இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள அடிக்கட்டுமான மதச் சார்பின்மை, சோசலிசம் ஆகியவற்றுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் வாதங்களை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளதைக் குறித்தும், கடவுளைக் கேட்டு தான் பாபர் மசூதி வழக்கில் தீர்ப்புக் கூறினேன் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ள கருத்து சட்டப்படி சரியானதல்ல – வருங்காலத்தில் கடும் விமர்சனத்துக்கு உரியது என்பதைச் சுட்டிக்காட்டியும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :
அரசியல் சட்டத்தின் முகப்புரையில் உள்ள ‘மதச் சார்பின்மை‘ (Secular), ‘சமதர்மம்‘ (Socialist) போன்ற வார்த்தைகளை நீக்க வேண்டுமென்று சு.சாமி என்பவரும், மற்றிருவரும் உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு விசாரணைக்கு வந்து, ‘‘அச்சொற்கள் ஏற்கத்தக்கவையல்ல; காரணம் அரசியல் சட்டத் திருத்தத்தால் பிறகு சேர்க்கப்பட்ட சொற்கள்’’ என்ற அவர்களது வாதங்களை உச்சநீதிமன்றம் ஏற்காமல் நிராகரித்துள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின்
மதச் சார்பின்மை பற்றி
உச்சநீதிமன்றத்தின் உறுதியான தீர்ப்பு!
அரசியல் சட்ட உருவாக்கக் குழுவில் அதன் தலைவர் டாக்டர் அம்பேத்கர், அவ்வார்த்தை இடம் பெறாவிட்டாலும் இந்திய அரசியல் அமைப்பு மதச்சார்பற்ற ஒன்று என்று தெளிவாகவே கூறியுள்ள பிறகும் – இம்மாதிரி வழக்காடிகள் வருங்காலத்தில் வரக் கூடும் என்பதை எதிர்பார்த்தே – பிறகு 42ஆவது சட்டத் திருத்தத்தில் சேர்க்கப்பட்டது மட்டுமல்ல; முன்கூட்டியே அது இருந்ததற்கான சட்டத் தகுதியும் அதற்கு வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் சட்டத் திருத்தங்கள் சுமார் 100க்கு மேல் வந்து நிறைவேற்றப்பட்டு அமலாகி வரும் நிலையில், அவைதானே இன்றும் இனியும் சட்டமாகக் கருதப்பட வேண்டியது என்பது அரசியல் சட்டத்தின் பாலபாடமல்லவா?
அது மட்டுமா? முகப்புரை என்பது நமது அரசியல் சட்டத்தின் அடிக்கட்டுமானம் (Basic Structure of the Constitution) என்று உச்சநீதிமன்றம் முந்தைய தீர்ப்புகள் மூலம் உறுதி செய்துள்ளது.
‘மதச்சார்பின்மையை நீக்கி விட்டு, இந்திய அரசியல் அமைப்பினை – ஒரு மதச்சார்பான இந்து நாடாக்க முயலும் பேர்வழிகளே இப்படி குறுக்கு வழியில் முயற்சி எடுக்கின்றனர். இதுபற்றி விரிவான விவாதம் அரசியல் சட்ட அமைப்புக் குழுவில் பல முறை நடந்துள்ளது.
பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வோர் ‘கடவுள்‘ பேரால் எடுப்பது போல, ‘உளப்பூர்வமாக‘ (Affirm) எடுத்துக் கொள்ளும் உரிமையும் தரப்பட்டிருப்பதே அதற்கு ஒரு கூடுதல் சான்றாகும்!
பன்மதங்கள், பல கலாச்சாரம் – பண்பாடுகள், பல மொழிகள், பல நாகரிகங்கள் உள்ள ஒரு பரந்து, விரிந்த நாட்டில் ‘‘ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்’’ என்பதே – அரசியல் சட்ட முகப்புரையில் குறிப்பிட்டுள்ள Democratic Republic என்பவற்றின் முக்கிய நோக்கத்தினைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்குவது அல்லவா? இது யதேச்சதிகாரத்திற்கும் மற்ற மக்களின் ஒடுக்கு முறைக்கும் தானே வழி வகுக்கும் – மதச் சார்பு நாடுகளில் மற்ற சிறுபான்மையினரின் உரிமைகள் காணாமற் போய் தானே உள்ளது.
