பா.ஜ.க. மாநில செயலாளர் அஸ்வத்தாமனாம்.
சிறீரங்கம் ரெங்கநாதன் கோயிலுக்கு முன் கடவுள் இல்லை என்று சொல்லும் ஈ.வெ.ரா. சிலை இருக்கலாமா? அது முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என்று தொடை தட்டியுள்ளார்.
(தினமலர் 13.10.2024 , சென்னைப் பதிப்பு, பக்கம் 4)
தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக சில சில்லுண்டிகள் இப்படியெல்லாம் உளறுவது வே(வா)டிக்கைதான்.
“அரசனை எனக்குத் தெரியும். ஆனால், என்னை அரசனுக்குத் தெரியாது” என்ற ஒரு சொலவடை உண்டு.
அதுதான் இப்பொழுது நினைவுக்கு வந்து தொலைகிறது. தந்தை பெரியார் போன்ற உலகத் தலைவரைப் பற்றி தன் அறிவு ‘முற்றிய’ வகையில் ஒருவர் உளறினால் அதனை அப்படியே வெளியிடுவதற்கென்று திரிநூல் ‘தினமலர்’கள் இருக்கத்தானே செய்கின்றன!
ஓர் உண்மையை அந்த உளறுவாயர் தன்னை அறியாமலேயே ஒப்புக் கொண்டுள்ளார்.
பெரியார் திடலுக்கோ, அண்ணா அறிவாலயத்துக்கோ செல்பவர்கள் மூளை குறைபாடு உடையவர்கள் என்று கல்வெட்டு வைக்கப் போகிறார்களாம்.
புத்தி குறைவானவர்கள் வருவது நல்லதுதான்; அப்பொழுதுதானே அவர்கள் புத்தி தெளிந்து பகுத்தறிவு வாதியாக – மனிதனாக ஆக முடியும்! அஸ்வத்தாமன் போன்றவர்கள் தாராளமாக வரலாம். அதில் அட்டியில்லை. பெரியார் திடலிலும், அண்ணா அறிவாலயத் திலும் நூலகங்கள் உள்ளன.
இதுகள் அரைகுறைகள் என்பதற்கு என்ன அடையாளம் தெரியுமா? சிறீரங்கம் ரெங்கநாதன் கோயிலுக்கு எதிரே உள்ள தந்தை பெரியார் சிலை பீடத்தில் என்ன வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது என்பதைக் கூடத் தெரிந்து கொள்ளும் பொறுப்புணர்ச்சியோ, யோக்கியதையோ இல்லாமல் இப்படிக் கண்டபடி உளறினால், அவர்களுக்குப் பெயர்தான் சங்கிகள்!
சிறீரங்கம் சிலையில் தந்தை பெரியார் சொல்லும் அந்த வாசகங்கள் இல்லை என்பதுதான் உண்மை!
இவர்களின் நம்பிக்கையின்படி கடவுள்தான் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பாரே, பெரியார் சிலையிலும் இருப்பார் என்று நம்பிக் கொண்டு தொலைவதுதானே! ஏன் இப்படி ஆத்திரம் கொப்பளித்துக் கிளம்புகிறது?
அப்படியே சங்கிகள் கூறும் தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகம் சிலையில் இடம் பெற்றிருந்தாலும், அதில் ஒன்றும் தவறு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் அவர்களின் தீர்ப்பு (1973) வந்தது தெரியுமா? அதன்பிறகும் நீதிபதி எஸ்.மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வும் அதே தீர்ப்பை வழங்கியது என்பது தெரியுமா? (2019 செப்டம்பர் 4).
பெரியார் சிலையை அவமதிக்கும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் காவல் துறையினர் அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லுவதுண்டு.
ஆமாம், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்தான் இத்தகைய செயலில் ஈடுபடுவார்கள்!
கொஞ்சம் அறிவு இருந்தால், காலில் மிதித்தால் சாணி, அதே சாணியை உருட்டி வைத்தால் சாமி என்கிறாயே – மாட்டு மூத்திரத்தைப் பக்தியின் பெயரால் குடிக்கிறாயே. பக்தி வந்தால் புத்தி போகிறதே – மனிதன் என்றால் பகுத்தறிவுவாதி அல்லவா என்று தந்தை பெரியார் கூறும் கருத்தைக் கொஞ்ச நேரம் யோசித்தால் போதுமே! புத்தி வந்துவிடுமே!
