* சொன்ன சொற்படி நடப்பது நீதிக்கட்சியே!
* பெரியார் அவர்களின் வீர கர்ஜனை!
குருவிகுளம் மாஜி ஜமீன்தார் பி.என். கொண்டல்ராய சுவாமி நாயுடு காரு அவர்களின் 7ஆவது பிரிவு விழா கொண்டாட்ட வைபவத்தின் பொருட்டு நடந்த கூட்டத்திற்கு, கிராமவாசிகள் அழைப்பிற்கிணங்கி தோழர் ஈ.வெ. ராமசாமிப் பெரியார் விஜயம் செய்திருந்தார். கூட்டத்திற்கு பல பாகங்களிலிருந்தும் சுமார் 2000 ஜனங்கள் வரை வந்திருந்தனர். இந்தக் கூட்டத்திற்கு தலைமை வகித்த இளையரசனேந்தல் முதல் பாகம் ஜமீன்தார் அவர்களும் தோழர் ஈ.வெ.ரா. அவர்களும் மேள வாத்தியத்துடன் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள். அப்போது குருவிகுளம் நகர்வாசிகளின் சார்பாக சபைத் தலைவர் அவர்களுக்கும், நம் சுயமரியாதை இயக்கத் தலைவர் தோழர் ஈ.வெ.ரா. அவர்களுக்கும் யூனியன் போர்டு தலைவர் திரு. கிருஷ்ணபிள்ளை அவர்களால் வரவேற்பு உபசாரப் பத்திரங்கள் வாசித்துக் கொடுக்கப்பட்டன. பின் தலைவர் வரவேற்பு பத்திரத்திற்கு பதில் கூறி, தோழர் ஈ.வெ.ரா. அவர்களை கூட்டத்திற்கு அறிமுகம் செய்து வைத்து, ‘அரசியல் நிலையும், சமூக சீர்திருத்தமும்’ என்பது பற்றிப் பேசும்படி கேட்டுக்கொண்டார். பின் தோழர் ஈ.வெ.ரா. . பேசியதின் சாராம்சமாவது:
தோழர்களே! ஜாதி மத புராணங்கள் ஒழிய வேண்டுமென்று கூறுகிற எனது கொள்கைக்கு நாட்டில் இருக்கும் எதிர்ப்பைப்பற்றி உங்களுக்குத் தெரியும். அப்படியிருந்தாலும் ஆங்காங்கு பல வாலிபர்கள் வீரத்துடன் முன்வந்து சீர்திருத்தத்திற்காகப் பாடுபட முன்வருவது கண்டு நான் நன்றி செலுத்துகிறேன்.
இப்போது உலகத்தில் சீர்திருத்தமானது வெகு விரைவாகப் பரவி வருகிறது. நாட்டில் அரசியல் சம்பந்தப்பட்டவரை கட்சி வாதங்களும், அபிப்பிராய பேதங்களும் இருந்தாலும் கூட, சீர்திருத்த விஷயத்தில் எல்லோரும் ஒருமுகமாக உழைக்க முன்வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நிச்சயமாகும். சீர்திருத்தத்தின் வேகத்தினாலேயே வைதிகம் கொழுத்த திருவாங்கூர் ராஜ்யத்திலே ஊறிக்கிடந்த தீண்டாமை நோயானது விலகத் தலைப்பட்டு, மக்களுக்கு ஏற்பட்ட சமூக சுதந்திரத்தை வழங்கத் திருவாங்கூர் அரசர் முன்வந்துவிட்டார். இதிலிருந்து நாளடைவில் நாட்டில் ஏற்பட்டு வரும் திருத்தங்களைப் புறக்கணிக்க இனி மேல் மக்களால் முடியாததாகும். மக்களோ இன்னும் பழைய மூடப்பழக்க வழக்கங்களை நம்பி, டாம்பீக வாழ்க்கையில் ஈடுபட்டு, வீணாகப் பணம் விரயம் செய்து கடனாளியாவதற்கு முதற்காரணம், நம்மில் பகுத்தறிவில்லாமையேயாகும். வருவாய் வராமலிருக்கிறதா? அல்லது விளையாமலிருக்கிறதா? அப்படி ஒன்றும் இல்லாதிருந்தும் கடன்படவேண்டிய அவசியம் என்ன என்பது பற்றி சற்று சிந்தியுங்கள். இரண்டணா தினக் கூலி வாங்கக்கூடிய ஏழை நாட்டில் ஒருவருக்கு கல்யாணத்திற்கு 1000-க் கணக்கில் செலவு செய்தால் அதனால் ஏற்படும் நஷ்டம் யாருக்கு? மணமக்களை சாருகிறதென்பதை பெற்றோர்கள் உணரவேண்டும். அதேபோல், கோவில், குளம் விஷயமாயும் திருவிழாக்களுக்கும், பண்டிகை நாளுக்கும் கண்மூடித்தனமாக வீணாய் பணத்தைச் செலவிடுவது போன்ற பழக்க வழக்கங்களை அறவே ஒழித்து பகுத்தறிவைப் பயன்படுத்தி முன்வரவேண்டுமென்று பேசியபின் அரசியலைப் பற்றி ஈ.வெ.ரா. பேசியதின் சாராம்சமாவது:
தோழர்களே! அரசியல் என்பது ஒரு பெரிய விஷயமாகும். அது பல கட்சிகளால் நடத்தப்பட்டு வருகிறது. அந்தக் கட்சிகள் எதற்காக ஏற்பட்டது? என்ன செய்கிறது? என்பதை பொது மக்கள் உணர்ந்து நடக்க வேண்டியவர்களாகிறார்கள். சுமார் 50 வருடத்திற்கு முன் சர்க்கார் உத்தியோகங்களையும் பதவிகளையும், தனி மனிதர்களே தங்கள் பொறுப்பில் அடைந்து வந்தார்கள். இப்போது அதே உத்தியோகங்களை கட்சியின் பேரால் ஒரு கூட்டத்தினரே பெற முயற்சிக்கிறார்கள். அப்படி முயற்சிப்பவர்களில், காங்கிரஸ், ஜஸ்டிஸ், ஜனநாயகம் என்பன போன்ற கட்சிகள் கிளம்பி உள்ளன. இந்தக் கட்சிகள் ஒவ்வொன்றும் எந்நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது; என்ன செய்து வருகிறது என்பதை பொது மக்கள் உணர்வதற்கு முயற்சிக்க வேண்டும்.
