பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்
“நம் மகள்களைப் பாதுகாப்போம்” (“Beti Bachao”) என்கிற பாஜக கூட்டணி அரசின் முழக்கத்தைக் கேலிக்கூத்தாக்கும் விதத்தில் கடந்த சில மாதங்களாக பெண்கள் மற்றும் சிறுமிக ளுக்கு எதிராக நடைபெற்றுள்ள பாலியல் வன்முறை நிகழ்வுகள் மிகவும் கவலை அளிக்கும் விதத்தில் அதிகரித்துள்ளன. நடைபெற்றுள்ள நிகழ்வுகளில் பெரும்பாலானவை பாலியல் வல்லுறவு மற்றும் கொலைகளில் முடிந்திருக்கின்றன.
இந்தியாவில் இப்போது ஒவ்வொரு நாளும் பாலியல் வல்லுறவு நிகழ்வுகள் 86– க்கும் மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறைந்தபட்சம் 49 குற்ற நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்வுகளில் பெரும்பாலானவை பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. திரிணாமுல் காங்கி ரஸ் கட்சி ஆளும் மேற்கு வங்கத்திலும்கூட பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராகக் கொடூரமான முறையில் குற்றங்கள் நடந்து கொண்டிருப்பதையும் பார்க்கிறோம்.
கருநாடகாவில்…
கருநாடகா மாநிலத்தைச் சேர்ந்த, பாஜக ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்திடும் முக்கிய அரசியல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவரும், சென்ற மக்களவைத் தேர்தலின்போது தேர்தலில் படுதோல்வி அடைந்தவருமான ஒரு நபர், தன்னுடைய கட்சியைச் சேர்ந்த பெண்கள் பலரையும் இதர பெண்களையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியும், பாலியல் ‘துஷ்பிரயோகம்’ செய்தும் உள்ளதற்காகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார். இந்த நிகழ்வுகளுக்கு எதிராக ஒரு சில இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுள்ள போதிலும், வாய்ப்புக் கேடாக அவை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திடவில்லை.
கிரிமினல்களின் கேடயம்
மேற்குவங்கத்தில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் நடத்தி வரும் போ ராட்டம், முன் னெப்போதும் இல்லாத அளவிற்கு நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்க ளில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கோபாவேசம், குறிப்பிடத்தக்க விதி விலக்காகும். மேற்குவங்கத்தில் நடைபெற்று வரும் போராட்டம், மாநில அரசாங்கத்தை மக்கள் மத்தியில் அம்பலப்ப டுத்திக் காட்டி இருப்பது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட வருக்கு நீதி கிடைப்பதில் இருந்துவந்த தடைகள் அகற்றப்படுவதை உறுதி செய்வதற்கும் முயற்சித்திருக்கிறது. மற்ற மாநிலங்களில் உள்ள இடதுசாரி மற்றும் மக்கள் அமைப்புகள் இதிலிருந்து முக்கிய படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
நாடு முழுவதும்
காவல்துறையின் அலட்சியம்
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை தொடர்பான வழக்குகளில் பொது வான பல அம்சங்கள் உள்ளன. பெரும்பாலான வழக்கு களில், உயிர் பிழைத்தவரின் அல்லது குடும்ப உறுப்பினர்களின் நீதிக் கான போராட்டத்தைப் பொறுத்தவரையில் காவல்துறை முற்றிலும் தடையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெண்கள் துன்புறுத்தப்படுவது மற்றும் பாலியல் வல்லுறவு தொடர்பான புகார்களைக்கூட காவல்துறையினர் காது கொடுத்துக் கேட்க வோ அல்லது புகார்களை வாங்கிக்கொள்ளவோ மறுத்துள்ளார்கள் எனக் கூறப்படுகிறது. இதனால் இக்குற்றச்செயல்களில் ஈடுபடும் கயவர்கள் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவதற்கும், பாலியல் வல்லுறவுக் கொடூரச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதற்கும், அவர்களைக் கொலை செய்வதற்கும்கூட வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது.
பாஜக மாநில அரசுகளே குற்றவாளிகளாக…
மற்றுமொரு மிகவும் மோசமாக உள்ள பொது வான அம்சம் என்னவென்றால் இவ்வாறு பாலியல் குற்றங்களைச் செய்திடும் கயவனுக்கு அல்லது கயவர்களுக்கு மாநில அரசாங்கம் கொடுத்திடும் பாதுகாப்பாகும். குறிப்பாக பாஜக ஆளும் மாநி லங்களில் இது வழக்கமான அம்சமாகவே இருந்து வருகிறது.
உத்தரப்பிரதேசத்தில், சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய பாஜக சட்டமன்ற உறுப்பினர், உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தலையிட்டபின்னர்தான் கைது செய்யப் பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தண்டிக்கப்பட்டி ருக்கிறார். அண்மையில் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், பாஜக ஊடகப் பிரிவைச் சேர்ந்த மூன்று நபர்களால், கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். இதற்கெதிராக மாணவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதை அடுத்து, அந்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள்.
இவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மாணவர்கள் கல்லூரிகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு, பல்கலைக்கழகத்தின் ஆத்திரத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.
குஜராத் மாநிலத்தில் கர்ப்பிணிப் பெண் பில்கிஸ் பானுவை பாலியல் வல்லுறவு செய்த பின், அவரது குழந்தையைக் கொலையும் செய்த கயவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகளை ரத்து செய்ததோடு மட்டுமல்லாமல், அவர்களை விடுதலை செய்ததிலும் குஜராத் மாநில அரசாங்கமும், ஒன்றிய அரசாங்கமும் மிகவும் வெட்ககரமான முறையில் ஈடுபட்ட விஷயம் அனைவரும் அறிந்த ஒன்றேயாகும். இதே போன்றே அரியானா பாஜக அரசாங்கமும் பாலியல் வல்லுறவு மற்றும் கொலைக் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட பாபா ராம் ரஹீம் என்பவருக்கு தொடர்ந்து பரோல் வழங்கி அவரைத் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட வைத்தது.
ஊடகங்களின் தவறான பிரச்சாரம்
இந்த வழக்குகளில் பலவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதில் முக்கியப் பங்கு வகித்த ஊடகங்கள், அதே சமயத்தில் இத்தகைய நிகழ்வு களுக்கு, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களே காரணம் என்பதுபோல் பிரச்சாரங்க ளாலும் ஈடுபடுகின்றன. இத்தகைய பிரச்சாரங்களை இவை மக்கள் பிரதிநிதிகள், காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் மூலமாக செய்து வருகின்றன.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்துவரும் வன்முறை வெறியாட்டங்களை எதிர்த்து, பிரச்சாரங்களுக்குத் திட்டமிடும்படி, செப்டம்பரில் நடைபெற்ற மத்தியக் குழுக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிக் கிளைகளுக்கும் அறைகூவல் விடுக்கப்பட்டது. இத்தகைய அட்டூழியங்கள் மீது மட்டும் கவனம் செலுத்தாமல், இது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்காது கடமை தவறியுள்ள காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் மேற்கொண்டு அவர்களும் தண்டிக்கப்படக்கூடிய விதத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்; குற்றம் செய்த கயவர்களை மாநில அர சாங்கங்கள் பாதுகாத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளும்பட்சத்தில், அதனை மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டிட வேண்டும், இது தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை உன்னிப்பாகக் கவனித்திட வேண்டும். அனைத்து ஜனநாயக அமைப்புகளும் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவும், சட்ட உதவியும் அளித்து, நீதியை உறுதிப்படுத்திட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
(அக்டோபர் 16, 2024)
தமிழில் : ச.வீரமணி