அக்டோபர் 3-ஆம் தேதி, உத்தரப்பிரதேசத்தின் அமேதி நகரில் உள்ள அரசுப் பள்ளியில் உதவி ஆசிரியராக இருந்த சுனில் பார்தி, அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
ஆசிரியர் சுனி பார்தியின் மனைவி சில மாதங்களுக்கு முன்பு சந்தன் வர்மா என்பவர் மீது பாலியல் சீண்டல் தொடர்பான புகாரைக் காவல்துறையில் அளித்திருந்தார். இது தொடர்பாக சந்தன் வர்மாவின் வீட்டிற்கு சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் தன் மீது புகார் அளித்துவிட்டார்; இது தனது ஜாதிக்கே அவமானம் என்று கூறி –சந்தன் வர்மாவும் அவனது உறவினர்களும் சேர்ந்து ஆசிரியரையும் அவரது மனைவி மற்றும் 4 வயது 1 வயது பெண் குழந்தைகளையும் சுட்டுக்கொலை செய்துவிட்டு, தப்பி ஓடிவிட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை கைது செய்துள்ளதாக அமேதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மற்றவர் களைத் தேடி வருவதாகவும் கூறினர்
***
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தசகர் மாவட்டத் தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது தாழ்த்தப்பட்ட சிறுமி உயர் ஜாதி சமூகத்தைச் சேர்ந்த இருவரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்; இதுகுறித்து தனது தாயிடம் புகார் தெரிவித்ததும், அவர் காவல்துறையில் புகார் அளித்தார். இதனை அடுத்து உயர்ஜாதியினர் அவரையும் பாதிப்பிற்குள்ளான அவரது மகளையும் தாக்கினர்.
படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உறவினர்களின் நீண்ட போராட் டத்திற்குப் பிறகே இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் யாரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.
***
47 வயதான ரமேஷ் சந்த் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் ராம் லீலா நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்றுள்ளார்.
நீண்ட நேரம் நின்றபடியே பார்த்துகொண்டு இருந்த அவருக்கு கால் வலிக்கவே – அங்கு பல இருக்கைகள் காலியாக இருந்தன – அதில் ஒன்றை எடுத்துவந்து தனியாகப் போட்டு அமர்ந்தார்.
இதைப் பார்த்த உயர்ஜாதியினரும் அங்கு இருந்த இரண்டு காவலர்களும் – எவ்வளவு துணிச்சல் இருந்தால் நீ எங்கள் முன் நாற்காலியில் உட்காருவாய் என்று கூறி அவரை தாக்கி ஊரார் முன்பாக மிகவும் அவமானப்படுத்தினர்.
மேலும் அவர் மீது அடிதடியில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்போவதாகவும் மிரட்டினர். காவலர்களான பகதூர் மற்றும் விக்ரம் சவுத்ரி இருவரும் அவரது மேலாடையைக் கழட்டி கூட்டத்தார் முன் ஜாதி ரீதியாக மோசமாகப் பேசினர். இதனால் மனம் உடைந்த அவர் – நான் என்ன தவறு செய்தேன் ஏன் இப்படி ஊரார் முன்பு தன்னை அவமானப்படுத்தினார்கள் – என்று புலம்பிக்கொண்டு இருந்தார். பின்னர் தனது குடிசை வீட்டிற்குச் சென்ற அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்பட நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
மீசை வைத்ததற்காகவும், குதிரைமீது வந்ததற்காகவும், திருவிழாவை வேடிக்கை பார்த்ததற்காகவும், தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் படுகொலை செய்யப்படுவது எல்லாம் பா.ஜ.க. ஆளும் வடமாநிலங்களில் அன்றாட நடவடிக்கைகளாகி விட்டன.
தமிழ்நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றால், அதனைப் பூதாகாரப்படுத்தும் சங்கிகள் வடமாநிலங்களில் அன்றாட வானிலை செய்தியாக வெளிவரும் தீண்டாமைக் கொடுமைகள், கொலைகளுக்கு என்ன சமாதானம் சொல்லப் போகிறார்களாம்.
குடியரசுத் தலைவரே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தால் நாடாளுமன்ற கட்டட அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிக்கோ, திறப்பு விழாவுக்கோ, மரியாதை நிமித்தமாக அழைப்புக் கூடக் கொடுக்காதவர்களாயிற்றே! சுதந்திரம் அடைந்து பவள விழாவும் கொண்டாடியாயிற்று; ஆனாலும் மண்ணுக்குச் சுதந்திரமே தவிர, மனிதனுக்கல்ல – வெட்கக் கேடு!