காங்கிரஸ் ஏற்பட்டதன் முதல் நோக்கம், சர்க்கார் உத்தியோகம் பெறுவதற்காகவே சர்க்கார்தாசர்களால் ஆரம்பிக்கப்பட்டு, அதன் மூலம் உத்தியோகம் பெற்று
வந்தார்கள். அந்த உத்தியோகங்களை ஒரு பார்ப்பன வகுப்பினர்களே அனுபவித்து வந்ததால், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் சர்க்காரிடம் சென்று முறையிட்டு எங்களுக்கு தனியான விகிதாசாரப்படி உத்தியோகம் கொடுக்க வேண்டுமென்று ஏற்பாடு செய்தார்கள். அதன்பின் நாளடைவில் காங்கிரஸின் பெயரால் சகல உத்தியோகங்களையும் பார்ப்பனர்களே அனுபவிக்க முற்பட்டதால், ஜஸ்டிஸ் கட்சி என்று பார்ப்பனரல்லாதார் கட்சி ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலமாக பார்ப்பனரல்லாதார் உத்தியோகம் பெற ஏற்பாடு செய்யவே, காங்கிரஸ் திட்டமும் படிப்படியாக மாறுபட்டு வந்தது.
மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தம் வரவே, மந்திரி பதவிகளையும் மற்றும் உத்தியோகங்களையும் காங்கிரஸின் பெயரால் பார்ப்பனர் பெறமுடியாதபடி ஜஸ்டிஸ் கட்சியார் கைப்பற்றவே, காங்கிரசின் பெயரால் ஒத்துழையாமை என்றும், சட்ட மறுப்பு என்றும் கூறி சட்டசபை, உத்தியோகம், பள்ளிக்கூடம் முதலியவைகளைப் பகிஷ்கரித்ததினாலும், காங்கிரஸ்காரர்கள் பூரண சுயராஜ்யமே லட்சியம் என்ற காலத்திலும் ஜஸ்டிஸ் கட்சியார் குடியேற்ற நாட்டு அந்தஸ்தும், ஒத்துழைப்புமே நம் ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கை என்றபடி இன்றும் ஜஸ்டிஸ் கட்சியார் அதே நிலையில் தமக்குக் கிடைத்த அதிகாரத்தைக் கொண்டு அதற்கு மேற்பட்ட நன்மைகளை ஜனங்களுக்குச் செய்து வருகிறார்கள்.
காங்கிரஸ்காரர்கள் பூரண சுயராஜ்யத்தின் பேரில் ஒத்துழையாமை என்ற நிலைமையை விட்டு, இப்போது ஜஸ்டிஸ் கட்சியின் திட்டத்தின்படி, அதுவும் மாஜி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆனைமலை அய்ரோப்பியர் சங்கத்தில் பேசியதை அனுசரித்தும், சர்க்காருடன் ஒத்துழைக்கப் போவதாகக் கூறி வருகிறார்கள். இதிலிருந்து ஜனங்களிடம் சொன்ன சொற்படி நடப்பவர்கள் யார் என்பதை நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்.
ஆகையால், தோழர்களே! நீங்கள் இந்தக் காங்கிரஸ்காரர்களின் வீண் கூச்சலில் மயங்கிவிடாது, உங்கள் வாக்கு சுதந்திரத்தை (பகுத்தறிவு கொண்டு பார்த்தறிந்து) வேண்டுமென்று தெரிவித்து, முடிவுரையாக கழுகுமலை ஆள்வார்சாமி அவர்கள் கேட்டிருந்த கேள்விகளுக்கும் சீரிய முறையில் செவ்வனே பதிலிறுத்தார்.
பின் தலைவர் முடிவுரையாக அமைதியாகக் கேட்டிருந்த கூட்டத்திற்கு நன்றி செலுத்துவதாகவும், ஈ.வெ.ரா. அவர்களின் சொற்பொழிவை நாம் ஒவ்வொருவரும் நடைமுறையில் கொண்டு வரவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்கள். பின் திரு. ஆள்வார்சாமி அவர்களால் வந்தனோபசாரம் கூறப்பட்டுக் கூட்டம் கலைந்தது.
கூட்டத்திற்கு முக்கியமாக இளையரசனேந்தல் என். கொண்டல்ராயஸ்வாமி நாயுடுகாரும், கஸ்பா என் ரெங்கசாமி நாயுடுவும், திருவேங்கடம் கல்யாணசுந்தரம் அய்யரும், ஸ்ரீவில்லிபுத்தூர் முத்துசாமி தேவரும் மற்றும் பல பிரபலஸ்தர்களும் விஜயம் செய்திருந்தனர்.
– ‘விடுதலை’ 19.12.1936