சிறீரங்கம் கோயிலுக்கு முன்னால் உள்ள தந்தை பெரியார் சிலை கோயிலுக்குச் சொந்தமானதாம்! ஆதாரம் இருந்தால் எடுத்து நீட்ட வேண்டியதுதானே!
முறைப்படி, நகராட்சி தீர்மானம் போட்டு, அரசு அனுமதி பெற்று வைக்கப்பட்ட சிலைதான் அது என்பது கூடத் தெரியாமல் பக்திப் போதை ஏறி உளறலாமா? அரசுக்குச் சொந்தமான இடங்களிலும், நடைபாதைகளிலும் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கோயில்களை வழிபாட்டுத் தலங்களை அகற்றிட வேண்டும் என்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் கூறியுள்ளது பற்றி இந்த சங்கிகளுக்குத் தெரியுமா?
தந்தை பெரியார் திருக்குறளை மலம் என்று சொன்னராம். எங்கே சொன்னார்? எப்பொழுது சொன்னார்? உப்புப் போட்டு சோறு தின்பவர்களாக இருந்தால் ஆதாரத்தோடு சொல்லட்டுமே – சந்திக்கத் தயார்.
சிறீரங்கநாதனுக்குச் சக்தியிருந்தால், கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியார் சிலையை தன் அக்னிக் கண்ணால் பொசுக்கி இருப்பாரே!
1959இல் இந்த சிறீரங்கம் கோயில் தீப்பற்றி எரிந்த கதை தெரியுமா? இப்பொழுதுள்ள அந்தச் சிலை புதுப்பிக்கப்பட்டதுதானே.
முஸ்லிம்கள் படை எடுப்புக்குப் பயந்து ரெங்க நாதனையும், நாச்சியாரையும் லோகாச்சாரியும் சிலரும் கடத்திக் கொண்டு போய் பதுக்கி வைத்த படலம் தெரியுமா?
இதனை நாங்கள் ஏதோ இட்டுக்கட்டிச் சொல்லவில்லை. ஆர்.எஸ்.எஸின் அதிகாரப்பூர்வ ஏடான ‘விஜய பாரதம்’ (11.11.2011 – பக்கம் 6, 7) சாங்கோ பாங்கமாக வெட்கம் சிறிதுமின்றி வெளியிட்டதே!
“சிறீ பிள்ளை லோகாச்சாரியாருக்கு வயது 60 இருக்கலாம். இந்த வயதில் இரவும், பகலும் தங்காது, ஊன் உறக்கமின்றி, எப்படியாவது அரங்கனையும், நாச்சியாரையும் காப்பாற்றிவிட வேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன் செயல்பட்டது வைணவ சரித்திரத்தின் வைர எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய
வையாகும்.
அரங்கனையும், தாயாரையும் எடுத்துக் கொண்டு தொடர்ந்து ஓடோடிக் கொண்டிருந்த லோகாச்சாரியாரின் உடல் நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.”
“வைரமும், வைடூரியமும், பொன்னும், மணியும்அழகுறச் சாற்றிக் கொண்டு திருவரங்கத் திருநகரில் பல உற்சவங் களைக் கண்ட அரங்கா! இவ்விதம் உன்னை எவ்வித அணியுமில்லாமல் பார்க்கத்தான் என்ன பாவம் செய்தேன்?” என்று அழுது ஏங்கிய அவருடைய உடல் நலன் மிகவும் பாதிக்கப்பட்டது. (தன்னையும் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை; தனது பரமப் பக்தனையும் காப்பாற்ற வக்கில்லாத ரெங்கநாதன் சக்தியைப் பற்றி எப்படி எல்லாம் ‘பீலா’ விடுவார்கள் தெரியுமா?)
