இரா.முத்தரசன்
மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் துணை யோடு, ஆசிர்வாதத்தோடு சாமியார்கள் போடும் ஆட்டத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது.
தங்களை கடவுளின் அவதாரம் எனக் கூறிக்கொண்டு, கோடிகளுக்கு அதிபதியாக இருக்கிறார்கள் இந்தக் கேடிகள்.
வசதியும், வாய்ப்பும் நிறைந்த குடும்பத்து இளம் பெண்களை வசீகரித்து, தங்களின் வாழ்வை வளப்படுத் திக் கொள்கிறார்கள்.
நித்தியானந்தா என்ற திருவண்ணாமலை சாமியார் ஒருவர் ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடினார்.
தமிழ்நாட்டை வலம் வந்தார்.
திரைப்பட நடிகைகள் உட்பட பல பெண்கள் அவருக்கு சீடர்கள் ஆனார்கள்.
நெற்றி நிரம்ப விபூதி பட்டை – நடுவில் குங்கும பொட்டு, கழுத்து நிரம்ப ருத்ராட்ச மாலை, கையில் வேல் என வலம் வந்தார் நித்தியானந்தா.
அவருக்கு, ஊடகங்கள் அளித்த முக்கியத்துவம் அடேயப்பா, அதனை என்னவென்று சொல்வது?
நாளேடு, வார இதழ்கள் என சாமியாருக்கு வானளவிய புகழ் சேர்க்கும் வண்ணம் புகழ்ந்து தள்ளின.
சாமியாரை சந்தித்து தங்களது மனக்குமுறல்களை எல்லாம் கூறி, காணிக்கை செலுத்தி, அவரிடம் ஆசீர் வாதம் பெற்றால் நம் குறைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என அப்பாவி மக்கள் நம்பத்தான் செய்தார்கள்.
முற்றும் துறந்த முனிவர், சடா முடியுடன் வலம் வருபவர், ஆனால் அவருக்கு பெண்ணும், பொன்னும் முக்கியம்.
பெண்களும், பொருள்களும் நிரம்பவே சேர்ந்தன.
யோக்கியன், அயோக்கியன் ஆனான். காவல்துறை வழக்கு போட்டது. சாமி போன இடம் தெரியவில்லை. தப்பித்தான், எங்கோ சென்றான்
தனிநாடு அமைத்துக் கொண்டு, சகல விதமான வசதிகளோடும் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறானாம்.
முற்றும் துறந்திட்ட சாமியார் தற்போது உடல் நலம் இன்றி, எலும்பும் தோலுமாய், பார்க்க சகிக்க முடியாத, எவரும் அவரிடத்தில் நெருங்க முடியாத, அருவருக்கத்தக்க நோயால் அவதிப்படுகிறார் என்று, அன்று புகழ்ந்து எழுதிய வார ஏடுகள் தற்போது இப்படி எழுதுகின்றன. என்ன கொடுமை அய்யா?
அந்த சாமியார் சீரழிந்தது மட்டுமல்ல, ஏராளமான பெண்கள் சீரழிந்தார்கள். பெற்ற தாய் தந்தையரை இழந்தார்கள். அவமதித்தார்கள்.
ஆனாலும் மக்கள் பாடம் கற்றுத் தெளிந்ததாக தெரியவில்லை.
ஒரு சாமியாரா? இரண்டு சாமியாரா? நாடு முழுவதும் பல நூறு சாமியார்கள் வலம் வந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இன்றைக்கும் அவர்கள் தனி ராஜ்ஜியம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அயோக்கியர்களுக்கு அரசு, நீதிமன்றங்கள், அதி காரிகள் என அனைவரும் பாதுகாப்பு அரணாக இருந்து, சாமியார்களுக்கு வாழ்வளித்துக் கொண்டுதான் உள்ளார்கள்.
கோவை மாவட்டத்தில் ஜக்கி வாசுதேவ் என்ற சாமியார்.
நல்ல உயரம், அழகான வெண்தாடி, தலையில் கவர்ச்சியான முண்டாசு, ஆடை அலங்காரம். மற்ற சாமியார்கள் போன்று இவர் காவி உடை அணிந்து, சன்னியாசி வேடம் போட மாட்டார். இவர் மிக நவீன சாமியார். குடும்பம் உண்டு. மக்கள் உண்டு. இவர் யோகா மய்யம் ஒன்று நடத்துகிறார்.
