“இட்லரின் நாசிப்படைகளுக்கு ஒரு மறைமுக உத்தரவு. மாற்றுத்திறனாளிகள் – அது ஜெர்மனியர்கள் ஆனாலும் சுட்டுத் தள்ளிவிடுங்கள் – அவர்கள் தேவையற்றவர்கள் என்பதுதான்.”
நியூரம்பெர்க் தீர்ப்பாயம் (Nuremberg Trials) என்பது ஜெர்மன் குறித்து படிப்பவர்கள் அனைவருக்குமே தெரிந்த ஒன்று. போர் குற்றம் செய்த நாசிக்கள் மீதான விசாரணைக்காக அமைக்கப்பட்ட இந்த நீதிமன்றத்தில் ராணுவத்தின் செவிலியர் பிரிவில் பணியாற்றிய சிலர் கூறிய கொடூரமான தகவல் – மாற்றுத் திறனாளிகள் ஜெர்மனியர்களாக இருந்தாலும் அவர்களைக் கொல்ல வேண்டும் என்பதுதான் எங்களுக்கு விடுக்கப்பட்ட மறைமுக உத்தரவு.
பெர்லின் கிழக்கில் உள்ள தொழில் நகரத்தில் இருந்து முடக்குவாததால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் மட்டுமே உயிர்வாழும் 5 பேர். அதில் 3 பேர் ஜெர்மானியர்கள். ஒருவர் கருப்பினப் பெண். ஒருவர் ஆசியாவைச் சேர்ந்தவர். இதில் கருப்பினப் பெண்ணை உணவு கொடுக்காமல் குறுகிய அறையில் அடைத்து வைத்து அவர் இறந்துவிட்டாரா இல்லையா என்று அவ்வப்போது பார்க்கச் செல்வோம். எங்கள் செருப்பு ஓசை கேட்டதும் அவர் தண்ணீர் கேட்டு அழுவார். இதனால் நாங்கள் செருப்புக்கு மேல் உல்லன் துணியைச் சுற்றி சத்தமில்லாமல் அவர் இறந்துவிட்டாரா என்று பார்க்கச் செல்வோம் என்று கூறினார். அவர் பட்டினியால் தன்னுடைய் சக்கர நாற்காலியில் இருந்தவாறே இறந்துவிட்டார் என்று கூறினர்.
ஆசிய மாற்றுத்திறனாளி ஒருவரை படிக்கட்டில் இருந்து தள்ளிவிட்டு ரத்த வெள்ளத்திலேயே அவரை சிறைச்சாலையில் இழுத்துப் பூட்டிவிட்டனர். அவர் இரண்டு நாள்களுக்குப் பிறகு மரணடைந்தார்.
இரண்டு ஜெர்மனிய மாற்றுத்திறனாளிகளை கழிப்பறைகளிலேயே அடைத்து வைத்தனர். அவர்கள் உடல் நிலை சீர்குலைந்து இறந்துபோனார்கள் என்று கூறியிருந்தார்கள். இறந்து போன 5 மாற்றுத் திறனாளிகளோடு சிறையில் சேர்ந்து இருந்த குற்றவாளிகள் கொடுத்த சாட்சியத்தால் இந்தக்கொடூரம் உலகிற்கு தெரியவந்தது. அதில் குற்றவாளியான ஒரு செவிலியர் தன்னுடைய முதிய வயதில் ஆஸ்திரியாவில் உள்ள காப்பகம் ஒன்றில் இறந்தார்.
மேலே கூறியதை ஒட்டிய கொடூரத்தைத்தான் ஒன்றிய அரசு ஸ்டேன் சாமியார் மற்றும் ஜி.என்.சாயிபாபா மீது நிகழ்த்தி உள்ளது என்று கூறினாலும் மிகையாகாது.
மனித உரிமை செயற்பாட்டாளர் ஜி.என்.சாய்பாபா. இடதுசாரி தோழர், மனித உரிமைகள் ஆர்வலர், பழங்குடி உரிமை போராளி, பேராசிரியர் எனப் பல அரசியல் முகங்கள் கொண்ட சாய்பாபா, தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். உலகம் முழுவதிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு தரப்படவேண்டிய அடிப்படை உரிமைகள் கூட அவருக்கு சிறையில் வழங்கப்படவில்லை
ஜி.என்.சாய்பாபா, ஆந்திரப் பிரதேசத்தில் கோதாவரி நதிக்கரையின் அமலாபுரம் பகுதியில் 1967ஆம் ஆண்டு பிறந்தவர். 5 வயதில் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்ட அவருக்குத் தாயின் அரவணைப்பே எல்லாம். மிகவும் ஏழ்மையான விவசாய கூலிக் குடும்பத்தில் பிறந்த சாய்பாபா தனது இளமை நாட்களை விவரிக்கையில், ” நான் வளர்ந்த அந்த செழுமையான, வளமான எழில் கொஞ்சும் நிலங்களுக்கு அருகில் இருக்கும் கோதாவரி நதியில் ஓடும் நீரில் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் கண்ணீரும் கலந்திருக்கிறது.