மதச் சார்பற்ற நாட்டிலேயே சிறுபான்மையினர் தங்களது வாழ்வுரிமையை பாதுகாக்கப் போராட வேண்டித் தானே உள்ளது? எனவே மதச்சார்பின்மை முக்கியம்!
அதுபோலவே சோஷலிசத்தை வெறும் ஏட்டுச் சுரைக்காய் ஆக்கி விட்டனர். இப்படி ஓர் அம்சம் அரசின் அடிக்கட்டுமானமாக உள்ளபோதே இந்நிலை என்றால் அதையும் நீக்கி விட்டால் எத்தனைப் பேரவலம்!
ஹிந்துத்துவா பேசுவோர், ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் தானே, அம்பேத்கர் தலைமையில் இயற்றப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் தகர்த்து விட்டு, எடுத்து எறிந்து விட்டு அந்த இடத்தில் மனுதர்மத்தை அமர வைக்கும் முயற்சியின் முன்னோட்டம் தான் இது என்பதை நாடும், உச்சநீதிமன்றமும் உணர்ந்து, தாங்கள் பிரமாணம் எடுத்த அரசியல் சட்டத்தை உருக்குலைக்க அனுமதிக்கக்கூடாது!
‘‘கடவுளைக் கேட்டுதான் பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வழங்கினேன்‘‘ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியிருப்பது சட்டப்படி சரியானதா?
அதே நேரத்தில் வழக்காடிகள் இப்படி அரசியல் சட்டத்தைச் செயலற்றதாக்க முயற்சிக்கும் நிலையில் ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் தலைமை நீதிபதி திடீரென்று ‘‘நான் பாபர் மசூதி வழக்கைத் தீர்க்க கடவுளிடம் கேட்டு, வேண்டியே அதன்படி தீர்ப்பு தந்துள்ளேன்’’ என்ற கருத்துப்படக் கூறியது எவ்வளவு விசித்திரமும், அரசியல் அடிக்கட்டுமானத்திற்கு விரோதமான நகை முரணும் என்பதை இன்று பல பேரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். பதவி ஓய்வு பெற்றுச் செல்லும் நிலையில் இப்படி ஒரு சார்பு நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுவது போல நடந்து கொள்ளுதல் சரியா? பிள்ளையார் சதுர்த்திக்கு டில்லியில் பிரதமர் மோடியைத் தமது வீட்டுக்கு அழைத்து பூஜையில் கலந்து கொள்ளச் செய்தது – மற்றபடி திருப்பதி, மதுரை மீனாட்சி கோயில்களுக்கு செல்வதெல்லாம் அவர்களது தனிப்பட்ட உரிமையாக இருக்கலாம். அவர்களது வழிபாட்டுரிமையில் நமக்கு ஆட்சேபனை இல்லை! –
ஆனால், அவர்களுக்கான அங்கே தரப்பட்ட வரவேற்பு, பாதுகாப்பு ஏற்பாடு எல்லாவற்றுக்கும் அவரது பதவிதானே காரணம் என்பது எதார்த்தம்.
பாபர் மசூதி – ராமர் கோயில் தீர்ப்பே ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்பு – லட்சக்கணக்கான வழக்குகள் தேக்கத்தில் இருக்க, அதற்குக் கொடுக்கப்பட்ட முன்னுரிமை, காட்டப்பட்ட வேகம் எல்லாம் எதிர்காலத்திலும் கேள்விக்கும், பரிசீலனைக்கும் உள்ளாகாமல் இருக்க முடியாத ஒன்று.
நீதித்துறை வேலிகள் வேலிகளாக இருக்க வேண்டும். வேலிகள் பயிரைக் காப்பதற்கே – வேலிகள் பயிரை மேய்வதற்கு அல்ல என்பது மறுக்க முடியாத உண்மை!
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
22.10.2024