திருவள்ளூர், அக்.20- தமிழ்நாட்டில் 100 இடங்களில் பூங்காவுடன் கூடிய நூலகம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நுழைவு வாயில் வலதுபுறம் பூங்கா உள்ளிட்ட அனைத்து நவீன வசதியுடன் கூடிய நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கும் நிகழ்ச்சி 18.10.2024 அன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆட்சியா் த.பிரபு சங்கா் தலைமை வகித்தாா். இதில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிறுபான்மையினா் நலன் மற்றும் அயல்நாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் ஆகியோா் பங்கேற்று நூலகத்தைத் தொடங்கி வைத்தனா்.
பின்னா், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யா மொழி கூறியது:
பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் நூலகம் அமைக்க அரசு திட்டமிட்டது. இதுபோன்ற இடங்களில் நூல்கள், நாளிதழ்களை பொதுமக்கள், பல்வேறு தரப்பினா்கள் பாா்வையிடுவா். அதன் மூலம் வாசிப்புப் பழக்கம் உருவாகும்.
தமிழ்நாட்டில் 100 இடங்களில் பூங்காவுடன் அமைந்த நூலகம் அமைக்க அரசால் திட்டமிடப்பட்டு, முதல் நூலகமாக திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு ஒரே நேரத்தில் 50 பேரும், நூலகப் பூங்காவிலும் 50 பேரும் அமா்ந்து புத்தகங்கள் படிக்கலாம். இந்த நூலகத்தை உருவாக்கித் தந்த குழுவுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மற்ற மாவட்டங்களிலும் ஆட்சியா்கள் இது போன்ற நூலகப் பூங்காவை உருவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருப்பது போல் பாா்வையற்றோா் ஒலிப்பதிவு மூலம் கேட்கும் வசதி இந்த நூலகத்தில் உள்ளது.
மாநில அளவில் சென்னையில் மட்டுமின்றி மாவட்ட வாரியாக அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறோம்.
வாசிப்புப் பழக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வாசிப்போா் இயக்கம் ஒன்றை கொண்டு வந்துள்ளோம். ஒவ்வொரு பள்ளியிலும் நாள்தோறும் 20 நிமிஷம் மதிய வேளையில் நூலகத்திற்கு சென்று ஒரு புத்தகத்தை வாசிக்க வேண்டும். அதன் மூலம் குழந்தைகள் கட்டுரை, ஓவியங்கள், கவிதைகள் புனையும் போட்டியையும் நாங்கள் நடத்தி வருகிறோம்.
மாநில அளவில் 226 தொகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆய்வை மேற்கொண்டேன். இன்னும் 8 தொகுதிகளுக்கு மட்டும் செல்லவில்லை. பள்ளிகளில் சிறந்த உள்கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். தொடா்ந்து பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், குத்தம்பாக்கம் கிராமத்தில் ரூ.63.15 லட்சம் மதிப்பில் புதிதாக அமைத்த கிளை நூலகத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்.
கடவுளைக் காப்பாற்ற மன்றாடும் பக்தர்கள்!
திருவாரூர், அக்.20- தீபங்குடி தீபநாயகர் சுவாமி கோவிலில் கொள்ளை போன, தீபநாயகர் பஞ்சலோக சுவாமி சிலை, அமெரிக்காவில் ஏலத்தில் விட இருப்பதால், அதை மீட்க திருவாரூர் மாவட்டம், குடவாசல் காவல்நிலையத்தில், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி பொன் மாணிக்கவேல் 18.10.2024 அன்று புகார் அளித்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டி:
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே தீபங்குடியில் அமைந்துள்ள சமணக்கோவிலான தீபநாயகர் சுவாமி கோவில், சோழர் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோவிலில் இருந்த தீபநாயகர் பஞ்சலோக சுவாமி சிலை, 20 ஆண்டுகளுக்கு முன் திருடு போனது. சிலை உயரம், 76 செ.மீ., ஆகும்.
தற்போது இச்சிலை அமெரிக்காவில் உள்ளது. சுவாமி சிலையை, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தவர், சஞ்சீவ் அசோகன். இவர், 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர். ஓராண்டாக இவரை கைது செய்யாமல் தவிர்த்து வருகின்றனர். இதுதொடர்பாக, எதிர்க்கட்சிகள் மவுனம் சாதிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
கடந்த, 2004இல் இச்சிலையை வாங்கியவர், அமெரிக்காவை சேர்ந்த சுபாஷ் சந்திரகபூர். சிலை கடத்தல் தொடர்பாக இவரும், ஓராண்டாக கைது செய்யப்படவில்லை. இவர், 2019இல், தீபநாயகர் பஞ்சலோக சிலையை, நியூயார்க் நகரைச் சேர்ந்த ராஜீவ் சவுத்திரியிடம், 2.34 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார். தற்போது, இச்சிலை ஏலத்தில் விற்கப்பட உள்ளதாக தெரிய வருகிறது.
சுவாமி சிலை கொள்ளை தொடர்பாக, சாட்சியத்தை அழிக்க உதவிய டாக்டர் ஜான் டுவிலி மற்றும் ராஜீவ் சவுத்ரி ஆகிய இருவரையும், இந்தியா கொண்டு வர வேண்டும்.
இது குறித்த அனைத்து தகவல்களும், கடந்த ஆண்டு அப்போதைய காவல்துறை தலைவர், உள்துறை செயலர் ஆகியோரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளாக, சிலை கொள்ளையை பற்றி செயல் அலுவலர், அறநிலையத்துறை இணை ஆணையர், காவல் துறையினருக்கு தெரிவிக்காமல் மறைத்து விட்டனர்.
இச்சிலையை மீட்க, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையினர் வழக்கு பதிந்து, நடவடிக்கை எடுப்பர் என, நம்புகிறோம்.
– இவ்வாறு அவர் கூறினார்.