மதப் பண்டிகைகள் மக்களின் மூடநம்பிக்கைச் சேற்றில் முளைத்தவை. மனிதனின் அறிவும், பொருளும், பொழுதும் நாசமாகப் போகின்றன என்பது ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம் உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சுற்றுச் சூழல் மாசாகும்.
இந்தக் கேடால் காற்று, நீர், மண் வளங்களும் உயிரினங் களும், தாவரங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன. சுற்றுச்சூழல் மாசுபடுவதால் மக்கள் வாழ்வு பெரும் பாதிப்புக்கு ஆளாகும்.
தற்போது உலகை அச்சுறுத்தும் பத்து அம்சங்களுள் சுற்றுச்சூழல் மாசும் முக்கியமான ஒன்று என அய்க்கிய நாடுகளவை அறிவித்துள்ளது.
இந்த மாசானது சில வேதியியல் பதார்த்தங்களாகவோ அல்லது வெப்பம் ஒளி, ஒலி போன்ற சக்திகளானதாகவோ இருக்கலாம்.
பல்வேறு வகையான வேதியியற் பொருள்களும், தூசியும், வளி மண்டலத்துக்கு வெளியேற்றப்படுவதன் மூலம் வளி மாசடைகின்றது.
தற்காலப் போக்குவரத்து ஊர்திகளாலும், தொழிற்சாலை களாலும் வெளியிடப்படும் கார்பன் மோனாக்சைடு, கந்தக ஈராப் சைடு, குளோரோ, ஃபுளோரோ கார்பன்கள், நைட்ரஜன் ஆக்சைடுகள், மீத்தேன் என்பன வளி மாசடைவதற்கான காரணிகளாகும்.
தொழிற்சாலைகள், வேளாண் பண்ணைகள், நகர்ப்புறக் கழிவுகள் முதலியவற்றிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருள்கள் நீர் நிலைகளில் கலந்து விடுவதால் நீரின் தூய்மை கெடுகிறது.
வளி மண்டலத்துக்குச் செல்லும் மாசுகள் மழை நீருடன் கலந்து நிலத்தை அடைகின்றன. நீருடன் நிலத்தின் அடிக்குச் சென்று நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகின்றன. கதிரியக்கக் கழிவுகள் மற்றொரு பக்கம், காடுகளை அழிப்பதால் வெப்பம் மாசு அடைகின்றது.
போதும் போதாததற்கு மதப் பண்டிகைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபடும் ஆபத்து!
ஆகஸ்ட் முதல் வாரம் பிள்ளையார் சதூர்த்தியில் துவங்கி அடுத்த ஆண்டு மார்ச் முதல்வாரம் வரும் ஹோலி என்ற பண்டிகை வரை சுற்றுப்புறத்தை கிட்டத்தட்ட நாசம் செய்துவிடுவார்கள்.
அத்தனையும் கடவுள் நம்பிக்கை என்ற பெயரால்! மும்பைக் கடலில் வீசப்பட்ட பிள்ளையார் சிலைகள் அனைத்தும் பிளாஸ்டர் ஆப் பாரீசில் செய்தவைகள்.. கடலில் கரையாமல் அத்தனை சிலைகளும் ம்ீண்டும் கரையில் தள்ளப்பட்டு கடற்கரையை அசிங்கப்படுத்தியுள்ளன.
இது எல்லாக் கடற்கரைகளிலும் நடப்பது தான்!
சில நாட்களுக்கு முன்பு அலங்கரித்து பூஜை செய்த சிலை இன்று அசிங்கம் செய்யும் பொருளாக மாறிவிட்டது
விநாயகர் ஊர்வலம் என்பதைத் தொடர்ந்து நீர் நிலைகளில் பிள்ளையார் பொம்மைகள் கரைக்கப்படுகின்றன.
விதவிதமான விஞ்ஞானப் பெயர் சூட்டப்படும் பிள்ளையார்கள்! கிரிக்கெட் பிள்ளையார், கார்கில் பிள்ளையார் என்று 20 அடி, 30 அடி உயரத்தில் எல்லாம் உருவாக்கிக் கடலில் கொண்டு போய்க் கரைக்கிறார்கள். பிளாஸ்டிக், பைபர் போன்ற பொருள்களால் இந்த விநாயகர் பொம்மைகள் உருவாக்கப்படுவதால், எளிதில் நீரில் கரைவதும் இல்லை. கிரேனைக் கொண்டு எல்லாம் அடித்துத் துவம்சம் செய்கிறார்கள்.
கடவுள் என்பது எல்லாம் வெறும் கற்பனையே என்று கூறி, செயல்முறை விளக்கமாக பிள்ளையார் பொம்மைகளை பகுத்தறிவுவாதிகள், கருஞ்சட்டைத் தோழர்கள் உடைத்துக் காட்டினால் பக்தர்களின் மனம் புண்படுகிறது என்று கூக்குரல் போடுவோர் – விநாயகர் பொம்மைகளை கடலுக்குள் தள்ளி உடைத்து நொறுக்கும் போது – மனம் புண்படுவதில்லையாம்.
விநாயகர் சதுர்த்தி கொண்டாடி, ஊர்வலம் நடத்தி நீர் நிலைகளை மாசுபடுத்துவதைத் தொடர்ந்து அடுத்து சில நாட்களில் தீபாவளி வந்து தொலை(க்)கிறது.
தீபாவளி என்றால் பட்டாசு தூள் தூள்தான். ஒரு நாள் கூத்துக்கு வெடிக்கப்படும் வெடிகள், பட்டாசுகள் இவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு என்ற கேட்டிலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதல்ல.
சாவு மற்றும் திருமண ஊர்வலங்களிலும் வேட்டுகள் போட்டுத் தூள் கிளப்புகிறார்கள்! சிங்கப்பூர் போ்னற நாடுகளில் பட்டாசு வெடிப்பது தடைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில்கூட தலை நகரமான டில்லியில் பட்டாசு வெடிக்கத் தடை என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சில விதிமுறைகளை அறிவித்துள்ளது. தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பதே அந்த ஆணை.
கடந்த ஆண்டேகூட இத்தகைய ஆணை வெளிவந்த துண்டு. ஆனால் இது வெறும் காகித ஆணையாக இருக்கிறதேயன்றி நடைமுறையில் நடப்பதில்லை.
தீபாவளி வருவதற்கு பத்து நாட்களுக்கு முன்பே வெடிச் சத்தம் கேட்க ஆரம்பித்து விடுகிறது.
வீட்டில் மீதி மிச்சம் வைத்திருக்கும் பட்டாசுகளை அடுத்து கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகைப் பண்டிகையின்போது வெடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
மதம் மடமையை வளர்ப்பதுடன், மனித வாழ்வின் உயி ரோடும் விளையாடுகிறது. சுற்றுச்சூழல் கேடு பற்றி படித்தவர்கள், விவரம் தெரிந்தவர்களே பட்டாசு வெடிக்கிறார்கள். ராக்கெட் வெடிகளை வெடிக்கிறார்கள் என்றால், அது எத்தகைய பொறுப்பற்ற செயல்!
ஒன்றிய அரசு பொதுவாகஇதைத் தடுக்க சட்டம் கொண்டு வந்தால்கூட வரவேற்கத்தக்கதே!