்படி, வட இந்திய மொன்பொறியாளர்கள் அதிகம் குடியிருக்கும் பகுதியான அனிக்கேலில் பதாகை ஒட்டியபோது அதற்கு வட இந்தியர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், நகர நிர்வாகம் வைத்த பெயர் பலகைகளை ஆட்களை வைத்து பெயர்த்து சாலையில் வீசினர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவவே கன்னட மொழி ஆர்வலர்கள் அங்கு வந்து இதை ஏன் செய்தீர்கள் என்று கேட்டனர்.
அதற்கு, “நாங்கள் வங்கியில் கடன் வாங்கி வீடுகளை வாங்கி குடியிருக்கிறோம். இது எங்கள் பகுதி, இங்கே அனைவரும் வருவார்கள். அப்படி வருபவர்களுக்கு கன்னடத்தில் பெயர் பலகை இருந்தால் எப்படி புரியும். ஆகவே, ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் நாங்களே வைத்துக்கொள்கிறோம்” என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளனர். நகர நிர்வாகம் வைத்துள்ள பலகைகளை அகற்றுவது சட்ட விரோதம் என்று கூறிய போதும் அப்பகுதியில் உள்ள பெயர்ப் பலகைகளை அகற்றி வீசி உள்ளனர்.
கன்னட மண்ணில் வந்து குடியேறிவிட்டு கன்னட மொழி பெயர்ப் பலகை வைக்கக் கூடாது என்று அழிச்சாட்டியம் செய்யும் வட இந்தியர்கள்.
இந்த விவகாரத்தை உடனடியாக பெங்களூர் நகர காவல் துறை கையிலெடுத்தது. சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். இதை உடனடியாக கவனத்தில் எடுக்கவேண்டும் என்று அனிக்கேல் பகுதி காவல்துறை உயரதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் விசாரிக்கச் சென்ற காவல் துறையினரிடம், “இது நகராட்சி எல்லை. இது எங்கள் சொந்த இடம். இது நாங்கள் பணம் கொடுத்து வீடு வாங்கியுள்ளோம். உள்ளூர் மக்கள் அவர்கள் வந்து மொழி விளம்பரம் செய்வார்களா? இதை நாங்கள் எப்படி அனுமதிக்க முடியும்? முடியவே… முடியாது” என்று சட்டம் பேசி வாக்குவாதம் செய்துள்ளனர்.
அதன் பிறகு நிர்வாக அதிகாரிகள் அங்கு வந்து கருநாடக அரசின் பெயர்ப் பலகை தொடர்பான சட்டதிட்டங்களை அவர்களுக்கு எடுத்துக்கூறி, பெயர்ப் பலகைகளை வைக்க அனுமதி மறுத்தால் உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று எச்சரித்தனர்.
இந்த நிலையில் கன்னட அமைப்பினர் ஒன்று திரண்டு வந்து போராட்டம் நடத்தும் சூழல் உருவாகிவிட்டது.
பெயர்தெடுக்கப்பட்டும் முன்பு இருந்த பெயர்பலகை கன்னட பெயர்ப்பலகையைப் பெயர்த்து வீசும் குடியிருப்பு வாசிகள்
அந்த உயர்வகுப்பைச் சேர்ந்த வட இந்தியர்கள் குடியிருக்கும் பகுதியில், வீடு வாங்கிய சில உயர்ஜாதி கன்னட குடும்பங்களும் ஹிந்திக்காரர்களுக்கு ஆதரவாக பேசத் துவங்கிவிட்டனர். கன்னடப் பெயர்ப் பலகைக்கு அனுமதி கொடுத்தால் நாளை இப்பகுதியில் உள்ள கன்னடர்களும் பல்வேறு கோரிக்கைகளை வைத்து எங்களின் தனி உரிமையில் தலையிடும் சூழல் வரும் என்று பேசினர்.
இதனால் மேலும் வெகுண்ட கன்னட அமைப்பினர் ஹிந்திக்காரர்களோடு சேர்ந்து உங்கள் கன்னட உணர்வும் செத்துப் போய்விட்டதா? நீங்கள் இம்மண்ணிலேயே பிறந்து, இம்மண்ணின் மொழியையே பேசி வளர்ந்தவர்களாக இருந்தால்தானே உங்களுக்கு மொழி மீது பாசம் வரும். நீங்கள் எங்கு சென்றாலும் அந்தந்தப் பகுதி மக்களின் போர்வைக்குள் புகுந்துகொண்டு நாங்களும் உங்களில் ஒருவனே என்று பேசுவீர்கள். ஆனால், பிரச்சினை என்று வரும் போது போர்வைக்கு தீ வைத்துவிட்டு ஓடிவிடுவீர்கள் என்று கடுமையான கண்டனங்களைத் தெரிவித்ததும் அவர்கள் பின்வாங்கி விட்டனர்.
கருநாடக காவல்துறை அனிக்கேல் பகுதி காவல்துறை கண்காணிப்பாளருக்கு கன்னட மொழியை அவமானம் செய்தவர்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க அனுப்பிய சமூகவலைதளத் தகவல்
நீண்ட வாக்குவாதத்திற்குப் பிறகு கன்னட பெயர்ப் பலகைகளை வைக்க அனுமதி அளித்து அவரவர் வீடுகளுக்குத் திரும்பினர்.
அப்போது ஹிந்திக்கார பெண்மணி ஒருவர் பெயர்ப் பலகை மீது ஸ்டிக்கர் ஒட்டினால் என்ன செய்வீர்கள் என்று கேட்டுக்கொண்டே சென்றுவிட்டார்.
தற்போது பெயர்க்கப்பட்ட கன்னட கவிஞர்கள், அறிஞர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர் பொறித்த வீதிப் பலகைகளை மீண்டும் அங்கு வைக்க நகர நிர்வாக உத்தரவிட்டுள்ளது. அதற்கான கட்டணத்தையும் குடியிருப்பு வாசிகளிடமிருந்து வசூலிக்க உத்தரவிட்டுள்ளது.
கன்னட மொழி பெயர்ப் பலைகை எல்லாக் குடியிருப்பு பகுதியிலும் வேண்டும் என்ற தீர்மாண ஆணை நகல்.