யோகா மய்யத்திற்கு ஏக்கர் கணக்கில் இடம் உண்டு, மலை அடி வாரத்தில் அமைந்துள்ள யோகா மய்யத்திற்கு, உரிய இடங்கள் பல கிராமங்களை உள்ளடக்கியது. வனத்திற்கு சொந்தமான இடங்களை எல்லாம் வாரி சுருட்டி வளைத்து போட்டு உள்ளார் என்று வார இதழ்கள் எழுதுகின்றன.
வனத்திற்குரிய இடத்தில் ஆடு மேய்க்காதே, மாடு மேய்க்காதே, மேய்த்தால் அபராதம் என ஏழை எளிய மக்களை வனத்துறை அச்சுறுத்துகிறது. அலைக்கழிக்கிறது.
புலிகள் காப்பகம் என்று மிரட்டுகிறது. யானை வழிப்பாதை என்று கூறி, நூற்றாண்டிற்கும் மேலான அரசு பழப்பண்ணையை மூடுகிறது. ஆனால் இந்த சட்டங்கள் எல்லாம் எளிய மக்களுக்கு மட்டும்தான்!
சாமியாரை நெருங்க அச்சப்படுகிறது. சாமியார் எவ்வளவு நிலத்தை வேண்டுமானாலும் அபகரிக்க அனுமதிக்கிறது.
சாமியாரைக் கண்டு ஏன் இந்த அச்சம் என்று புரியவில்லை?
சாமியார் ஆண்டு தோறும் மகா சிவராத்திரி என்று பெரும் விழாவை நடத்துகின்றார்.
சிவபெருமானின் பிரம் மாண்டமான சிலை, அதனை சாட்சியாக வைத்து சாமியார் ஜக்கி நடனமாடுவார்.
இந்த நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள்.
இரவு முழுவதும் இந்நிகழ்ச்சி நடைபெறுகின் றது. சிவராத்திரி அன்று இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்தால், மரணத்திற்குப் பின்னர் மோட்சலோகம் அடையலாம் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் உள்ளது. அந்த நம்பிக்கையின் காரணமாக மக்கள் அங்கே பெரும் கூட்டமாக கூடுகின்றார்கள்.
மக்கள் மட்டும் கூடவில்லை – நாட்டின் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், ஒன்றிய அமைச்சர் பெருமக்கள், நீதி வழங்கும் நீதிபதிகள், உயர் அதிகாரிகள் என ஆண்டுதோறும் சாமியாரின் நடனத்தைக் காண வருகின்றார்கள்.
இத்தனை பெரிய மனிதர்கள். பெரும் பொறுப்பில் உள்ளவர்கள், அழைக்கப்பட்டோ, அவர்களாகவோ செல்கின்ற போது, உள்ளூர் அதிகாரிகள் என்ன செய்ய முடியும்? அவர்களும் வளைந்து, குனிந்து சேவகம் புரிகின்றார்கள். சாமிக்கு வளையாமல் நிமிர்ந்தா நிற்க முடியும்?
அரசு நிலங்கள், வனத்திற்கு சொந்தமான இடங்கள் என அனைத்தும் சாமியாரின் யோகா மய்யத்திற்கு சொந்தமாகிவிட்டது என்பது மட்டுமல்ல.
இளம் பெண்களும் சொந்தமாகி விட்டார்கள் என்பது தான் மிகப் பெரும் சோகம்.
கடந்த ஓராண்டுக்கு முன்பாக யோகா மய்யத்தில் அடைக்கலமான ஒரு பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணத்தை எய்தினார்.
மனைவியை பறிகொடுத்த கணவன் கதறினான். ஏழை கணவனுக்கு நியாயம் கிடைக்கவில்லை. அவனது கதறல் நின்றபாடில்லை. ஒரு கணவன் அல்ல. ஏராளமான கணவன்மார்கள் மட்டுமல்ல, தாய், தந்தையர்களின் கதறல் தொடர்கின்றது. தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
ஏராளமான பெண்கள் குறிப்பாக இளம் பெண்கள், வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்த இளம் பெண்கள் யோகா மய்யத்தில் சேருகின்றார்கள்.
யோகா மய்யத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் காரணமாக, பின்னர் ஏற்படப் போகின்ற விபரீதங்கள் குறித்து அறியாது, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை யோகா மய்யத்தில் சேர்த்து விடுகின்றார்கள்.
யோகா மய்யத்தில் சேர்ந்த பெண்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகிறது.
யோகா மய்யத்தில் சேர்ந்த பெண்கள். திரும்ப தாய், தந்தையர்களை, உடன் பிறந்த சகோதர, சகோதரிகளை கூட பார்ப்பதற்கு ஆண்டு கணக்கில் வீட்டிற்கு வருவதில்லை. ஈஷா மய்யத்துக்கே பெற்றோர்கள் சென்றாலும், பார்க்க அனுமதிப்பதில்லை. முற்றாக தங்களின் குடும்பத்தை துறந்து விடுகின்றனர்.
பத்து மாதம் சுமந்து, பெற்று வளர்த்த தாயை வேண்டாம் என்கிறார்கள்.
தாயும், தந்தையும் கதறுகின்றனர். அய்யோ நாங்கள் பெற்ற பிள்ளைகளை, வளர்த்த பிள்ளைகளை காண முடியவில்லையே என கதறுகின்றார்கள்.
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் காமராஜ், சத்யஜோதி தம்பதியினர். தங்களின் இரு மகள்கள் சீதா, லதா ஆகிய இருவரும் கடந்த 2011 ஆம் ஆண்டு யோகா மய்யத்தில் சேர்ந்தவர்கள். 13 ஆண்டுகள் ஆன நிலையில், தங்களின் பெற்றோர்களை நிராகரிக்கின்றார்கள்.
தாய்க்கு உடல்நலம் இல்லை. மிகுந்த கவலையோடு இருக்கிறார்கள். நீங்கள் வந்து அம்மாவைப் பாருங்கள் என்று தந்தை கெஞ்சுகிறார்.
மகளின் பதில் என்ன தெரியுமா? தாய் எப்படி இருந்தால் எனக்கென்ன? அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்கிற பதில் தான்.
இரு பெண்களின் பெயர்களும் மாமதி, மாமாயூஎன பெயர் மாற்றம் செய்யப்பட்டதுடன். பெண்கள் மொட்டை அடிக்கப்பட்டுள்ளார்கள்.
தந்தை காமராஜ் கெஞ்சி, கதறி பயனில்லை. உயர் நீதிமன்றத்தை நாடினார். யோகா மய்யத்தில் நடைபெறும் அட்டூழியங்களை எடுத்துரைத்தார்.
மய்யத்தில் பணிபுரியும் டாக்டர் பெண்களை சீரழித்ததால், அவர் போச்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பின் வெளிவந்துள்ள விவரங்களை எடுத்துரைத்தார்.
தங்களின் பெண் குழந்தைகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, மொட்டையடிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சாமியாரின் மகளுக்கு திருமணம் நடைபெறுகின்றது என்ற விவரங்களை எல்லாம் ஆதாரத்துடன் எடுத்துக் கூறினார்.
இதனை செவிமடுத்து கேட்ட சென்னை உயர்நீதிமன்றம், யோகா மய்யத்தில் என்னதான் நடக்கிறது? இதுவரை எத்தனை வழக்குகள் போடப்பட்டுள்ளன? அங்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவை ஏற்று காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டார்கள்.
சாமியார் என்ன சாதாரண நபரா? உச்ச நீதிமன்றம் சென்றார். உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு தடை விதித்து விட்டது.
தனது யோகா மய்யத்தில் எந்தத் தவறும் இல்லை என்றால், சாமியார் விசாரணையை எதிர் கொள்ள மறுப்பது ஏன்?
பாதிக்கப்பட்டுள்ளோர்களுக்கு நியாயம் கிடைக்காதா?
அநியாயங்களுக்கும், அயோக்கியத்தனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது எப்போது?
மக்கள் கிளர்ந்து எழுந்தால் நியாயம் கிடைக்கும். அயோக்கியர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள்.
அயோக்கியர்களின் ஆட்டம் முடிவிற்கு வரும்!
நன்றி: ‘ஜனசக்தி’ 13–19.10.2024