ஆளுநர் ரவி ஆளுநரா? ஆரியரா? என்ற முதலமைச்சரின் கேள்வி மிகச் சரியே!
பா.ஜ.க. ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்புக்கு கடும் கண்டனம்!
சென்னை,அக். 22- “ஆளுநர் ரவி ஆளுனரா ஆரியரா?”என்ற முதலமைச்சரின் கேள்வி மிக மிகச்சரியே எனவும், பா.ச.க. ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்புக்கு தமிழியக்கங்களின் கூட்டமைப்பு கண்டணம் எனவும் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங் கவிக்கோவா.மு. சேதுராமன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டின் ஆளுநர் ரவியின் தமிழ் – தமிழர் – தமிழ்நாட்டின் மீது கொண்டுள்ள வெறுப்புணர்வுகள் எல்லைமீறிப் போய்க் கொண்டுள் ளன. தமிழர்கள் மொழி இனப் பண்பாட்டுணர்வை அறியாத ஆளுநர் அவர் வந்ததிலிருந்து ஒன்றிய அரசின் கைக்கூலியாக மாறி, தெளிவின்மையோடு, திட்ட மிட்டுத் தமிழ்நாட்டு மக்களைப் புண்படுத்தும் கருத்துக்களைக் கூறிக்கொண்டே வருகிறார். தமிழ்நாட்டுப் பல்துறையினரும் கண்டித்தும் ஆளுநர் திருந்த வில்லை!
மென்மேலும் அடாவடித்தன மாகவே தமிழ்மொழி, இன வெறுப்புணர்வுகளையே தூண்டும் போக்கில் நடந்து வருகிறார் ஆளுநர். இப்போது அவர் கலந்து கொண்ட நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்திலுள்ள ‘திராவிடம்’ என்ற சொல்லை நீக்கிவிட்டு வாழ்த்துப்பாடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள வானொலி நிலையத்தில் ஹிந்திக்கு மட்டும் ஒருமாதம் நிகழ்வு நடத்தி விழாக் கொண்டாடுவது வன்மமான ஹிந்தித் திணிப்பு ஆகும். தொடர்ந்து இந்தித் திணிப்பையும், சமற்கிருதத்திணிப்பையும் பா.ச.க. ஒன்றிய அரசு பொறுப் பேற்றதிலிருந்து வன்மமாகச் செய்து வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் பெயர்களெல்லாம் ஹிந்தியிலேயே வைக்கிறார்கள். செம்மொழித் தமிழுக்கு கிள்ளிக் கொடுத்துவிட்டு, சமற்கிருதத்திற்கு அள்ளிக் கொடுக்கிறார்கள்.
இப்போது ஹிந்தியை ஏற்றுக் கொண்டால்தான், கல்வி உதவித் தொகையைத் தமிழ்நாட்டிற்குத் தருவோம் என அடம்பிடிக்கிறது ஒன்றிய அரசு! மொழிப்போர் தந்த இருமொழிக் கொள்கைக்குத் தீங்கு செய்கிறார்கள். தமிழ்நாடு முதன்மை முதலமைச்சர் எல்லாவற்றையும் பொறுமையோடு, அரசியல் சட்டம் வழங்கும் உரிமையோடு, உண்மை நிலையை எடுத்துக் கூறி வருகிறார். ஆனால் ஒன்றிய அரசு செவிமடுக்கவில்லை. இத்தகைய இந்திய ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளைக்கும் போக்கைச் செய்து வரும் ஒன்றிய அரசிற்கு கைக்கூலியாக தமிழ்நாட்டு ஆளுநர் நடந்து வருகிறார். இருந்தும் நயத்தக்க நாகரிகமாகத் தமிழ்நாடு அரசு நடக்கிறது.
இப்போது தன் முழுமையான வெறுப்பைக் காட்டும் விதத்தில் தமிழ்நாட்டு வானொலி நிலைய ஹிந்தி விழாவில் பாடும் தமிழ்வாழ்த்தில் “திராவிட நல்திருநாடும்” என்ற சொற்களை விட்டு விட்டுப் பாடப்பட்டுள்ளது. இதனை ஆளுநர் இரவி யோக்கியமானவராக இருந்தால் தட்டிக் கேட்டுத் திருத்தி இருக்க வேண்டாமா? இதனைச் செய்யாமல் தமிழின வெறுப்பு நிலையை நியாயப்படுத்த ஆளுநர் பசப்புகிறார். நம் முதலமைச்சர் தமிழ்மக்களை இழிவுபடுத்திய ஆளுநரை “இவர்ஆளுநரா? ஆரியரா?” என்று கேட்டுள்ள கேள்வி சரியான வினாவாகும்.
ஒன்றிய அரசு அடாவடித் தனமாகப் புகுத்தும் ஹிந்தி மொழி ஆதிக்கத்தையும் தமிழ் நாட்டு ஆளுநர் தமிழ், தமிழர் விரோத வஞ்சகப் போக்கையும் தமிழியக்கங்களின் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த நிலைகள் நீடித்தால் மீண்டும் மொழிப் போர்க்களம் காண்போம் என பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேது ராமன் தமிழியக்கங்களின் சார்பாக அறிக்கை விடுத்துள்ளார்.