உங்களைக் குறித்து அறிமுகம்
செய்து கொள்ளுங்கள்?
என் பெயர் தேன்மொழி. 1959 இல் பிறந்தேன். வயது 65 ஆகிறது. சொந்த ஊர் குழிபிறை. பெற்றோர் பெயர் பிரம்மையா – சிகப்பி. 7ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன். தற்போது புதுக்கோட்டையில் வசித்து வருகிறேன்.
பெரியார் கொள்கைகள்
எப்போது அறிமுகமானது?
1976இல் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. இணையர் பெயர் சுப்பையா. அவர் மின் வாரியத்தில் வேலை பார்த்தவர். புதுக்கோட்டை மாவட்டம், அண்டக்குளம் எனும் கிராமத்தில் பணியாற்றிய போது, அங்கிருந்த பஞ்சாயத்து அலுவலகத்திற்கு ‘விடுதலை’ நாளிதழ் வருமாம். அதைத் தன்னிச்சையாகப் படித்து, கொள்கையை அறிந்து கொண்டவர். அவரின் மூலமாகத் திருமணத்திற்குப் பிறகு நானும் தெரிந்து கொண்டேன்.
“பெரியார் நூற்றாண்டு விழா” புதுக்கோட்டையில் நடந்தபோது அதில் கலந்து கொண்டேன். எனது முதல் கூட்ட அனுபவம் அதுதான்! இரண்டாவது நிகழ்ச்சியாக, இரண்டு நாட்கள் திண்டுக்கலில் நடைபெற்ற மாநாட்டிற்குச் சென்றேன். அந்த மாநாட்டில் பலரும் தங்கள் தாலியை அகற்றிக் கொண்டனர். ஆனால், எனக்கு அப்போது துணிவில்லை. பின்னாளில் வீட்டில் வைத்துத் தாலியை அகற்றிக் கொண்டேன். அந்த மாநாட்டில் கைம்பெண் தோழியர்களுக்குப் பூ வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பழைய தோழர்கள் நினைவில் இருக்கிறார்களா?
இப்போதும்கூட பலரும் இருக்கிறார்கள். குறிப்பாகப் பூலாம்பட்டி வீரப்பன் – வசந்தா, ராங்கியம் இராமதிராசன்-சரஸ்வதி, பொன்னமராவதி தங்கையா-சுயமதி, புதுக்கோட்டை பாலு-சுசீலா ஆகிய அய்ந்து குடும்பங்களும் நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாகவே செல்வோம். புதுக்கோட்டையில் அப்போது மாதம் ஒரு கூட்டம், ஒவ்வொரு தோழர்களின் வீட்டிலும் நடைபெறும். சுமார் 85 கூட்டங்கள், 7 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றது. இது புதுக்கோட்டை கழக வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.
இப்போது புதிய தோழர்கள் நிறைய வந்துள்ளார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை எங்கள் பிள்ளைகளைச் சிறந்த கொள்கைவாதிகளாக உருவாக்கி இருக்கிறோம்.
பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்?
எங்களுக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் அன்பரசன், இளையவர் அறிவரசன். பேரன்கள் எழிலரசன், புகழரசன், இசையரசன். அனைத்துமே இனவுணர்வு, தமிழ்ப் பெயர்கள். அன்பரசன் மின் வாரியத்தில் பணி செய்கிறார். அவரின் இணையர் கிருஷ்ணவேணி. அஷ்டமி-நவமி நேரத்தில் தாலியற்ற திருமணமாக நடந்தது. இளையவர் பெயர் அறிவரசன். சுயமாகத் தொழில் செய்கிறார். அவரின் வாழ்விணையர் ரமீலா. கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர். பூர்வீகம் ஆந்திரா. இவர்களுக்கும் அஷ்டமி-நவமியில் தான் திருமணம் நடைபெற்றது. இரண்டையுமே ஆசிரியர் அவர்கள்தான் செய்து வைத்தார்கள். எங்களின் குடும்பம் நன்றாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்கிறோம்! எந்தக் குறையும் இல்லை!
எனது தந்தையார் கட்டட வேலை செய்பவராக இருந்தார். பாரதிதாசன் கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். மனப்பாடமாகக் கவிதைகளைக் கூறுவார். அவர்தான் எங்கள் பிள்ளைகளின் அஷ்டமி-நவமி திருமணத்தின்போது வரவேற்புரை கூறியவர். எங்கள் பெற்றோர் சிறிய கிராமத்தில் தான் வசித்தார்கள். எனினும் பெரியாரின் விஞ்ஞானக் கருத்துகளுக்கு என்றுமே மறுப்பு சொன்னதில்லை. உறவினர் களில் சிலர் மாற்றுக் கருத்துகளைக் கூறுவர். எனினும் பெரியார் கொள்கையைக் கடுமையாக நடைமுறை செய்து, அதனால் நாங்கள் முன்னேறி இருக்கிறோமே தவிர, எந்த வகையிலும் பின்தங்கிப் போகவில்லை!