எங்கள் ஊரில் படித்த தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே சற்று தலை நிமிர்ந்து நடக்க முடிந்தது. மற்றவர்கள் கொடுமையான ஜாதிய அடக்குமுறையைச் சந்தித்தனர்” என்கிறார். 2003ஆம் ஆண்டு டில்லியிலுள்ள ராம்லால் ஆனந்த் கல்லூரி (டில்லி பல்கலைக்கழகம்) உதவிப் பேராசிரியராக பணியில் சேர்ந்தார் சாய்பாபா. கல்லூரி காலங்களில் மண்டல் ஆணையத்தின் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராட்டங்களை நடத்தியிருந்தவர். டில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய காலத்தில் இடஒதுக்கீடுக் கொள்கையை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டி எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி. மாணவர்களுக்கு ஆதர வாகவும் போராடினார். மனித உரிமைகள் குறித்த அவரது இலட்சிய பணிகளுக்கு மனைவி வசந்தாவும் உதவி னார். இருவரும் இணைந்து இந்தியா முழுவதும் பல கிராமங்களுக்குப் பயணித்து, “தண்டகாரண்யா, பீகார், ஆந் திரப் பிரதேசத்தில் இருக்கும் விவசாய இயக்கங்களைப் போல உங்கள் கிராமத்திலும் இயக்கம் தேவை” என்று வலியுறுத்தினார்கள்.
1997ஆம் ஆண்டு புரட்சிகர ஜனநாயக முன்னணியின் (RDF) துணைச் செயலாளராக இருந்த சாய்பாபா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் பீகாரில் நடந்த அரச அடக்குமுறைக்கு எதிராக ‘அகில இந்திய மக்கள் எதிர்ப்புக் கூட்டமைப்பை’ முன்னின்று நடத்தினார். இந்த பிரச்சாரத்திற்காகப் பல மாநிலங்களில் அய்ம்பதுக்கும் மேற்பட்ட ஒற்றுமை நிகழ்ச்சிகளை நடத்தினார்.
2009ஆம் ஆண்டு ‘ஆபரேஷன் கிரீன் ஹன்ட்’ (Operation Green Hunt) என்று அய்க்கிய முற்போக்குக் கூட்டணி யின் காங்கிரஸ் அரசாங்கம் நடத்திய துணை இராணுவ நடவடிக்கையைக் கண்டித்த சாய்பாபா, “‘Red Corridor’ என்று அழைக்கப்பட்ட (ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத் திற்கு இடையேயான 5 மாநில பகுதிகள்) பகுதிகளில், பழங்குடியின மக்க ளின் குடிசைகளை எரிப்பது, கொலை செய்வது, பாலியல் வன் முறைகளைச் செய்வது எனக் கொடூரமாக நடந்து கொள்கிறார்கள்” என்று துணை இராணுவப் படையின் மீது பகிரங் கமாகக் குற்றம் சாட்டி னார்.
“ஆளும் வர்க்கம் எப்படியாவது மண்ணின் மைந்தர்களின் வளங்களை அடைய நினைக்கிறது. அதற்கான போதுமான ஆதாரங்களை நான் சேகரித்து வைத்துள்ளேன். ‘ஆபரேஷன் கிரீன் ஹன்ட்’ பழங்குடிகளைக் கொல்ல, அவர்களது கனிம வளங்களைச் சுரண்ட, பூர்வ குடிகளைக் காடுகளை விட்டு வெளியேற்றுவதற்காகத் தொடங்கப்பட்டது” என்றார் சாய்பாபா.
இதற்காக இந்தியாவில் இருக்கும் பல அறிவுஜீவிகளின் துணையோடு ‘மக்கள் போருக்கு எதிரான மன்றம்’ என்ற ஓர் அமைப்பினை நிறுவி ஒருங்கிணைத்தார். 2010 முதல் 2013 ஆண்டு வரை பழங்குடிகளுக்கு எதிராக நடந்த பல மனித உரிமை மீறல்களை இந்திய மற்றும் பன்னாட்டு அளவில் மக்கள் பார்வைக்கு எடுத்துச் சென்றார்.
