சென்னை, அக்.25 பேறு காலத்தில் பல்வேறு உடல் நல அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் கர்ப்பிணிகளைக் கண்டறிந்து அவர்களது பிரசவ சிகிச்சையை பாதுகாப்பாக மேற்கொள்வதற்கான சிறப்புத்திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை நடைமுறைப்படுத்தியுள்ளது.
பொது சுகாதாரத் துறையின்கீழ் செயல்படுத்தப்படும் அந்தத் திட்டத்தின் கீழ், பிரசவத்தை எதிர்நோக்கியிருக்கும் பெண்களின் தரவுகளைச் சேகரித்து அவர்களுக்கு இணை பாதிப்புகள் உள்ளனவா என்பதை அறிந்து ஒருங்கிணைந்த அவசர கால மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல (சீமாங்) மருத்துவ மய்யங்களில் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
அதன்படி, நவம்பரில் பிரசவ சிகிச்சைக்கு காத்தி ருக்கும் 76,473 கர்ப்பிணிகளில் 29 சதவீதம் பேருக்கு உடல் நல அச்சுறுத்தல்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை முன்கூட்டியே அருகில் உள்ள சீமாங் மய்யங்களிலோ அல்லது அவர்கள் விருப்பப்படும் உயர்வசதிகள் கொண்ட தனியார் மருத்துவமனைகளிலோ அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகம் கூறியதாவது: தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்புகளைக் கட்டுப்படுத்த பல்வேறு செயல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. தாய் மற்றும் குழந்தைகளின் உயிர் காக்கும் உயர்சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
அதன் தொடர்ச்சியாக தற்போது இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பொதுவாகவே பேறு காலத்தில் உயிழப்பு நேரிடுவதற்கு பிரசவத்துக்கு பிந்தைய அதீத ரத்தப்போக்கு, உயர் ரத்த அழுத்த பாதிப்புகள், ரத்தத்தில் கிருமித் தொற்று, இதய பாதிப்பு மற்றும் பல்வேறு நோய்கள் முக்கிய காரணமாக உள்ளன.
இதைக் கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள கர்ப்பிணிக ளில் இணை நோய்கள் உள்ளவர்கள், பிரசவ கால உடல் நல பாதிப்புகளுக்கு ஆளானவர்கள், பேறு கால சர்க்கரை நோயாளிகளைக் கண்டறிந்து சீமாங் மய்யங்களுக்கு அனுப்பி வருகிறோம்.
அதற்காக அனைத்து மருத்துவக் கட்டமைப்புகளிலும் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 129 சீமாங் மய்யங்கள் உள்ளன. அங்கு 24 மணி நேரமும் மகப்பேறு மருத்துவர்கள், அவசரகால மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளனர்.
அத்தகைய இடங்களில் உடல் நல அச்சுறுத்தல் உள்ள கர்ப்பிணிகளை அனுமதிக்கும்போது அவர்களுக்கான இடர் வாய்ப்புகள் குறைந்து பாதுகாப்பான பிரசவம் உறுதி செய்யப்படுகிறது.
‘பிக்மி’ எனப்படும் கர்ப்பிணிகள் பதிவு தளத்தில் முன்கூட்டியே பிரசவ அச்சுறுத்தல் உள்ளவர்களின் விவரங்களை பதிவேற்றி, சம்பந்தப்பட்ட. சீமாங் மய்யங்களுக்கு தகவல் அளிக்கப்படும். அதன் வாயிலாக அனைத்து ஏற்பாடுகளும் தாமதமின்றி மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.