சிதம்பரம் தீட்சிதர்கள் கடவுளைவிட மேலானவர்கள் இல்லை! ஆணவத்துடன் செயல்படக் கூடாது! சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

viduthalai
2 Min Read

சென்னை, அக்.20- சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் நடந்துகொள்ளும் போக்கைக் கண்டித்து
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கூறியதாவது:

சிதம்பரம் நடராஜர் கோயிலில் செவிலியரைத் தாக்கியதாகவும், முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், கனக சபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய உதவியதாக கூறியும் நடராஜ தீட்சிதர் என்பவரை இடைநீக்கம் செய்து பொது தீட்சிதர்கள் குழு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து நடராஜ தீட்சிதர் இந்து அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்திருந்தார். அதனை விசாரித்த கடலூர் இணை ஆணையர், நடராஜ தீட்சிதரின் இடைநீக்க உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து பொது தீட்சிதர்கள் குழுவின் செயலாளர் வெங்கடேச தீட்சிதர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், பொது தீட்சிதர் குழுவின் முடிவில், தலையிட இந்து அறநிலைத்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும், இணை ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடராஜ தீட்சிதர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் கோயில் தங்களுக்குச் சொந்தமானது என பொது தீட்சிதர்கள் நினைப்பதாகவும், நீதிமன்றம்தான் இதனைக் கட்டுப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து, தீட்சிதர்களால் தனக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக சுட்டிக் காட்டிய நீதிபதி, மனத் துயரங்களுக்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்கும் அவமானப்படுத்தப்படுவதாக வேதனை தெரிவித்தார்.

மேலும், தீட்சிதர்கள் ஆணவத்துடன் செயல்படுவதாகவும், இது ஒரு நல்ல அறிகுறி கிடையாது என தெரிவித்த நீதிபதி, சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருபவர்கள் எல்லாம் சண்டைக்கு வருவது போலவே தீட்சிதர்கள் நினைப்பதாகவும் குறிப்பிட்டார்.

‘‘சிதம்பரம் நடராஜர் கோவில் நமக்கு சொந்தமானது என பொது தீட்சிதர்கள் நினைப்பதாகவும், அவர்கள் தங்களை கடவுளுக்கு மேலானவர்கள் என கருதுவதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டினார். சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த ‘ஆருத்ரா தரிசனம்’ தற்போது பல கோவில்களில் நடத்தப்படுவதாகவும், சிதம்பரம் கோவில் ஆருத்ரா தரிசனத்திற்கு முன்பை போல பக்தர்கள் கூட்டம் வருவதில்லை’’ எனவும் கூறினார்.

‘‘இப்படியே இருந்தால் பக்தர்களுடைய வருகை குறைந்து கோவில் பாழாகி விடும் எனவும், கோவிலில் காசு போட்டால் தான் பூ கிடைக்கும் என்றும், இல்லையென்றால் விபூதி கூட கிடைக்காது’’ என்றும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, இந்த வழக்கில் பதிலளிக்குமாறு இந்து அறநிலைத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை நாளை
அக். 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *