புவனேஷ்வர், அக்.20 காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டதற்காக ஒடிசா நடிகர் புத்தாதித்யா மொகந்தி மீது இந்திய தேசிய மாணவர் சங்கம் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளது. ஒடிசா நடிகர் புத்தாதித்யா மொகந்தி தனது சமூக ஊடக பதிவில், ‘என்சிபி தலைவர் பாபா சித்திக் கொல்லப்பட்ட பின்னர், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் அடுத்த இலக்கு காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தியாக இருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தலைவர் உதித் பிரதான் புவனேஷ்வர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். நடிகர் புத்தாதித்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த புகாருடன் சமூக ஊடக பதிவின் நகலும் இணைக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த பதிவை நீக்கியுள்ள நடிகர் மொகந்தி, தனது பதிவிற்கு மன்னிப்பு கோரியுள்ளார். அதில்,’ராகுல்காந்தி குறித்த எனது பதிவு அவரை எந்த வகையிலும் குறிவைக்கவோ, தீங்கு செய்யவோ, இழிவுபடுத்தவோ இல்லை. அவருக்கு எதிராக எதையும் எழுதவும் இல்லை. வேண்டுமென்றே யாருடைய உணர்வுகளையும் பாதிக்கவேண்டும் என்பது எனது நோக்கமல்ல. இதற்காக மனப்பூர்வமாக மன்னிப்புகோருகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.