கொல்கத்தா, அக்.22- மேற்கு வங்க அரசு கொடுத்த அழுத்தத்தால்தான் மருத்துவக் காப்பீடு தவணைத் தொகை (பிரீமியம்) மீது விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்களிக்க அமைச்சா்கள் குழு அளித்த பரிந்துரைத்தது என்றார் மம்தா.
இந்த விவகாரம் குறித்து நிர்மலா சீதாராமனுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அவா் எழுதிய கடிதத்தை பகிர்ந்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு தவணைத் தொகை மீது விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டியை குறைப்பது அல்லது விலக்குவது குறித்து ஒன்றிய அரசுக்கு மேற்கு வங்க அரசு தொடா்ந்து அழுத்தம் கொடுத்தது. இதன் விளைவாக இந்த விவகாரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள அமைக்கப்பட்ட அமைச்சா்கள் குழுவும் இதே பரிந்துரையை அண்மையில் வழங்கியுள்ளது.
இதையடுத்து, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கொள்கைகளை விலக்கிக்கொள்ளும் முடிவை எடுக்கும் சூழலுக்கு ஒன்றிய அரசு தள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக நல்ல முடிவை ஜிஎஸ்டி கவுன்சில் எடுத்தால் அதனால் எண்ணற்ற மக்கள் பயனடைவா்’ என குறிப்பிட்டார். முன்னதாக, மருத்துவக் காப்பீடு தவணைத் தொகை மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி-யில் இருந்து முழுமையாக விலக்களிக்க பிகார் துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்தரி தலைமையில் பல்வேறு மாநில பிரதிநிதிகளை உள்ளடக்கிய 13 போ் குழு 19.10.2024 அன்று பரிந்துரைத்தது.