தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு
முக்கியப் பங்களிப்புச் செய்த பெரியார்
தந்தை பெரியார் பிறரது பங்களிப்புகளையும் அவர்களிடமிருந்து அறிந்துகொண்டதையும் மிகுந்த அடக்க உணர்வோடு ஒப்புக்கொண்டவர்: ‘நாம் 10 ஆவது வயதுக்கு மேல் எந்தப் பள்ளிக்கூடத்திலும் படிக்கவில்லை. நமக்குப் புத்தக ஆராய்ச்சி இல்லை. நமக்குள்ள அறிவு என்பதைக் கொண்டு நடுநிலை என்பதிலிருந்து ஆராய்வதன் மூலம் அறிவதும், ஆராய்ச்சிக்காரர்கள் என்பவர்களைச் சந்திக்கும்போது கேட்டு அறிவதும்தானே ஒழிய வேறில்லை என்பதைக் கண்ணியமாய் ஒப்புக்கொள்கிறோம்’ – குடிஅரசு, 25.12.1927. ‘நடுநிலை’ என்று இங்கு பெரியார் கூறுவது objective என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு உரிய பொருளில்.
தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு முக்கியப் பங்களிப்புச் செய்த தந்தை பெரியார், அந்தச் சீர்திருத்தத்தை ‘குடிஅரசு’ 20.1.1935 இதழிலிருந்து நடைமுறைப்படுத்திய போது, அந்த இதழின் தலையங்கத்தில் எழுதினார்: ‘தமிழ் பாஷை எழுத்துக்கள் விஷயமாய் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண் டும் என்பது அனேகருக்கு வெகுகாலத்துக்கு முன்பி ருந்தே ஏற்பட்டிருந்த அபிப்பிராயமாகும். தோழர் குருசாமி அவர்கள் எழுதியிருந்ததுபோல பெருத்த பண்டிதர் களில்கூடப் பலர் எழுத்துச் சீர்திருத்த விஷயமாய் வெகு காலமாகவே பேசி வந்திருக்கிறார்கள்.’
1935 குடியரசு இதழில் தந்தை பெரியார் எழுத்து என்று குமரன் இதழ் ஆசிரியர் முருகப்பா 1930ல் பயன்படுத்திய மாற்றங்களையும் ஏற்கனவே புழக்கத்தில் இருந்த அய், அவ் ஒலி மாற்றங்களையும் சேர்த்து திருந்திய வரிவடிவத்தைப் புகுத்தித் தொடந்து குடியரசிலும், விடுதலையிலும் பயன்படுத்தினர். (அய், அவ், ணா, றா, னா, ணை, னை, லை, ளை, ணொ, ணோ, னொ, னோ, றொ, றோ)
1941 சனவரி 18, 19 நாட்களில் மதுரையில் நடைபெற்ற “தமிழ் இலக்கிய மாநாட்டில்” எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1978-1979 இல் தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டித் தமிழ்நாடு அரசு, முதற்கட்டமாகப் பெரியார் 1935 முதல் பயன்படுத்தி வந்த வரி வடிவத்தில் அய், அவ் தவிர மற்றவற்றைச் செயற்படுத்தியது.
1983 இல் சிங்கப்பூர் அரசு இச்சீர்திருத்தத்தை ஏற்றது. 1984 தைத் திங்கள் முதல் செயற்படுத்தியது.