ஆளுநருக்கு மாணவர் சங்கம் கடும் கண்டனம்
சென்னை,அக்.25- பாஜக மாணவர் அமைப்பின் மாநிலத் தலைவரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்க பரிந்துரை செய்துள்ள தமிழ்நாடு ஆளுநருக்கு இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தவ்.சம்சீர் அகமது, மாநிலச் செயலாளர் கோ.அரவிந்தசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சிண்டிகேட்டில் 3 நபர்களை உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ள வேந்தர் என்ற முறையில் ஆளுநர் பரிந்துரை வழங்கியிருக்கிறார். அதில் சவிதா என்பவர் ஆர்.எஸ்.எஸ்.சின் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் தென் தமிழ்நாடு மாநில தலைவர் ஆவார். ஆளுநர் தனது அதிகாரத்தின் மூலம் குறிப்பிட்ட அரசியல் சித்தாந்த நபர்களை மாநில பல்கலைக்கழகங்களில் நியமித்திருப்பது என்பது கல்வி நிறுவனங்களை காவிமயமாக்கும் ஆர்.எஸ்.எஸ் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இதனை அரசமைப்பு வழங்கியிருக்க கூடிய பொறுப்பில் இருக்கும் நபர் செய்திருப்பது சட்டத்துக்கு புறம்பானது. ஆளுநரின் இந்த நியமனத்தை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிப்பதோடு, அதனை திரும்பப்பெற வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது. இதில் மாநில அரசாங்கம் உரிய தலையீடு செய்ய வேண்டும். ஜனநாயக அமைப்புகள் இதனை எதிர்த்து குரல் எழுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.