ஊசிமிளகாய்
தமிழ்நாடு அரசியலின் வினோத, விசித்திரங்களில் ஓர் அம்சம் ஒரு கட்சி ஆரம்பித்து, குறுக்குவழிகளில் ‘சேர்க்க வேண்டியவற்றைச் சேர்ப்பதும்’, ஏதாவது ‘ஏடாகூடமாக‘ பேசினால்தான் விளம்பர சடகோபத்தை பூணூல் பிரம்மாக்களின் கருணாகடாட்சம் தங்கள்மீது பொழிந்து – குசேல, குபேர ரசவாதத்தின் பயனை அனுபவிக்கலாம் என்று திட்டமிட்டு, போணியாகாத கட்சிகள் பல உள்ளன. ஆர்ப்பாட்டங்கள் அளத்தலுக்குப் பஞ்சமில்லை.
ஜாதி ஆதரவு ஏடுகளின் வெளிச்சத்தில் உயிர் வாழ்வதும், பெரிய பெரிய தலைவர்களைத் தாக்கிப் பேசியே பெரிய விளம்பரத்தைப் பெறலாம் என்ற கனவில், ஊசிப் போன பண்டமானாலும், ஏமாந்தவர்களிடம் ‘எல்லாம் தானே’ என்று பாசாங்கு அரசியலை செய்வது தான் அவர்களின் வாடிக்கை!
ஒருவர், தான் பதவிக்கு வந்தவுடன் கலைஞர் அரசினால் உருவாக்கப்பட்ட ‘நீராரும் கடலுடுத்த’ பாட்டில் ‘திராவிடம்’ வருவதை இவர் ஆட்சிக்கு வந்த தும் அகற்றி விடுவாராம் – அறிவிப்புச் செய்துள்ளார்!
எப்படிச் சிரிப்பது என்றே அறிவுள்ள மக்களுக்குப் புரியவில்லை!
‘அல்நாஷர் கனவு‘ என்ற முட்டை வியாபாரியின் கனவுப் பேச்சுக் கதைதான் நினைவுக்கு வருகிறது!
கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவர்கள் எல்லாம், இமயத்தின் உச்சியில் எனது கொடியே பறக்கும் என்று பேசி, விளம்பரம் தேடும் நிலைதான்!
ஆசை வெட்கமறியாதுதானே?
அறியாமைக்குத் தன் தகுதி தெரியாதே!
ஆணவத்திற்கோ தரைமீது இருப்பதே அதற்கு மறந்துவிடுமே!
அதுபோல,
முதலில் அந்த ‘பொய்மான்’ அவரது கட்சியைக் காப்பாற்றட்டும்! பிறகு ஆட்சிக்கு வருவதுபற்றி பேசத் தகுதி பெறட்டும்!
மலையைத் தூக்கித் தன் தோளில் வைத்தால், மாற்றி வைக்கிறேன் என்கிற ஏமாற்றுப் பயில்வான் கதைதான் நினைவுக்கு வருகிறது!
திராவிடத்தை எதிர்த்துப் பேசி, விலாசம் இழந்த முன்னாள் ‘‘வெகுண்டெழுந்தான் பிள்ளைகள்’’ ஏராளம் என்பது இந்தத் திடீர்த் தலைமையை, ஜாதி மற்ற மற்ற கோயபெல்ஸ் அவதாரமாக மாறி வருகிறவர்களின் உளறல்தான் என்று உலகம் ஒதுக்கித் தள்ளும்!
அதுபோல, இன்னொன்று, தான் மட்டும் இட ஒதுக்கீட்டினால் பயன்பெற்று டாக்டராகி விட்டால்போதும், தன்னைவிட மிகப்பெரும் சமூக இழிவுக்காளாகி, மதிப்பு, மரியாதையை இழந்த லட்சோபலட்சம் உழைப்புத் தோழர்களான அடிமட்டத்தில் இருந்து அல்லலில் உழன்று, ஆயிரம் ஆண்டுகளாக பெறாத உரிமையை இட ஒதுக்கீட்டின்மூலம் பெற்று சற்றுத் தலைநிமிர்ந்து வருவது கண்டு பொறுக்காமல், அருந்ததியர் இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதற்காக பூணூல் எஜமானர்க ளிடம் சரணாகதி அடைந்த ஒருவர்!
முதலில் ஓர் இடம்கூட சொந்தக்காலில் நின்று வென்று காட்ட முடியாத இந்த ‘மாபெரும் தலைவர்‘ இட ஒதுக்கீட்டையே ஒழிப்பாராம் – பந்தல்கால்களை பலமுறை தேடும் இந்த பவிசுக்காரர் – தனது சக மனித உழைப்பாளர்களான சகோதர சகோதரிகளின் பரிதாப வாழ்வு அவர் கண்களுக்குப் படவில்லை.
கலைஞர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இப்படி உளறியவரை, கழகத் தலைவர் ஆசிரியர்தான் செம்மையாக பதிலளித்துத் தோலுரித்தார். வெகுண்டு வெளியே ஓடினார்!
அது மறந்துவிட்டதா?
பூணூல்களிடம் புகலிடம் பெற்று, இப்படி பொல்லாங்கு பேசி, சமூகநீதியின் தத்துவத்தையே புரியாத உளறுவாய் அரசியல் பேசுவோர், தங்களை அரசியல் மேதைகள் என்று நினைத்துக் கொள்வதுதான் விந்தையிலும் விந்தை!
இவர்கள் நினைத்துக் கொண்டுள்ளது போன்று அரசியல் மேதைகள் அல்ல; அரசியல் பேதைகள், பதவி தேடும் போதையர்கள் – இனநலம் அறியா மனநலமற்ற வீணர்கள்!
அய்யோ, சிரிப்புத்தான் வருகுது!