இந்த நிலையில் 2014ஆம் ஆண்டு மே மாதம் சாய்பாபா உள்பட ஆறு நபர்கள், தடை செய்யப்பட்ட அமைப்பான மாவோயிஸ்ட்டுடன் தொடர்பு கொண்டதாக
யூஏபிஏ (UAPA)வில் (சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்) கைது செய்யப்பட்டார்கள்.
அந்தக் கைது நடவடிக்கையில் அவரது சக்கர நாற்காலி உடைக்கப்பட்டது. இடதுகையைப் பிடித்து காவலர்கள் இழுத்துச் செல்ல கழுத்துக்கும் தோள்பட்டைக்கும் இடையே இருக்கும் எலும்புகள் உடைந்தன. சிறையில் எந்த மருத்துவ உதவியும் கொடுக்கப்படாமல் 9 மாதங்கள் கடும் வலியால் அவதியுற்றிருக்கிறார். இதையடுத்து பம்பாய்(மும்பை) உயர் நீதிமன்றம் தானே முன்வந்து சாய்பாபாவின் உடல்நிலையைக் கணக்கில் கொண்டு, 2015ஆம் ஆண்டில் அவருக்குத் தற்காலிக பிணை கொடுத்தது. ஆனால், அது அந்த ஆண்டின் இறுதியிலே ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து 2016ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அவருக்கு மீண்டும் பிணை வழங்கியது, ஆனால் 2017ஆம் ஆண்டில், கட்சிரோலி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அவரை யூஏபிஏ (UAPA) வழக்கின் கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளித்து, வாழ்நாள் சிறைத் தண்டனையை வழங்கியது. நாக்பூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய அழைத்துச் செல்லும் வேளையில் தொடர்ந்து 48 மணிநேரம் சிறுநீர் கழிக்க அனுமதிக்காமல் கொடுமை செய்ததாகக் காவலர்கள் மீது புகார் சொல்லும் சாய்பாபா, ”அவர்கள் என்னை அடிக்க வில்லை. ஆனால், உடல் அளவிலும் மனதளவிலும் என்னைப் பலவீனமாக்கினார்கள்” என்கிறார். மேலும் சிறையில் வாகன வசதி இல்லாததால் சிறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சிரமப்பட்டுக் கொண்டு அழைத்துச் செல்லாமலே விட்டிருக்கிறார்கள். அவரோடு சிறையிலிருக்கும் சிறை வாசிகளின் உதவியாலே நாட்களைக் கடத்தியிருக்கிறார் சாய்பாபா. அங்கிருக்கும் பெரும்பாலோனோர் படிப்பறிவு இல்லாமல் இருக்க அவர்களுக்கு மனு எழுதித் தருவது, உறவினர்களைப் பார்க்க உதவுவது ஆகிய வகைகளில் சிறைவாசிகளுக்கு உதவி செய்திருக்கிறார்.
சிறைவாசத்தில் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டி ருக்கிறது. கொடிய குற்றம் சுமத்தப்பட்டவர்களை அடைக்கக் கூடிய “அண்டா செல்” என்று அழைக்கப் படக்கூடிய தனிமை சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார். மருத்துவச் சிகிச்சைக்காகப் பலமுறை வேண்டுகோள் விடுத்த போதிலும் வலி நிவாரணி மருந்துகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும் தாயின் மறைவுக்குச் செல்வதற்குக் கூட ‘பரோல்’ மறுக்கப்பட்டிருக்கிறது. அந்த நேரத்தில் எழுத்தை வலி நிவாரணியாக மாற்றியதாகக் கூறும் சாய்பாபா, தன்னை காட்டிலும் சமூக அழுத்தத்தால் பசியின் கொடுமையால் தேவையின் காரணமாகக் குற்றம் சாட்டப்பட்ட சக சிறைவாசிகளின் துயரங்களைக் கவிதையாகக் கடிதங்களாக எழுதியிருக்கிறார். அது ‘Why do you fear my way so much? என்ற புத்தகமாக வெளிவந்தது.
தனது குடும்பத்திலிருந்தும் சமூகத்திலிருந்தும் வேரோடு பிடுங்கப்பட்டதற்கான அவரது தனிப்பட்ட துயரம், சுரங்க நிறுவனங்களுக்காக தங்கள் நிலத்திலிருந்து வேரோடு பிடுங்கப்பட்ட விவசாயிகள் மற்றும் தொல்குடி மக்களின் துயரமாகவும் மாறியிருக்கிறது.
