பெரும்பணக்காரப் பார்ப்பனக் குடும்பத்தைச் சேர்ந்த நபர் ஏழை பழங்குடி பிரிவு சான்றிதழைக் கொடுத்து யு.பி.எஸ்.இ. தேர்வில் தேர்ச்சி பெற்றார். தற்போது இந்திய பொதுத்துறை நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலும் உள்ளார் என்று சொன்னால் ஆச்சரியம் தான் – ஆனால் உண்மை!
ஆகாஸ் சர்மா பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர். ஆனால், பழங்குடியினருக்கான சான்றிதழ் கொடுத்து யு.பி.எஸ்.இ. தேர்வெழுதி தேசிய அளவில் 524 ஆம் இடத்தைப் பிடித்து, இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான தொழில்துறை நிதி பகிர்மான பிரிவான ‘பாரத் பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேசனில்’ தலைமைப் பதவியில் உள்ளார்.
இவரது பெற்றோர் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சிர்குட் என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள். இவரது தந்தை முனைவர் பி.பி. சர்மா கோவிந்தபூர் ஆர்.எஸ். மோர் கல்லூரியில் பொருளாதாரப் பிரிவு பேராசிரியராக – துறைத் தலைவராக உள்ளார். இவரது தாயார் சத்தீஸ்கர் அரசு கலை – அறிவியல் கல்லூரி துரும்குண்டா-வில் பேராசிரியராக உள்ளார்.
ஆனால், இந்த ஆகாஸ் சர்மா பீகார் மாநில முகவரியில் பழங்குடியினப் பிரிவுக்கான சான்றிதழ் பெற்று யு.பி.எஸ்.இ. தேர்ச்சி பெற்று, பயிற்சி முடித்து தற்போது பணியில் உள்ளார்.
பார்ப்பனராக இருக்கும் இவர் போலிச் சான்றிதழ் கொடுத்து அய்.எஃப்.எஸ். தேர்ச்சி பெற்றதை 21.09.2021 அன்று ‘தைனிக் ஜாகரன்’ இந்தி பதிப்பான ராய்ப்பூர் பதிப்பில், ‘நமது மாநிலத்தைச் சேர்ந்த நபர் அய்.எஃப்.எஸ். ஆகிவிட்டார்’ என்று பெருமைபட தலைப்புச் செய்தியாக எழுதி உள்ளது.
இவரோடு படித்த கேரளாவைச் சேர்ந்த முகேஷ் மோகன் என்பவர் ஆகாஸ் சர்மாவின் பெற்றோர் முதல் ஊர்வரை அனைத்து விவரங்களையும் தோண்டி எடுத்து, சமூகவலைதளத்தில் வெளியிட்டு, ‘‘ஒரு பழங்குடியின மாணவரின் எதிர்காலத்தோடு விளையாடி இருக்கிறீர்கள்.
நீங்களாக விளக்கம் கொடுத்து பதவி விலகுங்கள் – இல்லையென்றால் உங்கள் மீது புகார் அளிக்கப்படும்’’ என்று ஆகாஸ் சர்மாவிற்கு கடிதம் எழுதி உள்ளார்.
தகுதி – திறமை குறித்துப் பேசும் பார்ப்பனர்களின் யோக்கியதை எந்தத் தரத்தில் உள்ளது என்பதற்கு இது ஒன்று போதுமே!
‘நீட்’ தேர்வில் வட மாநிலங்களில் எப்படி எப்படி எல்லாம் தில்லுமுல்லுகள் அரங்கேறின என்பது உலகமே அறிந்த செய்தியாகும்.
மருத்துவக் கவுன்சிலுக்குத் தேர்வு நடத்தும் அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் அறுதியிட்டுச் சொன்னதற்குப் பிறகும், பிஜேபி ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்த பிறகு, மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு, நீட் கொண்டு வந்த சூழ்ச்சி சாதாரணமானதா?
உயர் ஜாதி பார்ப்பனர் ஒருவர் பழங்குடி ஜாதிச் சான்றிதழ் பெற்று அய்.எஃப்.எஸ். தகுதி பெற்று, பொதுத் துறை நிறுவனம் ஒன்றில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். இதன்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? கிணற்றுக்குள் கல் போட்டது மாதிரி அப்படியே அமுக்கி விடுவார்கள்! அதிகார வர்க்கம் எல்லாம் அவாள் ஆயிற்றே!
தகுதி – திறமை என்பது இத்தகைய மோசடி தானா?