சென்னையில் இஸ்கான் சார்பில்
மன அழுத்த மேலாண்மை வகுப்பு!
கவிஞர் கலி.பூங்குன்றன்
சென்னை – இஸ்கான் சார்பில் பகவத் கீதை வாயிலாக மன அழுத்த மேலாண்மை பற்றிய வாராந்திர வகுப்பு நடத்தப்படுகிறது.
இதுகுறித்து சென்னை இஸ்கான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: நாம் பிறந்து விட்டோம் என்பது கடந்த காலம். ஆனால் நாம் ஏன் பிறந்தோம் என்பதை அறிவது நம்மில் மாற்றத்தை ஏற்படுத்தும். பகவத் கீதை வாயிலாக இதைப் பற்றிய வாராந்திர வகுப்புகள் நடத்தப்பட இருக்கின்றன.
அந்த வகையில், அக்.13ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) இந்த வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. மேற்கு மாம்பலம், சுப்பிரமணியன் தெருவில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5 மணி முதல் மாலை 6.30 மணி வரை இந்த வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகிறது. இந்த பாடநெறி ஆன்மிகப் பாதையில் உள்ள உங்கள் சந்தேகங்களை தெய்வீக விஞ்ஞானத்தின் உதவியுடன் தீர்த்து வைக்கும். இதனால் நேர்மையாக பயிற்சி செய்பவருக்கு அமைதியும் ஆறுதலும் கிடைக்கும்.
– இவ்வாறு ஒரு செய்தி வெளிவந்துள்ளது.
இந்த 2024ஆம் ஆண்டிலும் பார்ப்பனர்கள் எதில் குறியாக இருக்கிறார்கள் என்பது கவனத்துக்கு உரியது.
தெய்வீக விஞ்ஞானத்தின் உதவியுடன் தீர்த்து வைக்கப் போகிறார்களாம் இந்த கீதாபதேசம் மூலம்.
உண்மையில் கிருஷ்ணன் என்று ஒருவன் இருந்தானா? அவன் கீதையை உபதேசம் செய்தானா என்பது பற்றி நாம் கூறுவது ஒரு புறம் இருக்கட்டும்; அமெரிக்கா வரை சென்று ‘பிராமணீசம்’ என்ற தலைப்பில் உரையாற்றிப் ‘புகழ்பெற்ற’ விவேகானந்தர் என்ன கூறுகிறார்? விவேகானந்தர் நாத்திகர் அல்லவே – கடவுள் மறுப்பாளர் அல்லவே!
விதாண்டாவாதம் பேசுகிறார் என்று கூறி ஒதுக்கித் தள்ளிட முடியாதே ஆன்மீகவாதிகளால் – இதோ விவேகானந்தர் பேசுகிறார்.
கீதை பற்றி விவேகானந்தர்
கீதை என்ற நூல் மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். கதையைச் சரிவர புரிந்து கொள்ள மிகமிக முக்கிய மான பலவற்றைப் புரிந்து கொள்ளவேண்டும்.
முதன்முதலில் மகா பாரதத்தின் ஒரு பகுதியாக அதாவது வேத வியாசர் எழுதியதா? அல்லது அதில் புகுத்தப்பட்டதா?
இரண்டாவதாக கிருஷ்ணன் என்பவர் சரித்திரரீதியாக உயிர்வாழ்ந்த ஒருவரா?
மூன்றாவதாக கீதையில் கூறப்படுவதுபோல் குருசேத்திரப்போர் உள்ளபடியே நடந்ததா?
நான்காவதாக அர்ஜுனனும் ஏனையவர்களும் உள்ளபடியே உயிர் வாழ்ந்தவர்கள்தானா? என்பன.
சொல்லுவது நாமல்ல, ராஜாஜி
ஞாபகம் இருகக்கட்டும்
சூதும் மதுவும்தான் பக்தியா?
கீதையைச் சங்கராச்சாரியார் எழுதி மகாபாரதத்தில் புகுத்தினார் என்று சிலர் கருதுகிறார்கள். எது எப்படியிருந்தாலும் சரி, யார் கீதையை வெளியிட்டிருந்தாலும் சரி குருசேத்திர யுத்தம் நடைபெற்றது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. யுத்தத்தில் கிருஷ்ணன் அர்ஜுனனுடன் எல்லையற்ற விவாதத்தில் இறங்கினான் என்றால் இதை எவ்வாறு ஏற்றுக் கொள்ளமுடியும்? அப்படியே உரையாடினார்கள் என்றால் பக்கத்தில் ஒரு சுருக்கெழுத்தாளரை வைத்துக் கொண்டாரா என்ற பிரச்சினை எழுகிறது.
