தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பா?
புறக்கணிப்போம்! போராடுவோம்!!
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி கண்டன அறிக்கை
தமிழ்நாட்டின் மாநிலப் பாடலை அவமதிக்கும் ஆளுநரின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தும், தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பா? புறக்கணிப்போம்! போராடுவோம்! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு:
ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தி, சமஸ்கிருதத் திணிப்பு முயற்சிகள் அரசமைப்புச் சட்டத்தையும், மாநில உரிமையையும், மொழி உரிமையையும் மதிக்காமல் தொடர்ந்து மோசமான திசையில் சென்று கொண்டிருக்கின்றன.
‘பொதிகை’ தொலைக்காட்சியின் பெயரை
‘டிடி தமிழ்’ என்று மாற்றினர்!
சென்னையில் இயங்கி வந்த ‘பொதிகை’ தொலைக்காட்சியின் பெயரை ‘டிடி தமிழ்’ என்று மாற்றி அதற்கு காவி வண்ணத்தையும் பூசி தமிழை அழித்தார்கள்.
இன்றைக்கு ஹிந்தி விழாவை சென்னை தொலைக்காட்சி நிறுவன அலுவலகத்தில் கொண்டாடி இருக்கிறார்கள். கடும் எதிர்ப்புகள் அதற்கு எழுந்த சூழலிலும், தமிழ்நாட்டின் ஆளுநராக பா.ஜ.க. அர சால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி அந்நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்.
தமிழ்நாட்டுக்கு மட்டும் விலக்கு உண்டு
தமிழ்நாட்டிலும், ஹிந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியைத் திணிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சியான ‘‘ஹிந்தி விழா’’வின் நோக்கமே கண்டனத்திற்கு உரியதாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் ஏற்கப்பட்டுள்ள 22 மொழிகளில் தேசிய மொழி என்று எதுவும் குறிக்கப்படவில்லை. அலுவல் மொழி என்று ஹிந்தியும், ஆங்கிலமும் தனி சட்டத்தின் (1963) வாயிலாக குறிப்பிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட The Official Languages Rules, 1976இன் படி ஹிந்தி அலுவல் மொழி என்பதில் தமிழ்நாட்டுக்கு மட்டும் விலக்கு உண்டு.
திராவிட ஒவ்வாமை ஆளுநருக்கு ஏற்பட்டிருக்கிறது!
இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் ‘‘தெக்கணமும் அதிற் சிறந்த திராவிடநல் திருநாடும்’’ என்ற வரிகள் நீக்கப்பட்டு பாடப்பட்டுள்ளது கடுமையான கண்டனத்திற்குரியது மட்டுமல்ல, சட்டப்படியாக உட னடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதும் ஆகும்.
‘‘திராவிடம் என்று சொல்லை நீக்கி தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் அளவிற்கு திராவிட ஒவ்வாமை ஆளுநருக்கு ஏற்பட்டிருக்கிறது’’ என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் மிகச் சரியாகக் குறிப்பிட்டுக் கண்டித்திருக்கிறார்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் என்றாலும் திராவிடம் என்றாலும் அவர்களுக்கு எட்டிக் காயாக கசக்கிறது. இதற்கு முன்பே சென்னையில் மேனாள் ஆளுநர் கலந்து கொண்ட ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுத்து காஞ்சி சங்கராச்சாரியார் அடாவடி செய்தார். மற்றொருமுறை ஒன்றிய பா.ஜ.க. அரசின் அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து முற்றிலும் புறக்கணிப்பட்டது.
தமிழ்நாட்டு அரசின் சட்டத்தை மீறும் வகையில்
ஆளுநர் செயல்பட்டிருக்கிறார்
இப்போது அது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமல்ல, 2021 டிசம்பர் 17 அன்று வெளியிடப்பட்ட அரசாணை யின்படி தமிழ்நாட்டின் மாநிலப் பாடலும் ஆகும். தமிழ்நாட்டின் மாநிலப் பாடலை அவமதிக்கும் வகையில் தமிழ்நாட்டு அரசின் சட்டத்தை மீறும் வகையில் ஆளுநர் செயல்பட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பவர், தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதும் அவமதிப்பதும் எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
‘தூர்தர்ஷன்’ தொலைக்காட்சியைப் புறக்கணிக்குமாறு தமிழர்களைக் கேட்டுக் கொள்கிறோம்!
ஹிந்தியைத் திணிக்கும் ஆர்.எஸ்.எஸ்.சின் ஊதுகுழலாகச் செயல்படும் ‘தூர்தர்ஷன்’ தொலைக்காட்சி யைப் புறக்கணிக்குமாறு தமிழர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
ஒன்றிய அரசின் ஹிந்தி திணிப்பையும், தமிழ்நாட்டின் மாநில பாடலை அவமதிக்கும் ஆளுநரின் செயலையும் கண்டித்து, தமிழ் உணர்வாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், திராவிட இயக்கத்தவர், அனைத்துக் கட்சியினர் அனைவரையும் ஒருங்கிணைத்து உரிய வகையில் நமது எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
18.10.2024