அது ஆரியர்களுடையது கிடையாது; வேதத்தினுடையது கிடையாது!!
நமக்கு உண்மையை உணர வைத்த, நம்மை அறிய வைத்த ஜான் மார்ஷலை நாம் மறந்துவிடக்கூடாது!
சிந்துவெளி நாகரிக பிரகடன நூற்றாண்டு: பேராசிரியர் அ.கருணானந்தன் சிறப்புரை
சென்னை, அக்.19 இந்திய நாகரிகத்தைப்பற்றி எழுதுகின்றவர்கள், தொன்மை இந்தியாவில் இரண்டு நகரமயமாக்குதல் என்று குறிப்பிடுகின்றனர். முதல் நகர நாகரிகம் என்பது சிந்துவெளி நாகரிகம். அது ஆரியர்களுடையது கிடையாது; வேதத்தினுடையது கிடையாது. இரண்டாவது நகர நாகரிகம் என்பது புத்தர் காலத்திய மகாஜன பதங்கள் என்று சொல்லப்படுகின்ற காலத்தில் வருகின்ற கோசல மகதம் போன்ற அந்த நகர நாகரிகம். இந்த இரண்டாம் கட்ட நகர நாகரிகம், திராவிடர் உதவியைப் பெற்று, தொழில்நுட்பத்தைப் பெற்று உருவாக்கப்பட்ட கலப்பு நகரங்கள். நமக்கு உண்மையை உணர வைத்த, நம்மை அறிய வைத்த ஜான் மார்ஷலை மறந்துவிடக்கூடாது என்றார் பேராசிரியர் அ.கருணானந்தன் அவர்கள்.
சிந்துவெளி (திராவிட) நாகரிக பிரகடன நூற்றாண்டு தொடக்க விழா!
கடந்த 24.9.2024 மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் சிந்துவெளி (திராவிட) நாகரிக பிரகடன நூற்றாண்டு விழாவில், பேராசிரியர் அ.கருணானந்தன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
ஒரு கூட்டுத் தயாரிப்பாளர்கள்!
இந்திய வரலாற்றைக் கட்டமைத்தவர்கள் ஒரு கூட்டுத் தயாரிப்பாளர்கள். கூட்டுத் தயாரிப்பு என்றால், நீங்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் – காலனி ஆதிக்கம் ஏற்படுகின்றபொழுது இந்தியாவில் மொகலாய பேரரசு இருந்தது. அதன் பெயரால் இங்கே நவாபும் இருந்தார். பல இடங்களில் அவரை ஏற்றுக்கொண்ட துணை அரசர்கள் இருந்தார்கள்.
ஒருங்கமைக்கப்பட்ட அரசு இருந்த சீனாவில், அதனை ஒரு முழு காலனியாக அவர்களால் மாற்ற முடியவில்லை. ஆங்காங்கே சிறு சிறு இடங்களில் தங்குவதற்கு அனுமதி பெற்று சில பிரச்சினைகளை உருவாக்கினார்கள்.
ஜப்பானில் அவர்களுடைய தாக்கம் இருந்ததே தவிர, ஆதிக்கம் வரவில்லை.
உலகில் வேறு எந்த பெரிய நாட்டிலும் காலனி ஆதிக்கம் முழுமையாக ஏற்படுத்த முடியவில்லை!
உலகில் வேறு எந்த பெரிய நாட்டிலும் காலனி ஆதிக்கம் முழுமையாக ஏற்படுத்த முடியவில்லை. இந்தியாவில் மட்டும் ஏன் ஏற்படுத்த முடிந்தது என்றால், அது ஒரு கூட்டு முயற்சி.
இங்கே இருந்த மொகலாய அரசின், அவருடன் இணைந்துகொண்டே, திவான்களாகவும், மற்ற வர்களாகவும் இருந்துகொண்டே மானியங்களைப் பெற்றுக் கொண்டே இருந்தவர்கள்; அதைவிட அதிக வசதிக்காக வந்தவர்களுக்குப் பாய் விரித்தார்கள்.
ஏசியாட்டிக் சொசைட்டி
அவர்கள் இணக்கமாக சென்றார்கள். தங்களை மட்டுமே இந்த நாட்டின் குடிகள் என்று சொன்னார்கள்; அறிவாளிகள் என்று சொன்னார்கள். நாகரிகத்தைத் தந்தவர்கள் என்று சொன்னார்கள். வந்தவர்களுக்கு இனித்தது. ஏனென்றால், இங்கே அவர்களுக்கு உதவி செய்ய ஏற்கெனவே ஒரு கும்பல் தயாராக இருந்தது. அந்தக் கூட்டு முயற்சி; அதன் விளைவாக உருவானதுதான் ஏசியாட்டிக் சொசைட்டி.