அர்ஜுனன், ஏனையப் பெயர்கள் பயன் படுத்தப்பட்டுள்ளனவே தவிர இவர்கள் இருந்தனர் என்றோ, குருசேத்திர யுத்தம் செய்தனர் என்றோ கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
– விவேகானந்தர் ‘கீதையைப் பற்றிய கருத்துகள்’ என்ற நூலில், ஆதாரம் : ஏ.எஸ்.கே. அய்யங்கார் எழுதிய ‘பகுத்தறிவுச் சிகரம் பெரியார்’ என்ற நூல் – பக்கம் 117).
விவேகானந்தரின் இந்தக் கூற்றுக்கு ஒரே ஒரு வரி பதில் சொல்லிவிட்டு, வேட்டியை மடக்கிக் கட்டிக் கொண்டு நம்மிடம் கோதாவில் குதிக்கட்டும்.
விவேகானந்தர் வீசுவது வெறும் வேல் அம்பு அல்ல – வெடிகுண்டு கணையையல்லவா வீசித் தள்ளுகிறார்.
எந்த அமெரிக்காவுக்குச் சென்று விவேகானந்தர் ‘வீராவேச’ சொற்பொழிவுகளை வீசினாரோ அந்த அமெரிக்காவிற்கு கீதையைப் பற்றிய கருத்து என்ன? அதற்கும் ஆதாரம் உண்டு – இதோ:
கீதையின் ஜாதிய பிரிவினை புத்தியை
உணர்ந்த அமெரிக்கா
அமெரிக்காவின் இடஹோ மாகாண அரசு அலுவலகத்தில் பகவத்கீதை தொடர்பான வகுப்பு ஒன்றை நடத்த அம்மாகாண உறுப்பினர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான பரிசீலனையின் போது இடஹோ மாகாண உறுப்பினர் ஸ்டீவ்விக் கூறியதாவது:
‘அமெரிக்காவில் எந்த ஒரு மாகாணத்திலும் அரசு அலுவலகங்களில் பகவத்கீதை வகுப்பு களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது. மேலும், இந்துமதம் அமெரிக்க அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் அரசமைப்புச் சட்டம் தயாரிக்கப்பட்டபோது அனைத்து மதவிதிகளும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது இந்துமதம் மற்றும் அதில் உள்ள ஜாதிய பேதங்கள் குறித்து அந்த மதப் பிரதிநிதி களுடன் விவாதிக்கப்பட்டது. அந்த மதத்தில் மனிதர்களைப் பிரிக்கும் ஜாதி உள்ளது. ஆகையால், அமெரிக்க அரசமைப்புச் சட்ட நூலில் இந்துமதம் குறித்த எந்த ஒரு வாசகமும் இடம் பெறவில்லை. பகவத்கீதை மனிதர்களைப் பிரிக்கும் ஜாதியை வலியுறுத்துகிறது. பிறப்பால் ஜாதி பாராட்டும் நூல் பகவத்கீதை. பிறப்பால் மனிதர்களை ஜாதிகளாகப் பிரிக்கும், மனிதநேயமற்ற கருத்தைக் கூறும் பகவத்கீதை என்ற நூல் வலியுறுத்தும் மதம் அமெரிக்க மதச்சார்பின்மைக்கு பங்கம் விளைவிக்கும். அதை அமெரிக்க அரசு அலுவலகங்களில் படிக்கக் கூடாது’ என்று கூறியதுடன் இந்துமத வழிபாடு நடக்க எதிர்ப்புத் தெரிவித்து அந்த கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.
– 20.6.2015
மகாபாரத காலத்தில் கிருஷ்ணன் வாழவே இல்லை என்று பிரபல வரலாற்று ஆசிரியர் ஆர்.எஸ்.சர்மா முடிவாகக் கூறுகிறார்.
11ஆவது வகுப்புக்கான என்.சி.சி.ஆர்.டி. வெளியிட்டுள்ள தொன்மை இந்திய வரலாறு (ஏன்சியன்ட் இண்டியன் ஹிஸ்டரி) எனும் நூலை எழுதினார் ஆர்.எஸ்.சர்மா. (ராம் சரண் சர்மா).
அந்த நூலில், கிருஷ்ணன் மகாபாரதத்தில் முக்கிய பங்கு ஆற்றியதாக இருந்தாலும், மதுரா நகரில் கி.மு.200 முதல் கி.பி. 200 வரை கிடைக்கப் பெறும் சிற்பத் துண்டுகள், கிருஷ்ணனைப் பற்றிய தகவலைத் தரவில்லை. இதன் காரணமாக ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றின் அடிப்படையில், இதிகாச காலம் எனும் கருத்தைப் பற்றிப் பேசுவதை விட வேண்டும் என எழுதப்பட்டிருக்கிறது. இது வரலாற்று ஆசிரியர்
ஆர்.எஸ்.சர்மாவின் படப்பிடிப்பு!
கேள்வி: மகாபாரதத்தில் கிருஷ்ணன் நினைத்திருந்தால் சில நிமிடங்களில் துரியோதனன் உட்பட கவுரவர்கள் அத்தனைப் பேரையும் அழித்திருக்கலாம். ஏன் குரு சேத்திரப் போர் வரை செய்ய விட்டார்.
பதில்: முதன்முதலில் எழுதப்பட்ட மகாபாரதத்தின்படி, கிருஷ்ணன் யாதவர்களின் அரசனே தவிர, கடவுள் இல்லை. துரியோதனனிடம் பாண்டவர்களின் பிரதிநிதியாகச் சென்று ‘போர் வேண்டாம்’ என்று கருத்துரைக்க மட்டுமே கிருஷ்ணனால் முடிந்தது. அவர் கடவுள் அவதாரமாகக் கருதப்பட்டது – மிகப் பிற்பட்ட காலத்தில்தான். பிறகு கடவுளுக்குரிய அம்சங்கள் மகாபாரதத்தில் சேர்க்கப்பட்டன. மிகப்பெரிய அளவில் கிருஷ்ணன் வழிபாட்டை முதலில் துவக்கி வைத்த பெருமை வங்காளிகளுக்கே சேரும்.
– ஆனந்தவிகடன், 31.10.2007புராணக் கட்டுக்கதைகளை எடுத்துக் கொண்டால்கூட, அதில் பகவான் கிருஷ்ணன் என்று சொல்லுவதற்கு ஒரே ஒரு பருக்கை உண்டா?
அறிஞர் அண்ணா சொன்னார்: சிறுவயதிலே வெண்ணெய்யைத் திருடி வாலிப வயதிலே பெண்ணைத் திருடுபவன் எல்லாம் கடவுளா? இத்தகைய கடவுள்கள் எதைப் போதிக்கின்றன? எதைக் கற்றுக் கொடுக்கின்றன என்பது தான் முக்கியம்.
அந்தக் காலத்தில் எல்லாம் பெரும்பாலான வீடுகளிலும், சலூன்களிலும் ஒரு படம் கட்டாயம் மாட்டப்பட்டிருக்கும்.
குளத்தில் பெண்கள் குளித்துக் கொண்டு இருப்பார்கள். ‘கடவுள்’ கிருஷ்ணன் என்ன செய்வான்? குளக்கரையில் பெண்கள் கழற்றி வைத்திருந்த ஆடைகளை எல்லாம் களவாடி எடுத்துச் சென்று; மரக்கிளையில் அமர்ந்து குளிக்கும் கோபியர்களின் நிர்வாணத்தைக் கண்டு ரசித்துக் கொண்டிருக்கும் படம் தான் அது!
இப்பொழுது அந்தப் படம் எல்லாம் போயே போச்சு.
தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும் ஆற்றிய பிரச்சாரப் பெருந்தொண்டால் வெட்கப்பட்டுப் பக்தர்களே ஏற்கெனவே மாட்டப்பட்டிருந்த அந்தப் படங்களைக் கழற்றிக் கழிசடையில் வீசி எறிந்து விட்டனர் என்பதுதான் உண்மை.
புத்தர் கொள்கையை ஒழிக்கவே கிருஷ்ண அவதாரக் கதை என்கிறது என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா.
புத்தர்பிரான் அற மொழிகளில் (பஞ்சசீலம்) முக்கியமானது. பிறர் மனைவியை விரும்பாதே என்பது இந்தக் கொள்கைக்கு எதிர்ப்பாக – கிருஷ்ணாவதாரக் கொள்கை ஆரிய பார்ப்பனர்களால் இட்டுக்கட்டிப் பரப்பப்பட்டது – காம விளையாட்டுக்களை மக்களிடையே அதிகரிக்கச் செய்வதே ‘கிருஷ்ண லீலா’ கதையின் நோக்கம்.
புத்தர் கெள்கையின் சொல்வாக்கை ஒழிக்கவே கிருஷ்ண அவதாரக் கதை இட்டுக் கட்டப்பட்டது என்கிறது என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா.
இத்தகையதோர் சூழலில் சென்னை மயிலாப்பூரில் இவர்களின் அமைப்பின் சார்பில் மன அழுத்த மேலாண்மை வகுப்பில் ஞாயிறுதோறும் உபந்நியாசம் நடத்துகிறார்களாம்.
பார்ப்பன ஆதிக்க உயிர் இந்தக் கடவுள் காடாத்திடம் தானே உயிர் வாழ்கிறது – அதனால் தான் இதுபோன்ற வேலைகளைத் துணிந்து செய்கின்றனர் – எச்சரிக்கை.
கிருஷ்ணனின் பாகவதம்
பற்றி ராஜாஜி!
“வியாசர் விருந்து என்ற தலைப்பிலும், சக்ரவர்த்தி திருமகன் என்ற தலைப்பிலும் மகாபாரதத்தையும், இராமாயணத்தையும் ‘கல்கி’யில் தொடராக ராஜாஜி எழுதி வந்தது அன்பர்களுக்குத் தெரியும். அதன்பின்னர் பாகவதத்தை எளிய தமிழில் எழுதலாமே என்று சதாசிவம் தமது யோசனையை ராஜாஜியிடம் வெளியிட்டார். அதற்கு ராஜாஜி கூறிய பதில் சிந்திக்க வைப்பதாகும்.
“சதாசிவம், எனக்குப் பாகவதத்தில் நாட்டமில்லை அதில் பகவானின் லீலைகளும் அற்புதங்களும் மிகுதியாக உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.
– ‘கல்கி’, 4.10.2009, பக். 72
தினமலரில் (16-12-2003)
வெளிவந்த விமர்சனம் இதோ:
“நமக்குள்ள இருப்பது போலி ஆசாரம். சிலதை புனிதம் இல்லைன்னு தடை பண்ணி வச்சிருக்கோம். ஆன்மிகம் என்பதை நம்மைப் போல தப்பாப் புரிந்து கொண்டவர்கள் யாரு மில்லை. ‘நேத்து மாலை முழுவதும் உனக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். நீ ஏன் வரல்லே? என்தாபம் தாங் கல்லே!’ இப்படி ஒரு பாட்டு தெலுங்குல இருக்கு. அர்த்தம் தெரிஞ்சா தடை போட்டுடு வாங்க!
க்ஷேத்திரக்ஞர் பாட்டு ஒண்ணு இருக்கு, ‘கிருஷ்ணா! இப்ப வந்திருக்கிறே… போ… போயிடு. அப்புறம் வா. என் புருஷன் வர நேரமிது!’ என்று. யாராவது அர்த்தம் தெரிஞ்சு ஆடறாங்களா?
அஷ்டபதி ஒண்ணு இருக்கு. தலைவி சொல்றா… ‘தாபம் அதிகமாயிட்டது. அவனைப் போய் இழுத்துக் கொண்டு வாடி’ என்கிறாள். தோழி போயிட்டு லேட்டா வரா. ‘ஏன் தலை எல்லாம் கலைஞ்சிருக்கு?’ன்னு தலைவி தோழிக்கிட்ட கேட்கிறாள். ‘காத்துல கலைஞ்சு போயிட்டுது’ன்னு பதில் சொல்றா.
ஜீவாத்மா பரமாத்மாவை அடைய தாபத்துல துடிக்கிறது என்பதெல்லாம் மழுப் பலாகத்தான் தோன்றது. சில சமயங்களில் மாலை நேரக் கச்சேரியில் மரியாதை பண்ணனும் என்பதற்கா கவே தொண்டை போனவர் களை எல்லாம் போட்டு விடுகின்றனர். அவர்களை விடவும் முடியாது. இந்த மாதிரி உள்ளவர்களை காலை நேரக் கச்சேரியில் தள்ளி விடலாம். பல்செட் வைத்துக் கொண்டு பாடு கிறவர்களுக்கு எப்படிக் கூட்டம் வரும்?
– இசை விமர்சகர் சுப்புடு
‘தினமலர்‘ (16.12.2003) நாளிதழில்