சென்னை, அக். 23- வாக்காளர் பட்டியலில் இரட்டைப் பதிவு நீக்கம் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் குளறுபடியான கடிதத்தால் வாக்காளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இரட்டைப் பதிவு
தமிழ்நாட்டில், தற்போது 6 கோடியே 23 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலின்போது கள்ள ஓட்டுகள் போடுவதைத் தடுக்க இறந்தவர்களின் பெயர்களை நீக்குவதற்கு தேர்தல் ஆணையம் அவ்வப்போது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதே வேளையில், இரட்டைப் பதிவை இரு வெவ்வேறு முகவரியில் ஒரே நபர்களின் பெயர்கள் இடம் பெற்றிருப்பது நீக்கவும் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இரட்டைப் பதிவை நீக்குவ தற்காக ஆதாரை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
அஞ்சல் மூலம் அறிவுறுத்தல்
இதன்மூலம், இரட்டை பதிவு களை மென்பொருள் மூலம் உறுதிசெய்து அவற்றை நீக்கும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
அவ்வாறு இரட்டைப் பதிவு இருப்பது தெரியவந்தால் அவற்றில் ஏதாவது ஒரு முகவரியில் இருக்கும் பெயரை நீக்க சம்பந்தப் பட்டவர்களுக்கு அஞ்சல் மூலம் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி வருகிறது.
அவ்வாறு அனுப்பப்படும் அஞ்சலில், ‘வாக்காளர் பட்டி யலில் இரு வெவ்வேறு முகவரியில் தங்களது பெயர் இடம் பெற் றுள்ளது. நீங்கள் தற்போது வசிக்கும் முகவரி எதுவோ, அந்த முகவரியில் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டுகிறோம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
‘டிக்’ செய்து அனுப்ப அறிவுறுத்தல்
மேலும், எந்தெந்த முகவரியில் தங்களது பெயர் இடம் பெற் றுள்ளது என்ற விவரத்தை கூறி, எந்த முகவரியில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்க விரும்புகிறீர்கள் என்பதை ‘டிக்’ செய்து தங்கள் பகுதிக்கு உட் பட்ட உதவி வாக்குப்பதிவு அலு வலரான வட்டாட்சியருக்கு நேரிலோ, அஞ்சல் மூலமோ அல்லது மின்னஞ்சல் மூலமோ அனுப்ப தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவுறுத்தல் கடிதம், பலருக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் கிடைக்கவில்லை என்ற குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
அதாவது, செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த வாக்காளர் ஒருவருக்கு இரட்டைப் பதிவு குறித்த விவரத்தை தேர்தல் ஆணையம் செப்டம்பர் 12ஆம் தேதி அனுப்பி வைத்துள்ளது.
தாமதமாக கிடைத்த கடிதம்
அதில், செப்டம்பர் 27ஆம் தேதிக்குள் தங்கள் விருப்பத்தை தேர்தல் அலுவலருக்கு தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளது. ஆனால், இந்த கடிதம் சம்பந்தப்பட்ட நபருக்கு 21.10.2024 அன்றுதான் கிடைத்துள்ளது.
இதனால், அவரால் தனது விருப்பத்தை குறிப்பிட்ட தேதிக்குள் உதவி தேர்தல் அலுவ லருக்கு அனுப்ப இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
நீக்கம் செய்யப்படும்
இதுகுறித்து தேர்தல் அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, ‘சிலருக்கு இந்த கடிதம் தாமதமாக கிடைத்திருக்கலாம். அவ்வாறு தாமதமாக கிடைத்தாலும் சம் பந்தப்பட்டவர்கள் தங்களது விருப்பக் கடிதத்தை உதவி வாக்குப்பதிவு அலுவலருக்கு அனுப்பி வைக்கலாம்.
ஒருவேளை தேர்தல் ஆணை யத்தின் கடிதத்துக்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை எனில், சம்பந்தப்பட்ட நபர் எந்த முகவரியில் வசிக்கிறார் என்பதை வாக்குச் சாவடி அலுவலர் மூலம் கண்டறிந்து ஏதாவது ஒரு முகவரி நீக்கம் செய்யப்படும்’ என்றார்.