கறுப்பின இலக்கியத்தில் முக்கிய எழுத்தாளரான நுகி வா திங்கோ (கென்யா எழுத்தாளர்) சாய்பாபாவின் எழுத்துக்களைப் பாராட்டி எழுதியுள்ளார். நிறவெறியால் தங்கள் வளங்களைச் சுரண்டிய வெள்ளையர்களின் ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய கறுப்பின மக்களின் இலக்கியத்தோடு சாய்பாபாவின் எழுத்துக்களை பொருத்திப் பார்ப்பதாக தனது கட்டுரையில் எழுதினார்.
சிறைத்தண்டனைக்கு மத்தியில் தொடர்ந்து நடைபெற்ற சட்டப் போராட்டத்தின் வழியாக ‘குற்றத்துக்கு போதிய ஆதாரம் இல்லை’ எனப் பம்பாய் உயர் நீதிமன்றம் அக்டோபர் 14, 2022 அன்று சாய்பாபாவை விடுதலை செய்தது. ஆனால், சனிக்கிழமைகளில் மிக அரிதாகக் கூடும் உச்ச நீதிமன்ற அமர்வை மிக அவசரமாக கூட்டி விடுதலைக்குத் தடை உத்தரவு பெறப்பட்டது. கொடூர குற்றவாளிக்குக் கூட இப்படி ஒரு அவசர கூடுகை நடைபெறாது என்று மனித உரிமை ஆர்வலர்கள் அதற்கு எதிராகக் கண்டனம் தெரிவித்தனர்.
இரண்டு ஆண்டுகள் கழித்துத் தாமதிக்கப்பட்ட நீதியாக ‘சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள் நம்பகமானவை அல்ல’ என்று இறுதியாக மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு பிறகு சாய்பாபா நாக்பூர் மத்தியச் சிறையிலிருந்து மார்ச் 7, 2024 அன்று நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். விடுதலைக்குப் பின்னர் ஒரு பேட்டியில்,
நான் இழந்த இத்தனை ஆண்டுகளுக்கு இந்த நீதித்துறையும், உயர்ந்த வழக்குரைஞர்களும் என்ன பதில் சொல்வார்கள் என்பது கேள்விக்குறியே! நீதித்துறை நியாயமான நீதிக்கு வழி செய்ய வேண்டும். எனது தண்டனைக்கு முழு நீதி வழங்கப்பட வேண்டும். என்று பேசியவர், தனது விடுதலைக்குப் பிறகு சிவில் உரிமைக்கு ஆதரவாகக் கொடூரமான சட்டங்களான TADA, POTA, UAPA, AFSPA போன்றவற்றுக்கு எதிராகக் குரல் எழுப்பினார்.
மேலும் “இந்த தண்டனை சட்டங்கள் காங்கிரஸ், பாஜக என அனைத்து ஆட்சிக் காலத்திலுமே தவறாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. குறிப்பாக UAPA (சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்) இந்திய அரசமைப்புக்கு எதிரானது. அது அதிகார அத்துமீறல் செய்ய வழிவகுக்கிறது. அந்த கொடூர சட்டங்களுக்கு முன்னால் ஜனநாயகத்துக்கு இடமில்லை” என்றார்.
10 ஆண்டு சிறைக்குப் பின்னர் அய்தராபாத்தில் தனது மனைவி வசந்தா, மகள் மஞ்சீராவுடன் வசித்து வந்த சாய்பாபா, தீவிர இதயகோளாறு, பித்தப்பை அழற்சி, கணைய அழற்சி, ஸ்பைனல் ஸ்கோலியோசிஸ், சுற்றுப்பட்டைத் தசைகளின் கொழுப்புச் சிதைவு ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
“நாக்பூரின் அந்தா (இருட்டு) சிறையிலிருந்து வந்த எவரும் மனச் சிதைவு அடையாமல் இருக்கமுடியாது. சிறை தந்த வலியும் வேதனையும் என் வாழ்நாள் முழுவதும் தொடரும். அது தந்த வியாதிகளுடனே நான் வாழ வேண்டியிருக்கும். என் ஆரோக்கியத்தை எனக்கு யார் திருப்பித் தருவார்கள்?” என்ற முக்கியமான கேள்வியை முன்வைத்திருந்தார். இதையடுத்து பித்தப்பை கற்களை நீக்கும் சிகிச்சைக்காக அய்தரா பாத்திலுள்ள நிஜாம்ஸ் மருத்துவ அறிவியல் நிறு வனத்தில் (NIMS) அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனளிக்காத நிலையில் கடந்த சனிக்கிழமை 12.10.2024 அன்று காலமானார்.
