சென்னை, அக்.19– தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற சென்னை தொலைக்காட்சி விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டபோது ‘‘திராவிடநல் திருநாடு’’ என்ற வரிகள் நீக்கப்பட்டு பாடப்பட்டது. இச்செயலுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவிக்கையில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி என்று கண்டனம் தெரிவித்ததுடன், உடனடியாக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என தங்கள் கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை வருமாறு :–
காங்கிரஸ் – கு.செல்வப்பெருந்தகை!
காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட் டுத் தலைவர் கு.செல்வப் பெருந்தகை விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு :–
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றது முதற்கொண்டு, தமிழ்நாட்டிற்கு விரோதமாகவும், தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட் டிற்கு எதிராகவும், தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை குலைக்கின்ற வகையில் தொடர்ந்து பேசி வருகிறார். அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்ட மதச்சார்பின்மையே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்று ஆணவத்தோடு கூறியிருக்கிறார். இதன்மூலம், எந்த அரசமைப்புச் சட்டத்தின் மீது பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டாரோ, அதற்கு எதிராகவே ஆளுநர் செயல்பட்டு வருகிறார். இதுகுறித்து கடுமையான கண்டனங்களை அனைத்து அரசியல் கட்சிகள் வெளிப்படுத்தினாலும், தொடர்ந்து திட்டமிட்டு தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிற வகையில் பேசி வருகிறார்.
இந்நிலையில், ஹிந்தி மாத கொண்டாட்டத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சி சென்னை தொலைக்காட்சி அலுவலகத்தில் நடைபெற்ற போது, விழா தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடியவர்கள் திட்டமிட்டு தவிர்க்க வேண்டுமென்ற நோக்கத்தோடு திராவிட நல் திருநாடு என்ற வார்த்தையை விட்டு விட்டு பாடியிருக்கிறார்கள். இப்படி செய்வதன் மூலமாக தமிழ்நாடு ஆளுநரை திருப்திப்படுத்தலாம் என்ற நோக்கத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதை செய்திருப்பதாக தெரிகிறது. இந்த நடவடிக்கை மிகுந்த கண்டனத்திற்குரியது. இத்தகைய போக்கை எவருமே சகித்துக் கொள்ள மாட்டார்கள்.
ஆளுநர் ஆர்.என். ரவி தொடர்ந்து பேசும் போது ‘தமிழ்நாட்டு மக்கள் இந்தியை விரும்பி படிக்கிறார்கள்.
இந்தியை எவரும் எதிர்க்கவில்லை” என்று பேசியதோடு, சமஸ்கிருத மொழிக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார். அரசமைப்புச் சட்டத்தில், உறுப்பு 343 இல் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி மொழி இருப்பதோடு, ஆங்கிலமும் துணை ஆட்சி மொழியாகவும், மாற்று மொழியாகவும் இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை தொடர்ந்து இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிரதமர் ஜவஹர்லால் நேரு 1963 இல் வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையில் ஆட்சி மொழிகள் சட்டம் – 1967 இல் திருத்தம் செய்யப்பட்டு சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஒருமொழி மற்ற மொழியை விட தேசியமானது என்ற பேச்சுக்கே இடமில்லை. அரசமைப்புச் சட்டம் 8–ஆவது அட்டவணையில் கூறப்பட்டுள்ள 14 மொழிகளுமே தேசிய மொழிகளாகும்.
இந்நிலையில், இந்தி மொழியை பரப்புவதற்காக இந்தி பேசாத மக்கள் வாழ்கிற தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட ஒன்றிய அரசு நிகழ்ச்சியில் இந்தி மொழியை மட்டும் பரப்புகிற நிகழ்ச்சி நடத்துவதும், இந்தியை தமிழ்நாட்டு மக்கள் படிக்க வேண்டுமென்று ஆளுநர் பேசுவதும் வன்மையான கண்டனத்திற்குரியது.
மேலும், 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டை இந்தியாவி லிருந்து பிரிக்க முயற்சி நடக்கிறது என்று ஒரு ஆளுநரே பேசுவது தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்துகிற செயலாகும். இத்தகைய பேச்சுகளின் மூலம் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்ட தேசிய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் சீர்குலைக்கிற முயற்சியில் ஆளுநரே ஈடுபடுவது எவராலும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு விரோதமான இத்தகைய பேச்சுகளை தமிழ்நாட்டு ஆளுநர் உடனே நிறுத்த வேண்டும். அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் விடுத்துள்ள கோரிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக நான் வழிமொழிந்து வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கு.செல்வப்பெருந்தகை கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ம.தி.மு.க. – வைகோ
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை வருமாறு:–
2024 அக்டோபர் 18 ஆம் நாள் துரோகம் இழைக்கப்பட்ட நாளாக தமிழ்நாடு ஆளுநர் உருவாக்கி இருக்கிறார். இந்தியை எதிர்த்து இலட்சக்கணக்கானவர்கள் உயிர்த் தியாகமும், இரத்தமும் சிந்தியிருக்கிறார்கள். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் வரை எண்ணற்ற தலைவர்கள். ஆண்டுக் கணக்கில் சிறைச்சாலைகளில் இருந்திருக்கிறார்கள்.
தலைவர்கள் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான தோழர்கள், இளைஞர்கள், இலட்சக்கணக்கான மாணவர்கள் 1965 மொழிப்போரில் செந்தமிழைக் காப்பதற்காகவும், இந்தியை நுழைய விடக்கூடாது என்பதற்காகவும் உறுதி எடுத்துக்கொண்டு போராடினார்கள்.
அரசியல் சட்டத்தின் 17 ஆவது அத்தியாயத்திற்கு நெருப்பு வைக்கச் சொன்ன பேரறிஞர் அண்ணா அவர்கள் காலத்தில் டாக்டர் கலைஞர் உள்பட பலரும் சிறைவாசம் ஏற்றார்கள். அரசியல் சட்டத்தைத் தீ வைத்துக் கொளுத்தியதற்காக சிறையில் பூட்டப்பட்டார்கள்.
அண்ணா அவர்கள் முதலமைச்சரானவுடன், சட்டமன்றத்தில் மசோதா கொண்டுவந்து தமிழ்நாட்டில் தமிழும், ஆங்கிலம் மட்டும்தான். இந்திக்கு இங்கே இடமில்லை என்று அறிவித்து பிரகடனம் செய்தபோது, ஒரு சட்டமன்ற உறுப்பினர்கூட எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை. ஒருமனதாக அந்த மசோதா சட்டமாக நிறைவேறிற்று.
அண்ணா அவர்கள் தான் மறைவதற்கு முன்பு கடைசியாக தமிழ்நாடு பெயர் சூட்டுவிழாவில் பேசும்போது, தமிழ்நாட்டில் தமிழும், ஆங்கிலமும்தான் ஆட்சி மொழிகளாக இருக்கும். இந்தி இருக்காது என்ற சட்டத்தை வருங்காலத்தில் யார் வந்தாலும் மாற்ற முடியாது என்பதை மனம் திறந்து தமிழ் மக்களுக்குத் தெரிவித்தார்.
1965 மொழிப்புரட்சி போராட்டத்தின் போது இந்திய இராணுவத்தை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்தார்கள். எல்லைப் பகுதிகளைக் காக்க வேண்டிய இந்திய இராணுவம், தமிழகத்துக்குள் நுழைந்து மாணவர்களையும், இந்தி எதிர்ப்பாளர்களையும் சுட்டுக் கொன்றது. ஆயிரக்கணக்கானவர்கள் சிறை சென்றார்கள். மொழிப் புரட்சியைப் போன்ற ஒரு போராட்டம் இந்திய வரலாற்றில் வேறெங்கும் நடந்தது இல்லை.
இப்படிப்பட்ட போராட்டங்களை நடத்தியிருக்கக்கூடிய தமிழ்நாட்டில் இன்றைக்கு இந்தியைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக இந்தியின் 50 ஆவது ஆண்டு பொன்விழா என்று தூர்தர்ஷன் அலுவலகத்தில் அகந்தையும், ஆணவமும், தான்தோன்றித்தனமும் கொண்டிருக்கக்கூடிய தமிழ்நாடு ஆளுநர் இரவி பேசியது மட்டுமல்ல, மனோன்மணியம் சுந்தரம்பிள்ளைஇயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு எங்கும் பாடப்பட்டு வருகிறது. அதில் வரும் திராவிட நல் திருநாடு என்ற சொற்களை நீக்கிவிட்டு பாட வைத்திருக்கிறார்.
நான் ஆளுநரைக் குற்றம் சாட்டுகிறேன். அப்படி என்றால், இந்திய தேசிய கீதத்தில் இருக்கக்கூடிய திராவிட உத்கல வங்கா என்பதில் உள்ள திராவிடத்தை எடுக்கச் சொல்வீர்களா? ஒருவேளை அதற்கு இதில் ஒத்திகை பார்க்கின்றீர்களா? நீங்கள் இந்த வார்த்தைகளை அகற்றச் சொன்னதற்கு மன்னிப்பே கிடையாது. இருந்தாலும் நீங்கள் பகிரங்கமாக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
ஒன்றிய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் சொல்வேன், தமிழ்நாட்டை பாழ்படுத்த நினைத்து திராவிட இயக்கத்தை வீழ்த்துவோம் என்று தமிழ்நாட்டில் நெருப்பு உணர்வை விதைத்திருக்கக் கூடிய ஆளுநர் ஆர்.என்.இரவியை நீங்கள் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும். அவர் தமிழ்நாட்டில் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.
கன்னம் கிழிபட நேரும்; வந்த கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம் என்ற புரட்சிக் கவிஞரின் கவிதையைப் பாடிக் கொண்டு தமிழ்நாட்டு வீதிகளில் இலட்சக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும் திரண்டு போராடினார்கள். ஆக, இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது எங்கள் இரத்தத்தோடு, எங்கள் உணர்வோடு கலந்தது. நானும் அரசியல் சட்டத்தை எரித்திருக்கிறேன்; சிறை சென்றிருக்கிறேன். சட்டத்தை எரித்ததற்காக அன்றைக்கு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களை நீக்கினார்கள். அதற்குப் பின்னரும் டாக்டர் கலைஞர் அவர்கள் அரசியல் சட்டத்தைக் கொளுத்துகின்ற போராட்டத்தில் தோழர்களோடு கலந்துகொண்டு அவரும் சிறை சென்றார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சிறைக் கூடத்தில் கம்பிகளுக்குள் இருப்பதைப் போல சிறை உடையைக் கொடுத்து உள்ளே பூட்டி வைத்தார்கள். பிறகு என்ன ஆயிற்று? கலைஞரே மீண்டும் முதலமைச்சரானார்.
தமிழ்நாடு அருமைத் தாய்த் தமிழை நெஞ்சார போற்றி வணங்குகின்ற பூமி. இந்தியை எதிர்த்து தங்கள் ஆவியைத் துறந்த சிவலிங்கம், சின்னச்சாமி, அரங்கநாதன், ஆசிரியர் வீரப்பன், விராலிமலை சண்முகம், கீரனூர் முத்து, சத்தியமங்கலம் முத்து, பீளமேடு தண்டபாணி, மாயவரம் சாரங்கபாணி தங்கள் உயிர்களைக் கொடுத்து தாங்களாகவே மரணத்தைத் தழுவிய தியாக வரலாற்றுக்கு உரிய மண் தமிழ்நாடு.
எனவே, இந்த அநீதியான காரியத்தைச் செய்த ஆளுநருக்கு மன்னிப்பே கிடையாது. அவரை உடனே டில்லிக்கு அழைத்துக்கொள்ளுங்கள். இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைப்பதற்காகத்தான் இந்தக் காரியத்தில் இறங்கியிருக்கிறார் அவர் என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.
இவ்வாறு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் – இரா.முத்தரசன்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு –:–
தமிழ் மொழியை விஷம் எனக் கூறிய ஆளுநர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்
நேற்று (18.10.2024 ) சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி தமிழ் மொழியை ‘விஷம்‘ என்று கூறி இழிவு படுத்தியுள்ளார். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தொன்மை மரபுகளில் நின்று, தனித்துவம் வாய்ந்த பண்புகளை வளர்த்து, சமூகநீதி ஜனநாயகம் பேணுவதில் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டி வரும் தமிழ்நாட்டையும், மக்களையும் ஆளுநர் அவமதித்துள்ளார். ஆர்.என்.ரவி ஆளுநர் பொறுப்பில் வினாடியும் நீடிக்க தகுதியற்றவர்.
அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட வேண்டும் என்பது அரசின் சட்டபூர்வ விதிமுறை சார்ந்த மரபாகும். இதனை ஆளுநர் மதிக்காமல், தமிழ் தாய் வாழ்த்துப் பாடலில் “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்“ என்ற வரிகளை நீக்கி பாட வைத்துள்ளார். அரசியலமைப்பு அதிகாரத்தை மதிக்காமல் கூட்டாட்சி கோட்பாடுகளை நிராகரித்து, இந்தி மொழி வெறி குணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வன்மம் கொண்ட செயலாகும். அதிகார அத்துமீறலை அன்றாட வேலையாக செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் வாய்க் கொழுப்பு பேச்சையும், செயலையும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன், அவர் தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், குடியரசுத் தலைவர் அவரை உடனடியாக ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு இரா.முத்தரசன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
தொல்.திருமாவளவன்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அளித்த பேட்டியில் பொதிகை என்கிற ஒரு அடையாளத்தை நாம் பார்க்க முடிந்தது பொதிகை என்கிற பெயரை இப்போது நீக்கி இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது அதுமட்டுமல்லாமல் தொடர்ந்தது ஒரு வார காலமாக இந்திநாள் கொண்டாட்டம் ஒளிபரப்பப்படுவதாக அறிந்து அதிர்ச்சி அடைகிறோம். தொலைக்காட்சி மூலமாக இந்தித் திணிப்பு முயற்சியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் – கமல்ஹாசன்!
மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை வருமாறு:
திராவிடம் நாடு தழுவியது. தமிழ்த் தாய் வாழ்த்தில் மட்டுமல்ல, தேசிய கீதத்திலும் திராவிடம் இடம் பெற்றிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். அரசியல் செய்வதாக நினைத்து “திராவிட நல்திருநாடு” எனும் வார்த்தைகளை விட்டுவிட்டுப் பாடியது தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும், தமிழ்நாட்டு அரசின் சட்டத்தையும், இந்தியாவின் பெருமையாக விளங்கும் உலகின் தொன்மையான தமிழ்மொழியையும் அவமதிக்கும் செயல்.
நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும்!
இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்து வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழையும், தமிழ்நாட்டையும், திராவிட கருத்தியலையும் எதிர்க்கும் அல்லது இழிவுசெய்யும் பல நிகழ்வுகளை கண்டும் காணாமல் போயிருக்கிறோம். ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்தில் “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்” என்ற உயிர் வாக்கியத்தைத் தமிழ்த்தாய் வாழ்த்தில் இருந்து தவிர்த்ததைக் காதும், கண்ணுமுள்ள தமிழர்கள் கடந்துபோக மாட்டார்கள். இருதயக் கூடு எரிகிறது! எவ்வளவுதான் பொறுமை காப்பது? இந்த செயலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தமிழர்கள் அவர்களை மன்னிக்கவே மாட்டார்கள். “திராவிட”என்றசொல்லை நீக்கிவிட்டு தேசிய கீதத்தைப் பாட முடியுமா? தமிழ்த்தாய் வாழ்த்தில் தவிர்ப்பதற்கு மட்டும் யார் தைரியம் கொடுத்தது? திராவிடம் என்பது நாடல்ல, இந்தியாவின் ஆதி நாகரிகத்தின் குறியீடு. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இதுபோன்ற இழிவுகள் தொடர்ந்தால் மானமுள்ள தமிழர்கள் தெருவில் இறங்குவார்கள். தீமைக்கு தீயிடுவார்கள் மறக்க வேண்டாம். தாய்மொழி காக்கத் தங்கள் உடலுக்கும், உயிருக்குமே தீவைத்துக்கொண்டவர்கள் தமிழர்கள். அந்த நெருப்பின் மிச்சம் இன்னும் இருக்கிறது எங்களிடம்.
இந்தி திணிப்பை நிறுத்துங்கள். திராவிட நல் திருநாடு.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது’எக்ஸ்’ சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் மேதகு ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெருமைக்குரிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் பொழுது அஃதில் வரக்கூடிய
“தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்”
என்ற வரிகள் புறக்கணிக்கப்பட்டது
மாபெரும் தவறாகும்.
இச்செயல் மிகவும் கண்டனத்திற்குரியது.
திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி!
#திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி!
திராவிடம் என்ற சொல் உலகின் தொன்மையான நாகரிகத்தின் குறியீடு!
தமிழ்நாட்டு மக்களின் உணர்வை புண்படுத்தும், திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை எவர் செய்து இருந்தாலும் கைவிட வேண்டும்.
-இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.
ஜி.கே. வாசன்
த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழநாடு ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டது ஏற்புடையதல்ல’ என்று கூறியுள்ளார்.