ஒரு இணக்கம் தேவைப்பட்டது. புதிதாக ஆள வந்தவனுக்கும், எந்த ஆட்சியிலும் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கும் ஓர் இணக்கம் தேவைப்பட்டது. அந்த இணக்கத்திற்கு வசதியாக, ஏசியாட்டிக் சொசைட்டி உருவாக்கப்பட்டது.
அது இருவருக்கும் தேவைப்பட்டது. இங்கே இருக்கின்ற மக்களை ஒடுக்குவதற்கு, இங்கே இருக்கின்ற செல்வாக்குப் பிரிவினரின் உதவி தேவைப்பட்டது.
வெகுமக்களை ஏய்த்துப் பிழைத்துச்
சுரண்டிக் கொழித்து வந்தவர்கள்
அவர்கள், பல காலமாக இங்கே இருக்கின்ற வெகு மக்களை ஏய்த்துப் பிழைத்துச் சுரண்டிக் கொழித்து வந்தவர்கள். அவர்கள் வாய்மொழியை அப்படியே ஏற்பது இவர்களுக்கும் வசதியாக இருந்தது.
ஆகவேதான், இந்தியாவை ‘வேத நாடு’ என்று அழைத்தார்கள்.
ஈ.எம்.எஸ். எழுதிய நூலுக்குக்கூட, ‘‘லேண்ட் ஆஃப் வேதாஸ்” என்று பெயரிட்டார். ‘‘வேதங்களின் நாடு” – ‘‘வேதமுதற்றே உலகு” என்று இப்பொழுது சொல்லு கின்றார்கள்.
அன்றைக்கு ‘‘இந்தியா மட்டும்தான் வேதமுதற்றே” என்றால், இன்றைக்கு உலகத்தில் வேதம்தான் முத லானது என்று சொல்லுகின்றார்கள்.
ஆண்மை மிகுந்த சமஸ்கிருதம் என்று சொல்லுகின்றார்கள்
அதையும்மீறி, உலக மொழிகள் அனைத்திற்கும் சமஸ்கிருதமே தாயும், தகப்பனாக இருப்பது என்று சொல்லுகின்றார்கள். ஆண்மை மிகுந்த சமஸ்கிருதம் என்று சொல்லுகின்றார்கள்.
ஆண்கள் பிரசவிப்பது சமஸ்கிருதப் பண்பாட்டில் மிக சகஜம். அப்படி வந்த ஒரு கூட்டம்.
இங்கு ஒரு வரலாறு உருவாக்கப்படுகின்றபொழுது, ஆதிக்கங்கள் தங்களுக்குள் சமரசமாக ஒரு வரலாற்றை உருவாக்கினார்கள் – இருவருக்கும் வசதியாக.
எந்த மக்களாலும் பேசப்படாத சமஸ்கிருதத்தைத் தூக்கிப் பிடித்து, அதையே இந்தியாவின் பண்பாட்டு மூலம் என்றார்கள்.
ஆனால், ஓரிரு புல்லுருவிகள் அவர்கள் பக்கம் இருந்தார்கள். ஜேம்ஸ் பிரின்சப் போன்றவர் இருந்தார். அவர், சமஸ்கிருதத்தைவிட மூத்த மொழியான பிராகி ருதத்தின் எழுத்துகளைப் படிப்பதற்கு வகை செய்தார்.
அலெக்சாண்டர் கன்னிகாம் அவர்கள், இந்தியாவில் ஒரு பவுத்த ஆதிக்கம் இருந்தது என்பதை உறுதி செய்தார். அதனால் அவர் ஒரு சதிகாரராகக் காணப்படுகின்றனர்.
வேறு மொழிக் குடும்பம் இருந்ததாகச் சொன்ன காரணத்தினால்…
சமஸ்கிருத குடும்பத்தைத் தவிர, வேறு மொழிக் குடும்பம் இருந்ததாகச் சொன்ன காரணத்தினாலே, எல்லீஸ் அவர்களும் கால்டுவெல் அவர்களும் கிறித்துவ சதிகாரர்களாக நமக்குத் தரப்பட்டார்கள்.
அந்த சதிகாரப் பட்டியலில் இடம்பெறுபவர் மார்ஷல். மார்ஷலை மறந்துவிடக் கூடாது என்று நம்மை எதிர்ப்பது வேத சரசுவதி.
இதற்கான நிர்ப்பந்தத்தை எங்கே உருவாக்கு கிறார்கள்? கட்டாயத்தை எங்கே உருவாக்குகிறார்கள் என்றால், பாடப் புத்தகங்களில் இந்த சிந்துவெளி நாகரிகம், வேத நாகரிகத்தின் ஒரு பகுதி. எனவே, இனிமேல் அதன் பெயர் சிந்து சரசுவதி என்று இருக்கும் என்று அறிவிக்கின்றார்கள், அறிவித்துவிட்டார்கள்.
மாணவர்களுக்குத் தரப்படுகின்ற பாடப் புத்த கங்களில் இனி அது சிந்து சரசுவதி.
மார்ஷலை நினைவுகூர வேண்டிய அவசியம் வந்து விட்டது. மார்ஷலை மறந்துவிடக் கூடாது.
‘‘எந்நன்றிக் கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு” (குறள் 109)
நம்மை அறிய வைத்த மார்ஷலை மறந்துவிடக்கூடாது!
நமக்கு உண்மையை உணர வைத்த, நம்மை அறிய வைத்த அந்த மார்ஷலை மறந்துவிடக்கூடாது என்பதற்காகவே, இந்த நாளை இன்றைக்கு நாம் கொண்டாடுகின்றோம்.
பேராசிரியர் ஜெகதீசன் அவர்கள், அடுக்கடுக்காக பல விஷயங்களை உங்கள் முன்னால் மார்ஷலைப்பற்றி வைத்தார்.
வேத நாகரிகத்திற்கு முந்தையது; வேத நாகரிகம் அல்லாதது என்று சொன்னதினால், மார்ஷல் மாபெரும் சதிகாரர் ஆகின்றார்.
வேத நாகரிகம் – சிந்துவெளி நாகரிகம்.
இங்கே நான், மார்ஷலின் அடிப்படையில், மார்ஷலின் கண்டுபிடிப்புகளைப்பற்றி பேசுகின்றபொழுது, சில ஒப்பீடுகளை செய்தாக வேண்டி இருக்கிறது. சிந்துவெளி அகழாய்வுகளை – அதன் முடிவுகளை வேதத்தோடு ஒப்பிடவேண்டும்.
வேறு நாடுகளில் உள்ள நாகரிகங்களோடு ஒப்பிட வேண்டும்!
சிந்துவெளி அகழாய்வுகளை, வேறு நாடுகளில் உள்ள நாகரிகங்களோடு ஒப்பிடவேண்டும். எகிப்து, மெசபடோமியா போன்ற நாகரிகங்களோடு ஒப்பிடவேண்டும்.
சிந்துவெளி நாகரிகத்தில், கீழடி, பொருநை போன்ற பிற நாகரிகங்களோடு ஒப்பிட்டாகவேண்டும்.
சிந்துவெளி நாகரிகத்தை தொல் தமிழ் இலக்கியங்களோடு ஒப்பிட்டாகவேண்டும்.
தொடர்பு தெரியவேண்டும். அதன் விரிவாக்கம் புரிய வேண்டும் என்றால், இந்த ஒப்பீடு தேவைப்படுகிறது.
உலக வரலாற்றில் எகிப்துதான்
முந்தைய நாகரிகம்!
கிரேக்க நகரங்களைப்பற்றி சிறப்பிப்பதற்கான காரணங்களை ஜெகதீசன் சொன்னார். எகிப்தில் நாகரிகம் தொடங்கிவிடக் கூடாது என்பதற்காக; ஆனாலும், உலக வரலாற்றில் எகிப்துதான் முந்தைய நாகரிகம் என்று அறியப்படுகிறது.
கிரேக்க நகரங்கள், அர்பனிசேசன் என்று வருகிறது. ஏதென்ஸ் போன்ற நகரங்கள்பற்றிய குறிப்புகள் வருகின்றது.
சிறந்த நாகரிகம் எது?
சிந்துவெளி நாகரிகம் வேத நாகரிகம் என்று சொல்லுகின்றபோது, சிந்துவெளி நகரங்களை மய்யமாகக் கொண்டு உபரியைத் தருகின்ற வேளாண்மை இருக்கின்ற காரணத்தினால், அது ஒரு மிகச் சிறந்த வேளாண்மை என்று நான் நினைக்கின்றேன்.
உபரியின் காரணமாக பல்தொழில்கள் இருப்பதால், அது சிறந்த நாகரிகம்.
அந்தப் பல் தொழில்களால் வணிகம் என்பது செழித்தது என்பதினால், அது மிகச் சிறந்த நாகரிகம்.