அவரது உடல் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காகத் கொடையாகக் கொடுக்கப்பட்டது ஜி.என்.சாய்பாபாவின் உடல் மறைந்தும் மாண வர்களின் கல்விக்குப் பயன்படும் – அவரது வாழ்வு ‘என்னை எப்படிச் சாகடிப்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லை’ என்ற அவரது கவிதை வரிகளை ஞாபகப்படுத்துகிறது.
குவளையில் வைக்கப்பட்ட தண்ணீரைக் கூட கையால் எடுத்து குடிக்க முடியாத முதியவர் பயங்கரவாதியா?
– ஸ்டேன் சுவாமி மரணம் இந்திய மனிதஉரிமை வரலாற்றில் பெரும் கறை.
திருச்சியில் 26.4.1937இல் பிறந்த ஸ்டேன் சுவாமி பழங் குடியினரின் உரிமைகளுக்காகப் போராடியவர் – 2020 அக்டோபர் 8 அன்று ஸ்டேன் சுவாமி என்.அய்.ஏ.வால் கைது செய்யப்பட்டார். மேலும் 1967 சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் பிணை மறுக்கப்படும். தொட்ர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதும் ஒரு நாள்கூட என்.அய்.ஏ. அதிகாரிகள் அவரை விசாரணைக்கு அழைக்கவில்லை.
பர்கின்ஸன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்டேன் சுவாமிக்கு பிணை வழங்கச் சிறப்பு நீதிமன்றம் முதலில் மறுத்தது. சிறை மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமானது. அதன் பிறகு மும்பை உயர் நீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து அவருக்கு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி ஸ்டேன் சுவாமி 5.7.2021 அன்று உயிரிழந்தார். 84 வயதான ஸ்டேன் சுவாமி நடத்தப்பட்ட விதம் குறித்து பலரும் மிகக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்டேன் சுவாமியின் மரணம் என்பது இந்திய மனித உரிமை வரலாற்றில் ஒரு கறையாக நீடிக்கும் என அய்.நா. நல்லிணக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அய்.நா. நல்லிணக்க அதிகாரி மேரி லாலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “போதிய ஆதாரமின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனித உரிமை ஆர்வலர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதையே உலக நாடுகளுக்கு ஸ்டேன் சுவாமியின் மரணம் உணர்த்துகிறது. மனித உரிமைகளைக் காக்கப் போராடிய ஒருவரைப் பயங்கரவாதிகள் போல் சித்தரித்தது, மன்னிக்கவே முடியாதது.
ஸ்டேன் சுவாமியின் மரணம் இந்திய மனித உரிமை வரலாற்றில் ஒரு கறையாக நீடிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவரை போன்ற சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவதற்கும், பிணை மறுக்கப்படுவதற்கும் எவ்வித முறையான காரணமும் இல்லை. ஸ்டேன் சுவாமி புனையப்பட்ட பயங்கரவாத குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு எவ்வித ஆதாரமும் இல்லாமல் பலமுறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த ஸ்டேன் சுவாமியின் உடல்நிலை மோசமடைந்ததால் அவரை பிணையில் விடுதலை செய்ய வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்தனர். இருந்தாலும் அவருக்கு பிணை மறுக்கப்பட்டது. கடந்த 2020 நவம்பர் மாதம் அய்.நா. வல்லுநர்கள் – ஸ்டேன் சுவாமி சிறையில் அடைக்கப்பட்டது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தினோம்.
மனித உரிமைகளைப் பாதுகாக்கத் தொடர்ந்து ஈடுபட்டு வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். நான் இப்போது மீண்டும் கேள்வியாகவே கேட்கிறேன் பல்வேறு கோரிக்கைகளுக்குப் பின்னரும் அவர் ஏன் விடுதலை செய்யப்படவில்லை? அவர் ஏன் காவலில் உயிரிழக்க வேண்டும்?” என்று
அய்.நா. நல்லிணக்க அதிகாரி தனது அறிக்கையில் காட்டமான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். முன்னதாக ஸ்டேன் சுவாமி உயிரிழப்பிற்குப் பல பன்னாட்டு மனித உரிமைகள் கண்டனங்களைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.