“ரெங்கநாதா, நீ இருக்கும் பட்டணத்தில் நாயாக நான் பிறக்க வேண்டும்”

2 Min Read

சிறீரங்கநாதர் ஸ்தோத்திரம் ஏகாதசியன்று இரவில் விழித்திருக்கும்போது, இந்த ஸ்தோத்திரத்தை 1008 முறை சொல்பவர்களுக்கு, இப்பிறவியில் செல்வ வளமும், பின்னர் பிறப்பற்ற நிலையும் அமையும்.

காவிரி நதியின் நடுவில் ஏழு மதில்களால் சூழப்பட்டு, நடுவில் தாமரை மொட்டுப் போன்று விளங்கும் விமானத்தின் கீழ், மிகவும்மென்மையான ஆதிசேஷனின் உடலாகிய கட்டிலில் யோகநித்திரையில் துயில்பவரும்,இடது கையை இடுப்பில் வைத்திருப்பவரும், சிறீ தேவியும், பூதேவியும் தூக்கி நிற்கும் திருப்பாதங்களைக் கொண்டவருமான சிறீரங்கநாதரை வணங்குகிறேன்.

கஸ்தூரி திலகம் இட்டவரும், காதுவரை நீண்டிருக்கும் திருக்கண்களைக் கொண்டவரும், முத்துக்களால் இழைக்கப்பட்ட கிரீடத்தைச் சூடியவரும், தன்னைத் தரிசிப்பவர்களின் மனத்தைக் கொள்ளை கொள்பவரும், தாமரை மலர் போன்ற திருமுகத்தைக் கொண்டவருமான ரங்கநாதரே! உம்மை மறுபடியும் எப்போது பார்ப்பேன்?

காவிரிக்கரையின் அருகில் வீற்றிருப்பவரும், இந்திர நீலமணியைப் போன்ற பிரகாசமுடையவரும், மது என்னும் அரக்கனைக் கொன்றவருமான ரங்கநாத மூர்த்தியே! உம்மை நாராயணா! ஹே முராரே! ஹே கோவிந்தா! என்று திருநாமங்களைச் சொல்லி மகிழும் பாக்கியம் என் வாழ்நாளில் எப்போது கிடைக்கும்?

எப்போது காவிரியில் ஸ்நானம் செய்து என் பாவங்களைப் போக்குவேன்? அடர்ந்த மரங்களைக் கொண்டதும், ரம்மியமானதும், பசுமையானதுமான காவிரிக் கரையில் எப்போது நான் வாசம் செய்வேன்? ஆதிசேஷன் மீது துயில்பவரும், செந்தாமரைப்பூ போன்ற கண்களைக் கொண்டவருமான சிறீரங்கநாதரை எப்போது சேவிப்பேன்?

தேவேந்திரனின் அமர லோகத்தில் வாசம் செய்து, தேவாமிர்தத்தைப் பருகும் பாக்கியம் எனக்கு வேண்டாம். சிறீரங்க நாதா! உம் பட்டணத்து வீதியில் திரியும் நாயாகப் பிறக்கும் பாக்கியத்தை எனக்கு கொடுப்பீராக.

சிறீரங்கத்தையும், காஞ்சிபுரத்தையும், திருப்பதியையும், அஹோபிலத்தையும், சிம்மாசலத்தையும் (சோளிங்கர்), கூர்மத்தையும் (ஆந்திரா), புருஷோமத்தையும், பத்ரிகா சிமரத்தையும், நைமி சாரண்யத்தையும், அழகு பொருந்திய துவாரகா பட்டணத்தையும், பிராயாகையையும், மதுரா புரியையும், அயோத்தியையும், கயாக்ஷேத்திரத்தையும், புஷ்கரத்தையும், சாளக்கிராமத்தையும் நேரில் கண்டு உம் திருப்பாதங்களை சேவிக்கும் பாக்கியத்தை அருள் செய்வீராக.
‘பசியாக இருக்கிறது. அதனால், உடம்பு நடுங்குகிறது’ என்று கூறினால் கருணை கொண்ட தாய், எப்படி குழந்தையை நோக்கி ஓடிவருவாளோ, அதுபோல பக்தர்களின் துன்பத்தைப் போக்க ஓடிவந்து அருள்செய்யும் ரங்கநாதரே! உம்மைப் பணிந்து வணங்குகிறேன்.

– ‘தினமலர்’ (28.12.2009)

“நாயாகப் பிறக்க வேண்டும் – ஆத்திகம்
“மனிதனாக வாழ வேண்டும்” – நாத்திகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *