பேராசிரியர்
ராஜன்குறை கிருஷ்ணன்
அம்பேத்கர் பல்கலைக்கழகம்,
புதுடில்லி
“ஆரியம் என்று ஒன்று இன்றைக்கு இருக்கிறதா?” இந்தக் கேள்வி பலருக்கும் எழக்கூடும். ஆரியம் என்றால் அது இனவாதம் என்று உடனே சொல்லி விடுவார்கள். எல்லா மனித இனங்களும் கலப்பினங்கள்தான், அதனால் இனவாதம் பேசி பிரிக்கக் கூடாது என்று கூறுவார்கள். உண்மைதான். ஆரியம் என்பது தனிப்பட்ட இனம் என்று உடற்கூற்று அடிப்படையில், மரபணு ஆய்வு அடிப்படையில் யாரும் கூற மாட்டார்கள்.
ஆர்.பாலகிருஷ்ணனின் சமீபத்திய மிகச்சிறந்த ஆய்வு நூலான “ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை” நூலிலும் அவர் எப்படியெல்லாம் வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் இனக்கலப்பு ஏற்பட்டது என்றும், ஆரியம், திராவிடம் ஆகியவை பண்பாட்டு வேறுபாடுகள்தான் என்றும் தெளிவாக விளக்குகிறார்.
சரி, ஆரிய பண்பாடும், திராவிட பண்பாடும் கலக்கவில்லையா என்றால் அவையும் கலந்துள்ளன, ஒன்று மற்றதன் மீது தாக்கம் செலுத்தியுள்ளன என்பதையெல்லாமும் ஆய்வாளர்கள் பலரும் சுட்டிக்காட்டுவார்கள். கதைகள், கடவுள்கள், சடங்குகள் எல்லாம் கலந்து பரவத்தான் செய்யும். மொழிகளிலும் நிறைய கொடுக்கல் வாங்கல் இருக்கும். எந்த வேர்ச்சொல் எந்த மொழியிலிருந்து எந்த மொழிக்கு சென்றது என்று உறுதிபட கூற முடியாது. பல ஆய்வு களும், யூகங்களும், கோட்பாடுகளும் இருக்கும்.
அப்படியானால் இன்றைக்கு நாம் ஆரியம் என்று எதனைக் கூறுகிறோம் என்ற கேள்விக்கு விடை காண்பது கடினமல்ல.மனு தர்மம் உள்ளிட்ட வர்ண, ஆசிரம தர்ம சாத்திரங்களைத்தான் நாம் இன்று குறிப்பாக ஆரியம் என்று கூறுகிறோம்.அந்த நூல்கள்தான் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டு இந்தியாவில் பரப்பப்பட்டன; மேற்கோள் காட்டப்பட்டன. பல்வேறு அரசர்களால், பல்வேறு காலங்களில் சமூக அமைப்புகளாக உரு வாயின. நால்வர்ண சமூகமும், அவர்ணர்கள் என தீண்டாமைக்கு ஆளாக்கப்பட்டவர்களுமான சமூகம் நிலைபெற்றது. ஆனால், நான்கு வர்ணங்களிலேயே ஏற்றத்தாழ்வும் உண்டு, தீண்டாமை பிரிவினைகளும் உண்டு. மாமிசமே சாப்பிடாத சைவ வேளாளர்களும், பிராமணர்களும்கூட திருவாவடு துறை மடத்தில் தனித்தனியாகத்தான் உணவருந்துவார்கள் என்பதை உ.வே.சாமிநாதைய்யர் தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். இதுவே ஆரிய, திராவிட பிரிவின் வெளிப்பாடாகும்.
சமஸ்கிருதமும், ஆரியமும்!
உள்ளபடியே ‘ஆரிய’ என்ற சொல் சமஸ்கிருதம் பேசுபவர்களை மரியாதையாகக் குறிக்கவே பயன்பட்டது என்று வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர் கூறுகிறார். சமஸ்கிருத மொழி என்பது கல்வி கற்றோரின் மொழியாக பல நூற்றாண்டுகள் வட நாட்டில் விளங்கியதால் அந்த மொழியில் ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. இதிகாசங்கள், புராணங்கள், காவியங்கள், நாடகங்கள், தத்துவ நூல்கள், அறிவியல் நூல்கள், மருத்துவ நூல்கள் எனப் பல துறைகளைச் சார்ந்த நூல்கள் எழுதப்பட்டன. சமஸ்கிருத தத்துவ நூல்களில் பவுத்த, ஜைன நூல்களும் உண்டு. அந்த நூல்கள் பல தென்னாட்டில்தான் எழுதப்பட்டன என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஜைன தத்து வாசிரியர் குந்தகுந்தர், பவுத்த தத்துவவாதி திக்நாகர் போன்றவர்கள் தென்னாட்டில் வாழ்ந்தார்கள் என்று கூறப்படுகிறது.
இதனால் நாம் என்ன கவனத்தில் கொள்ள வேண்டுமென்றால் நாம் இன்று ஆரியம் என்று குறிப்பது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட அனைத்தை யும் அல்ல. பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வை கற்பிக்கும் வர்ண தர்ம சாத்திரத்தைத்தான் நாம் ஆரியம் என்று இன்றைக்குக் குறிக்கிறோம். ஏனெனில் மிகப்பெரிய அரசியலமைப்பாக உருவானது இந்த வர்ண சமூகம்தான். இந்த வர்ண தர்ம சாத்திரம் என்பது திராவிட பண்பாட்டில் உருவாகவில்லை என்பது தெளிவுபட இருப்பதால் ஆரிய பண்பாட்டுக்கு மாற்றுப் பண்பாடாக மொஹஞ்சதாரோ, ஹரப்பா என்று சிந்து நதிக்கரையில் நகர நாகரிகமாக விளங்கியதும், இன்று கீழடி அகழாய்விலும் காணப்படுவதுமான நகர பண்பாட்டைத்தான் திராவிட பண்பாடு என்கிறோம்.
இன்னும் சுருக்கிச் சொன்னால் பார்ப்பனர்கள் மட்டுமே பிறப்பால் உயர்ந்தவர்கள், அவர்களே தெய்வத்துக்கு நெருக்கமானவர்கள், அவர்கள் மட்டுமே கோயில் கருவறைக்குள் சென்று தெய்வத்துக்கு பூஜை செய்ய தகுதி படைத்தவர்கள், அவர்கள் மட்டுமே மந்திரங்களைச் சொல்லி வாழ்வியல் சடங்குகளை செய்ய வல்லவர்கள் என்று ஒரு பூசக வம்சத்தை பிறப்பின் அடிப்படையில் உருவாக்கிய பார்ப்பனீய சிந்தனைதான் ஆரியம் எனப்படுவது. பிறப்பால் மனிதர்களுக்கு உயர்வு தாழ்வு கற்பித்த சிந்தனையின் முக்கிய குறியீடாக இந்த பார்ப்பனீய புனிதவாதம் விளங்குகிறது. இன்று வரையில் அது இந்திய சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை செலுத்தி வருகிறது.
இந்திய மக்களாட்சி அரசியலின் மிகப்பெரிய சவாலே எப்படி வர்ண தர்ம அடிப்படையில் உருவான பிறவியிலேயே ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கும் ஜாதீய படிநிலை கொண்ட சமூகத்தை சமத்துவம், சமநீதி கொண்ட சமூகமாக மாற்றுவது என்பதுதான். அதனால் இந்திய சமூகத்தின் துவக்கம், அடித்தளம் எல்லாம் ஆரிய பண்பாடு மட்டும் கிடையாது, அதற்கு மாற்றாக திராவிட பண்பாடும் விளங்கியுள்ளது என்பதை வலியுறுத்த வேண்டியுள்ளது. வர்ண தர்ம சமூகத்திற்கு மாற்றான ஒரு சமூக சிந்தனை, திணைக் கோட்பாடு போன்ற சிந்தனைகள் தமிழ் மொழியில் உள்ளன. தமிழ் மொழியின் தொட்டிலான பன்னெடுங்கால பண்பாட்டு அடித்தளத்தையே நாம் திராவிட பண்பாடு என்று கூறி, ஆரியத்திலிருந்து வேறுபடுத்தி அழைக்கிறோம்.
பார்ப்பனீயத்தின் சுருக்க வரலாறு
பெரும்பாலான ஆராய்ச்சியாளர் கருத்து ஈரானின் புல்வெளிகளிலிருந்து இடம்பெயர்ந்து சிந்து சமவெளிக்கு வந்த மேய்ச்சல் இனக்குழுக்கள்தான் ஆரியர்கள் என்பது. ஏற்கனவே அங்கிருந்த ஹரப்பா நகர நாகரிகத்துடன் அவர்களுக்கு நீண்டகால முரணும், உறவும் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதன்பின் அவர்கள் கங்கை சமவெளிக்கும் பரவினார்கள். வேதங்கள் தோன்றிய காலம் இது என்று வைத்துக்கொண்டால் அதில் காணப்படும் சான்றுகள்படி ஆரியர் வாழ்க்கை முறை வித்தியாசமாக இருந்துள்ளது. குறிப்பாக யாகங்களில் ஆடு, மாடுகளை பலியிடுவது, அந்த மாமிசத்தை உண்பது என்பது பழக்கமாக இருந்துள்ளது. வேதங்களில் இந்திரன், அக்னி, வருணன் உள்ளிட்ட தேவர்களே முக்கியத்துவம் பெற்றனர். பின்னாளில் உருவான பிரம்மா – விஷ்ணு – சிவன் ஆகிய மும்மூர்த்திகளை மய்யப்படுத்திய புராணங்களில் இவர்கள் முக்கியத்துவம் குறைந்து போனது.
பவுத்தம், சமணம், அஜீவகம் உள்ளிட்ட மதங்கள் தோன்றி பரவிய பிறகே, ஆரியர்கள் தங்களை மீண்டும் தகவமைத்துக்கொண்டனர். மாமிசம் சாப்பிடுவதை, கால்நடைகளை பலியிடுவதைக் கைவிட்டனர். அசோகர் காலத்திற்குப் பிறகே மனுஸ்மிருதி எழுதப்பட்டிருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நால்வர்ண சமூக அமைப்பும், பிராமணர்களின் மேலாதிக்கமும் அப்போது நிலைநிறுத்த ப்பட்டதுடன், தங்களை ஏற்றுக்கொள்ள மறுத்தவர்களை சூத்திரர்கள் என்ற நாலாவது வர்ணமாக நிர்ணயித்து அவர்களுக்கு கடுமையான விதிமுறைகளை வகுத்தனர் என்று அம்பேத்கர் கருதுகிறார். அவருடைய “சூத்திரர்கள் யார்?” என்ற ஆய்வு நூலில் இது குறித்து விரிவாக விவாதித்துள்ளார். நான்கு வர்ணத்தவர்களும் ஆரியர்கள் என்றால் ஏன் அதில் சூத்திர வர்ணத்தினரை இவ்வளவு கடுமையாக ஒடுக்க வேண்டும் என்பதே அவர் கேள்வியாக உள்ளது.
அதன் பின்னர் பேரரசு உருவாக்கத்திற்கு பார்ப்பனீ யத்தின் நால்வர்ண சமூக மாதிரியும், இந்து புராண கதைகளும், இதிகாசங்களும், தெய்வங்களும் உதவியாக இருந்ததால், பெரும்பாலான அரசர்கள் நால்வர்ண சமூக அமைப்பை ஆதரித்ததுடன் பார்ப்பனர்களின் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவும் முன்வந்தார்கள். இறுதியாக காலனீய ஆதிக்கத்திற்கு முன் தோன்றிய விஜயநகர, மராத்திய சாம்ராஜ்யங்களில் பார்ப்பனர்களின் செல்வாக்கு உச்ச நிலையை அடைந்தது. தமிழ்நாட்டிலும் பக்தி இயக்கத்துக்குப் பிறகு வலுவடைந்த சைவ, வைணவ மதங்களை சேர, சோழ, பாண்டியர்கள் உள்ளிட்ட மன்னர்கள் ஆதரித்தபோது பார்ப்ப னர்கள் அரசியலில் முதன்மை பெறத் தொடங்கினர்.
ஆரிய முதன்மைவாதமும்,
திராவிட மறுப்பும்
அய்ரோப்பிய மொழியியல் ஆய்வாளர்கள் சமஸ்கிருதத்திற்கும் அய்ரோப்பிய மொழிகளுக்கும் உள்ள ஒப்புமைகளை ஆராய்ந்தறிந்தபோது, இந்தோ-அய்ரோப்பிய மொழிக்குடும்பம் குறித்தும், அதனை உருவாக்கிய ஆரியர்களில் ஒரு பிரிவினர் ஈரானிலிருந்து அய்ரோப்பாவுக்கும், மற்றொரு பிரிவினர் இந்தியாவுக்கும் சென்றிருக்கலாம் என்று கருதினர். மேலும் அவ்வாறு இந்தியா வந்த ஆரியர்களே இந்தியாவில் நாகரிகத்தை உருவாக்கியவர்கள் என்றும் கூறினர்.
இத்தகைய ஆரிய முதன்மைவாத கருதுகோளை மாற்றியதும் வேறு சில அய்ரோப்பிய ஆய்வா ளர்கள்தான். எல்லிஸ், கால்டுவெல் ஆகியோர் திராவிட மொழிக்குடும்பம் ஆரிய மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்ட மூலங்களைக் கொண்டது என்பதைக் கூறினர். பின்னர் ஜான் மார்ஷல் மொஹஞ்சதாரோ, ஹரப்பா அகழாய்வின் மூலம் வேத காலத்துக்கு முந்தைய ஒரு நகர நாகரிகம் இந்தியாவில் விளங்கியதைக் கூறினார். இவற்றால் ஆரிய முதன்மைவாதம் அடிபட்டுப் போயிற்று. ஆரியத்திற்கான மாற்றுப் பண்பாடாக திராவிட பண்பாட்டைக் கூறுவது சாத்தியமாயிற்று. திராவிடம் என்ற கருத்தாக்கத்தை அய்ரோப்பியர்கள்தான் சொன்னார்கள் என்று இந்துத்துவர்கள் சொன்னால், ஆரிய முதன்மைவாதத்தையும் அவர்கள்தானே சொன்னார்கள் என்று நாம் கேட்க வேண்டும்.
காலனீய அரசியலில்
ஆரியமும், திராவிடமும்!
பிரிட்டிஷ் காலனீய ஆட்சி முஸ்லிம்கள் அல்லாத இந்தியர்களுக்கான தனி நபர் சட்டங்கள் யாவை என்று தேடியபோது, அவர்கள் வர்ணாசிரம தர்ம நூல்களையே அடிப்படையாகக் கொண்டனர். ஆட்சிக்கான வசதி கருதி தங்களை முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர், பார்ஸி என்று அடையாளப்படுத்திக்கொள்ளாத அனைவரும் இந்துக்களாகவே கருதப்படலாம் என்று முடிவு செய்தனர். அவர்கள் அனைவருக்கும் வர்ண தர்ம சாத்திரங்களே பொருத்தமான சட்டங்கள் என்றும் வகுத்தனர். அந்தச் சாத்திரங்களைத் தொகுத்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து அவற்றையே வழக்குகளில் தீர்ப்புக் கூற பயன்படுத்தினர். அய்ரோப்பிய காலனீய ஆட்சிக்கெதிராக இந்தியாவில் அரசியலமைப்புகள் ஏற்பட்டபோது, அதில் முன்னணி வகித்த பார்ப்பனீய-பனியா சமூகத்தினரும் ஆரிய-சமஸ்கிருத பண்பாட்டையே இந்தியாவின் பண்பாடாக முன்னிறுத்தினர். இவற்றின் விளைவாக புதிய மக்களாட்சி அரசியலில் அணி திரட்டப்பட்டவர்கள் அனைவரும் இந்த வர்ண சமூக விதிகளை எதிர்கொள்ள வேண்டியதானது. பார்ப்பனர்களும், பிறரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவதே, சமபந்தி போஜனமே, புரட்சிகர நடவடிக்கையாக கருதப்பட்டது.
அப்போதுதான் தமிழ்நாட்டில் பார்ப்பனீய மேலாதிக்கத்துக்கு எதிராக சிந்தித்தவர்கள் திராவிட பண்பாட்டு அடையாளத்தை முன்னிறுத்தத் தொடங்கி னர். அத்தகைய முன்னோடி சிந்தனையாளர்களில் ஒருவர்தான் சுந்தரம் பிள்ளை (1855–1897). அவர் எழுதிய மனோன்மணியம் நாடக நூலில் வாழ்த்துப் பகுதியில் தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதினார். அதில் பரத கண்டத்தை நிலமகளின் வதனம் எனவும், தெக்கணத்தை பிறை நுதல் எனவும், திராவிட நல் திருநாடு திலகம் எனவும், அத்திலகத்தின் வாசனை போல அனைத்துலகும் இன்பமுற, எத்திசையும் புகழ்மணக்க தமிழணங்கு வீற்றிருந்ததாகக் கூறுகிறார்.
பிரிவினை வாதமெனும்
ஆரியப் புரளி
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் ஹிந்தி மொழியை தமிழ்நாட்டுப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்க மாகாண காங்கிரஸ் ஆட்சி முனைந்ததால், வடவர் ஆதிக்கத்தில் சமஸ்கிருத – ஹிந்தி – பார்ப்பனீய மேலாதிக்கம் அதிகம் இருக்கும் என்ற எண்ணம் வலுத்தது. அதனால் தென்னிந்தியாவை தனி திராவிட கூட்டாட்சிக் குடியரசாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பெரியாரும், அண்ணாவும் எழுப்பி திராவிடர் கழகத்தை 1944ஆம் ஆண்டு தொடங்கினர். அண்ணா 1942 ஆம் ஆண்டு திராவிட நாடு என்ற ஓர் ஏட்டையும் தொடங்கினார்.
இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் அம்பேத்கர் தலைமையில் வரையப் பெற்று, இந்தியக் குடியரசு 1950 ஆம் ஆண்டு உதயமானபோது அதில் வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்ற அடிப்படையில் தேர்தலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவோரின் ஆட்சியும் உறுதி செய்யப்பட்டது. அத்துடன் மனு நீதியின் பிறப்பினடிப்படையிலான ஏற்றத்தாழ்வு சட்டத்திலிருந்து நீக்கப்பட்டது.
ஜாதிகளையே சட்டம் தடை செய்யாவிட்டாலும், கோயில் பூஜைகளில் பார்ப்பனர்களின் பாரம்பரிய உரிமைகளை நீக்காவிட்டாலும், பொதுவாழ்வில் அனைவரும் சமம் என்பதை உறுதி செய்தது.தேர்தல் மூலம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி சமூக நீதி அரசியலை முன்னெடுக்கலாம் என்ற சாத்தியத்தை அண்ணாவும், தி.மு.க-வும் உணர்ந்த தால் கட்சியமைப்பை வலுப்படுத்துவதும், தேர்தலில் போட்டியிடுவதும் நிகழ்ந்தது. அப்போது தேர்தல்களில் வெல்பவர்கள் ஒருங்கிணைந்த இந்தியாவின் இறையாண்மையை ஏற்றுக்கொள்வது கட்டாய மாக்கப்பட்டதால் திராவிட நாடு கோரிக்கையை
மாநில சுயாட்சி கோரிக்கையாக மாற்றிக் கொண்டது தி.மு.க.
அறிஞர் அண்ணா தொடக்கம் முதலே கூட்டாட்சிக் குடியரசைத்தான் வலியுறுத்தி வந்தார். சுயாட்சி உரிமைகள் என்னவென்றுதெளிவானால் எந்தக் கூட்டாட்சிக் குடியரசிலும் பங்கெடுக்கலாம் என்பதே அவர் நிலைப்பாடாக இருந்தது. அதனால் அவர் பிரிவினை பேசும் தமிழ் தேசியவாதியாக எந்நாளும் இருந்ததில்லை.
சுயாட்சி உரிமைகள் உறுதிசெய்யப்பட்டால் திராவிடக் கூட்டாட்சிக் குடியரசானாலும், இந்தியக் கூட்டாட்சிக் குடியரசானாலும், ஆசிய, உலகக் கூட்டாட்சிக் குடியரசனாலும் அதில் பிரச்சினையில்லை என்பதே அண்ணாவின் நிலைப்பாடாக இருந்தது. இது உலக அளவில் மிக முதிர்ச்சியான அரசியல் நிலைப்பாடு.
அமெரிக்க அரசியல்வாதி வெண்டல் வில்கியின் உலகக் கூட்டாட்சி குடியரசுத் திட்டத்தையும் வரவேற்றார் அண்ணா.
இன்றைய நிலையில் தேசிய அரசியலில் முக்கியப் பங்கு வகிக்கிறது தி.மு.க. வாஜ்பேயி தலைமை யிலான பா.ஜ.க.அமைச்சரவை, மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை என்று தொடர்ந்து ஒன்றிய அமைச்சரவையில் பங்கு வகித்துள்ளது. தேசிய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது தமிழ்நாடு. விண்வெளி ஆய்வு உள்ளிட்ட பல அரசுத்துறைகள், கார்ப்பரேட் நிறு வனங்கள் எனப் பலவற்றிலும் தமிழர்கள் தலைமைப் பொறுப்பேற்றுள்ளார்கள். இப்படி தேசிய வாழ்வில் இரண்டறக் கலந்த தமிழ்நாட்டில் பிரிவினை வாதம் பேசப்படுவதாக பசப்புகிறார் ஆளுநர்.
இந்தியாவில் ஆரிய முதன்மைவாதத்தையும், பார்ப்பனீய மேலாதிக்கத்தையும் நிறுவி இந்திய ஒன்றியத்தை ஒற்றை அரசாக, இந்து ராஷ்டிரமாக நிறுவத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் திராவிடம் என்ற சொல்லைக்கண்டு அஞ்சுகிறது. ஆரியத்திற்கு மாற்றுப் பண்பாடாக திராவிடம் நிலைபெறுவது கண்டு அதற்குக் கலக்கம் உரு வாகிறது. ஒட்டுமொத்த அதிகாரத்தையும் ஒரே புள்ளியில் குவித்துக் கொள்ளும் ஒற்றை பாசிச அரசுக்கும், சுயாட்சி பெற்ற மாநிலங்களின் கூட்டாட்சி என்ற தத்துவத்துக்கும், பார்ப்பனீய மீட்புவாத கலாச்சார அரசியலுக்கும், சமூக நீதி சமத்துவ அரசியலுக்குமான முரண்பாட்டின் குறிச்சொல்லாக மாறியுள்ளது திராவிடம். அதனால்தான் ஆரியம் தமிழை அரவணைத்து திராவிடத்தை அகற்றிவிடத் துடிக்கிறது. ஆனால், தமிழர்களை என்றென்றும் திராவிடத் தமிழர்களாகவே தன்னுணர்வு பெறச் செய்துள்ளார்கள் பெரியாரும், அண்ணாவும், கலைஞரும். திராவிடம்என்ற கேடயத்தை நீக்கிவிட்டால் தமிழை கபளீகரம் செய்யலாம் என்ற ஆரிய சூழ்ச்சி ஒரு நாளும் நிறைவேறாது.
நன்றி: ‘முரசொலி’, 23.10.2024