“அரங்கா! என் ஆருயிரே! என் ஆரா அமுதே! என் அய்யனே! பிறவி என்னும் தவத்தினால் பெற்ற என் ஆரா அமுதே! உன்னை மீண்டும் திருவரங்கத் திருத்தலத்தில் எழுந்தருளச் செய்து, தரிசிக்கும் பேறு பெறாமல் போய் விட்டேனே” என்று கதறியபடியே அரங்கனின் திருவடிகளை அடைந்து விட்டாரே அம்மகா புருஷர்! (அதாவது மரணம் அடைந்துவிட்டார்.)
அவர் மறைந்து 48 ஆண்டுகளுக்குப் பிறகு விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் மாவீரரான கம்பண்ண உடையார் அந்நியரிடமிருந்து திருவரங்க திருத்தலத்தை மீட்டு, மீண்டும் அரங்கனை அங்கே எழுந்தருளச் செய்தார்!
– இவ்வளவும் ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜயபாரதம்’ (11.11.2011) வெளியிட்டவைதான் – வெளியிட்டது ‘விடுதலை’ ஏடு அல்ல. (அடைப்புக் குறியில் உள்ளதைத் தவிர்த்து)
சிறீ ரெங்கநாதனையும், அவன் சக்தியையும் பற்றி அடேயப்பா எப்படி எல்லாம் கயிறு திரித்துள்ளார்கள்.
இன்று வரைக்கும் கூட, சிறீரங்கத்தில் உள்ள அந்தச் கோயிலில் தேங்காய் உடைக்க மாட்டார்கள். காரணம் என்ன தெரியுமா? அவர்தான் தூங்கும் (சயனம்) கடவுள் ஆயிற்றே! தேங்காய் உடைத்தால் அந்த சத்தம் கேட்டு விழித்துக் கொள்வாராம்.
ஒரு பொம்மையைப் படுக்க வைத்து, எப்படி எப்படி எல்லாம் கதை கட்டி சுரண்டல் தொழிலை நடத்துகிறார்கள் பார்த்தீர்களா?
உண்மையிலேயே ஒரு கல்லில் கடவுளை எப்படி கொண்டு வருகிறோம் என்று எத்தனையோ கோயில்களில் கடவுள்களைச் செதுக்கியவர் – கன்னியாகுமரியில் 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலையை செதுக்கிய பிரபல சிற்பி கணபதி ஸ்தபதி சொல்லுவதைக் கவனிக்கலாமா?
“ஒரு கடவுள் சிலையை வடிவமைக்கிறதுன்னா சும்மாவா? யார் பார்த்திருக்காங்க கட வுளை? அவர் எப்படி யிருப்பார்னு யாருக்குத் தெரியும்? எங்களால் மட்டும் எப்படி அத்தனைத் தத்ரூபமா ஒரு கல்லுல அவரைக் கொண்டுவர முடியுது? கோயிலுக்குப் போன உடனே அந்தச் சிலையைப் பார்த்து ஏன் அத்தனைப் பரவசப்படறீங்க?
நீங்க அனுபவிக்கிற பரவசத்தை, பக்தியைக் கொண்டு வரணும்னா ஒரு கல்லு, சிலையா மாறணும். அந்தக் கல்லுக்கு உயிர் வரணும். அப்பத்தான் கையைக் கூப்பி வணங்க முடியும். அந்த உயிரை யாரு கொடுக்குறாங்க? நாங்கதானே? எங்ககிட்ட அப்படி என்னதான் வித்தை இருக்குன்னு தெரிஞ்சுக்கவேண்டாமா?”
(பிரபல சிற்பி கணபதி ஸ்தபதி, 11.6.2006 கல்கி இதழில்).
சிறீரங்கநாதர் கோயிலுக்கு முன் கடவுள் மறுப்பாளரான பெரியாரின் சிலை இருப்பதா என்று சிலிர்த்தெழும் அஸ்வத்தாமன்கள் (பா.ஜ.க. மாநில செயலாளர்) இவற்றிற்கெல்லாம் முடிந்தால் பதில் சொல்லட்டும் பார்க்கலாம்!
‘கடவுளை’ மனிதன் கற்பிக்கிறான், காப்பாற்றுகிறான்! இந்த லட்சணத்தில் கடவுள்தான் நம்மைக் காப்பாற்றுகிறான் என்பது நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வதே என்பதைப் புரிந்து கொள்க!