அந்த நாகரிகத்தில் மக்களது வசதிகள் சிறப்பாக இருந்தது என்பதை அந்த நகரங்கள் உறுதிப்படுத்துகின்ற காரணத்தினால் அது சிறந்த நாகரிகம்.
சிந்துவெளி நாகரிகத்திற்கு அயல் நாடுகளின் தொடர்பு இருந்தது என்பதினால், அது சிறந்த நாகரிகம்.
நண்பர்களே, அது நாகரிகம் என்றால், வேத நாகரிகம், நாகரிகமே அல்ல என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
ரிக் வேதத்தில், எந்த நகரமும் ஆரியர்களுக்குக் கிடையாது. ஒரு நகரத்தின் பெயரைக்கூட பார்க்க முடியாது.
ஒரு கட்டடத்தைப்பற்றி அவர்கள் சொல்வது கிடையாது. தர்ம சாலை என்று சொல்லப்படுகின்ற கூரை வேய்ந்த கூடாரங்களைத் தங்களது இருப்பிட மாகக் கொண்டவர்கள், தங்களது நாகரிகம் என்று கூறிக்கொண்டால், கோட்டைக் கொத்தளத்தோடு வாழ்ந்தவர்கள் என்ன? அவர்கள் தங்கள் எதிரிகளைப்பற்றி சொன்னார்கள், மிகத் தெளிவாகச் சொன்னார்கள்.
அந்த எதிரிகள் வாழ்ந்த இடம் என்று இவர்கள் சொல்லுகின்ற பகுதி – சிந்து நாகரிகத்தின் சின்னங்கள் கிடைக்கின்ற பகுதி.
எதிரிகள் என்ன சொன்னார்கள்? புரங்களில் வாழ்பவர்கள் என்று சொன்னார்கள். புரங்கள் என்றால், கோட்டைகள்.
ஆரியத்திற்கு எந்தப் புரமும் கிடையாது, அந்தப்புரத்தைத் தவிர.
இந்தப் புரங்களை ஒழிப்பதற்கு, அதைத் தகர்ப்பதற்கு வழிமுறை தெரியவில்லை. ஆகவே, ‘‘இந்திரனே, உன் இடியாயுதத்தைக் கொண்டுவந்து, வஜ்ஜிராயுதத்தைக் கொண்டு வந்து இந்தப் புரங்களைத் தகர்ப்பாயாக!’’ என்று சொன்னார்கள்.
இந்தியாவில் இரண்டு நகரமயமாக்குதல்!
நமது கட்டடங்களைக் கண்டு மலைத்தவர்கள், பயந்தவர்கள். இந்திய நாகரிகத்தைப்பற்றி எழுதுகின்ற வர்கள், இந்தியாவில், தொன்மை இந்தியாவில் இரண்டு நகரமயமாக்குதல் என்று குறிப்பிடுகின்றனர்.
இரண்டு நாகரிகங்கள்!
முதல் நகர நாகரிகம் என்பது சிந்துவெளி நாகரிகம். அது ஆரியர்களுடையது கிடையாது; வேதத்தினுடையது கிடையாது.
இரண்டாவது நகர நாகரிகம் என்பது புத்தர் காலத்திய மகாஜன பதங்கள் என்று சொல்லப்படுகின்ற காலத்தில் வருகின்ற கோசல மகதம் போன்ற அந்த நகர நாகரிகம்.
இந்த இரண்டாம் கட்ட நகர நாகரிகம், திராவிடர் உதவியைப் பெற்று, தொழில்நுட்பத்தைப் பெற்று உருவாக்கப்பட்ட கலப்பு நகரங்கள்.
மகதத்தை ஏன் வெறுத்தார்கள்?
ஏன் வெறுத்தார்கள் என்றால், அங்கே இருந்த ராக்கிய சத்திரியர்கள்; ஆரியர் அல்லாத சத்திரியர்கள்.
இங்கே இருந்தவர்களை, இவர்கள் சத்திரியர்களாக அறிவித்துக்கொண்டு, அவர்களை அண்டிப் பிழைக்க நினைத்தவர்கள்.
அதனால்தான், இந்திர பிரதேசத்தை அமைப்பதற்கு, பாண்டவர்கள் கிருஷ்ணனை நாடிய பொழுது, மாயன் அல்லது மயன் என்று சொல்லப்படுகிற ஒரு கருப்பரை அவர் அனுப்பியதாக புராணம் சொல்லுகிறது.
நகரத்தைத் திட்டமிடுவதற்கும், கட்டங்களைக் கட்டுவதற்கும் கருப்பர்களுக்குத்தான் தெரிந்திருக்கிறது.
அது இரண்டாம் கட்ட ஒன்று.
(தொடரும்)