தமிழ்நாடு ஆளுநர் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவும், மாநில ஆட்சிக்கு எதிராகவும் தொடர்ந்து நடந்து வருகிறார்!
இதற்கொரு முற்றுப்புள்ளியை வைக்காவிட்டால், அரசமைப்புச் சட்ட ஆட்சியாக எந்த ஆட்சியும் நடைபெற முடியாது!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கே விரோதமாகவும், ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதியாகவும் நடந்துவருகிறார். இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்கப்படாவிட்டால், அரசமைப்புச் சட்ட ஆட்சியாக எந்த ஆட்சியும் நடைபெற முடியாது; இறையாண்மை என்பது மக்களிடம்தான் உள்ளது என்பதை மறக்கவேண்டாம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது பதவிக் காலம் முடிந்த நிலையில்கூட, முழு மறு நியமனம் பெறாது… ‘until further orders‘ என்று அதிகார ஆணைகளில் குறிப்பிடுவதுபோன்ற ஒரு பதவி நீடிப்பில் இருந்துகொண்டு, அவரது ஆளுநர் பதவிக்கு எவ்வளவு மதிப்பிழப்பினையும், மதிப்பைக் குறைத்துத் தகர்க்கும் வகையிலும், தாம் எடுத்த அரசமைப்புச் சட்டப்படிக்கான உறுதிமொழியை அறவே புறக்கணித்தும், ஆர்.எஸ்.எஸ்.காரராக, ஆரிய கலாச்சாரத்தினை அரசு செலவில் பரப்பிடும் ஆணவப் போக்குடன் தமிழ்நாடு அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை ஏற்படுத்தி, ஓர் எதிர்க்கட்சித் தலைவர் நானே என்று பகிரங்கப்படுத்திடுவதுபோல், கடந்த பல ஆண்டுகளாக நடந்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசுடன் நித்தம் நித்தம் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி, தனக்கு விளம்பர வெளிச்ச ‘சடகோபத்தினை’ சூட்டிக் கொள்பவராகத் திகழ்கிறார், அரசமைப்புச் சட்டத்தை மதிக்காதது மட்டுமல்ல, அதன் அங்கங்களான சட்டமன்றம், நீதிமன்றம் – இவற்றிற்கு எதிராக விரும்பத்தகாத நிலைப்பாட்டை எடுத்து, உச்சநீதிமன்றத்தின் கடும் விமர்சனங்களுக்கு – ஒருமுறை அல்ல, பலமுறை ஆளாகியிருப்பது, அவருக்கு மட்டும் அவமானம் அல்ல; அவரை தனது பிரதிநிதியாக நியமித்து அனுப்பிய ஒன்றிய அரசுக்கும் அவப்பெயரையும், அவமானத்தையும் நாளும் ஏற்படுத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் நடந்திராத வகையில் எதிர்க்கட்சிபோல சட்டமன்றத்தைவிட்டு வெளிநடப்பு செய்தவர் ஆளுநர் ரவி!
மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசின்,
1. சட்ட வரைவுகளைத் தேக்கி வைத்து, கிடப்பில் போடுவது!
2. முக்கிய பெரு நியமனங்களின் கோப்புகளையும் எளிதில் திருப்பி அனுப்பாது, அளவற்ற காலதாமதம் செய்து, தனது அதிகாரத்தை ஏதோ வானளாவிய அதிகாரம் என்று கருதி நடப்பது!
3. தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் நடக்காத ஒன்று, எதிர்க்கட்சி அரசியல் தலைவர் போல வெளிநடப்புச் செய்தது!
4. Ex-officio ‘வேந்தர்’ – அரசு பல்கலைக்கழகங்களுக்கு என்ற நிலையைத் தவறாகப் பயன்படுத்தி, ஊழல் குற்றம் சுமத்தப்பட்ட துணைவேந்தர்களைப் பாதுகாக்கிறாரோ என்கிற சந்தேகம் ஏற்படும்படி பட்டாங்கமாய் நடப்பது!
5. மாநில அரசுக்குப் போட்டி அரசின் தலைமைச் செயலகமாக ஆளுநர் மாளிகையை மாற்றி, மதச்சார்பின்மை மற்றும் பல திட்டவட்ட ஆட்சியின் கொள்கைகளுக்கு நேர் முரண்பாடாகப் பேசி, தமிழ்நாடு அரசினையே விமர்சிப்பது!
மாநில அரசின் அடிப்படைக் கொள்கைக்கு எதிராக ஆளுநர் நடக்கலாமா –
நடக்கத்தான் முடியுமா?
6. தமிழ்நாடு அரசின் அடிப்படைக் கொள்கைகளுக்கு நேர் எதிர்மறையாக நடந்து, தனக்கு ஒன்றிய அரசின் ஆதரவு உண்டு என்று நினைக்கும்படி தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடுவது!
இதுபோன்ற பல நடவடிக்கைகளை நாளும் நிலைநாட்டி வருவதன்மூலம், மாநிலங்களையே தனி அரசாக இருக்க விடக்கூடாது என்ற அடிப்படையில், ஆர்.எஸ்.எஸ். கருத்தை ஒருபுறம் கூறிக் கொண்டுள்ளார். அப்படியே பார்த்தாலும், மற்றொருபுறம் cooperative federalism – ‘கூட்டுறவுடன் உள்ள கூட்டாட்சி’ என்ற ஒரு தத்துவத்திற்குக்கூட இந்த ஆளுநரின் நடத்தைகள் முரணானதல்லவா?
தமிழ்நாட்டில் இவருக்கு ஆர்.எஸ்.எஸ். – பார்ப்பனர் ஆதரவு தவிர, வேறு எல்லாப் பிரிவும் இவரது நடத்தையை ஏற்காதவர்கள்தான். செல்லுமிடங்களில் எல்லாம் எதிர்ப்பு – கருப்புக் கொடி, ‘திரும்பிப் போ!’ என்று மக்கள் மன்றத்தின் கண்டனத்திற்குள்ளாகியே வருகிறார்!
மக்கள் வரிப் பணத்தில் தனது ‘சுயசார்பு காவியாளராக’ அதனை நடத்தி, தீராத களங்கத்தை ஏற்படுத்தி வருவதுதான் அவரது ‘‘சாதனையோ சாதனை!’’
தமிழ்நாட்டு வரலாற்றில் இப்படி ஒரு அரசியல் அவலமும், ஆணவமும், இதற்குமுன் எந்த ஆளுநரிடமும் – அது கண்டதே இல்லை.
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்காமல், அரசமைப்புச் சட்ட ஆட்சியாக எந்த ஆட்சியும் நடைபெற முடியாது!
இறையாண்மை என்பது
மக்களிடமே!
இறையாண்மை யாரிடம்? அரசமைப்புச் சட்டப்படி அது மக்களிடம்தான் – மக்கள் மன்றமே இறுதித் தீர்ப்பு வழங்கும் மன்றம்!
அதன் ‘‘விஸ்வரூபத்தின்’’ முன் எவரும் பணிந்தே தீரவேண்டும் என்பது காலம் கற்றுத் தரவேண்டிய பாடமாகும்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
21.10.2024