அதுமட்டுமின்றி பெரிய நிகழ்ச்சிகள், மாநாடுகள் என்றால் சகோதரிகளின் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் சிலரையும் அழைத்துச் செல்வோம். உணவைக் கட்டிக் கொண்டு, கூட்டமாகப் போவதை வழக்கமாக வைத்திருந்தோம். சிறுவர் களுக்குச் சுற்றுலா செல்வது போலவும், பொழுதுபோக்கு நிகழ்வாகவும், மனமகிழ் பயணமாகவும் அது அமையும். நமக்கும் நிகழ்ச்சியில் கொள்கையை அறிமுகம் செய்யும் வாய்ப்புக் கிடைக்கும். அந்த வகையில் நமது இயக்கத்திற்குக் கிடைத்தவர்களில் ஒருவர்தான் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில அமைப்பாளராக இருக்கக்கூடிய பொன்னமராவதி சரவணன்.
கிராமத்தில் பிறந்து வளர்ந்த நிலையில், நீங்கள் பேசிய “கடவுள் மறுப்புக்கு” என்ன விளைவுகள் ஏற்பட்டது?
நான் கொள்கையை ஏற்றுக் கொண்ட பிறகு அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டேன். தோழர்களைக் குடும்பம், குடும்பமாகச் சந்திப்போம். நூல்கள் படிப்பது ஒருவகை என்றாலும், களத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்விலும் பங்கேற்பது நம்மை மேலும் வலிமை ஆக்கும்; நம்மைக் குறித்துப் பிறர் அறிந்து கொள்ளவும் ஏதுவாக இருக்கும்.
அந்த அடிப்படையில் “தேன்மொழி இப்படித்தான்” என்கிற முடிவிற்கு அவர்களே வந்துவிட்டார்கள். எந்த நிகழ்விலும் சாஸ்திர, சம்பிரதாயத்தில் நான் கலந்து கொள் வதில்லை. அதேநேரம் நாம் செய்யும் உதவிகள், மனிதநேய செயல்பாடுகள், அணுகுமுறைகள் போன்றவை நம்மை நெருக்கமாகவே வைத்திருக்கிறது. அதனால்தான் “கடவுள் இல்லை” என்று சொன்னாலும், தி.க.காரர்கள் சிறப்பானவர்கள் என்கிற பொதுப் பெயர் நமக்கு இருக்கிறது.
உங்களின் இயக்க நடவடிக்கைகளாக
என்ன கூறுவீர்கள்?
பெரியாரின் செயல்பாடுகளை நான் பார்த்ததில்லை. ஆனால், ஆசிரியரின் உழைப்பை நேரில் பார்க்கிறேன். அது கடுமையானது. எதனோடும் ஒப்பிட முடியாதது. அப்பேற்பட்ட தலைவரை நாம் பெற்றுள்ளோம். அப்படியான இயக்கத்திற்கு, இந்தக் கொள்கையை ஏற்ற நாள் முதல், எனது பங்களிப்பை அளித்து வருகிறேன். சிறு வயதிலேயே மூடநம்பிக்கை ஊர்வலத்தில் தீச்சட்டி எடுத்த அனுபவம் இருக்கிறது. எனது மகன் இல்லத்தை துரை.சக்ரவர்த்தி அவர்களை வைத்துத் திறந்தோம்.
புதுக்கோட்டை, அறந்தாங்கி பகுதிகளில் ஆசிரியர் பங்கேற்கும் கூட்டங்களில் நானும் சிறிது பேசி இருக்கிறேன். அதைக் கூட ஆசிரியர் அவர்கள் சிறப்பாகப் பாராட்டினார். மதுரையில் நடைபெற்ற இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் பங்கேற்று, 15 நாட்கள் சிறையில் இருந்தேன். அதற்குச் சான்றிதழும் கொடுத்தார்கள். பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டு, ஒருநாள் கைது என்கிற அனுபவமும் உண்டு.
புதுடில்லியில் அமைந்த பெரியார் மய்யத்திற்கு ரூ. 2 ஆயிரம் நன்கொடை வழங்கினோம். வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கு 2 கிராம் தங்கமும், சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு ரூ.25 ஆயிரமும் எங்களின் பங்களிப்பைச் செய்தோம். புதுடில்லி பம்னொலி (Bomnoli) பகுதி பெரியார் மய்யம் திறப்பு விழாவிற்குச் சிறப்புத் தொடர்வண்டி (DK Special Train) மூலம் இணையரும், நானும் சென்றிருந்தோம். அதில் சுமார் 1200 தோழர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கொள்கையால் நீங்கள் அடைந்த பயன்கள் என்ன?
எங்கள் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எந்த ஒரு செயலிலும் உறுதியோடும், தெளிவோடும் இருக்க முடிகிறது. மூடநம்பிக்கை அற்ற வாழ்க்கை என்பதால் அது தொடர்புடைய நேரம், பொருள், உழைப்பு மிச்சமாகிறது! இதை அனுபவ பூர்வமாக உணர்கிறேன். இயக்கத்தில் புதுக்கோட்டை மாவட்ட மகளிரணி செய லாளர், மண்டல மகளிரணி செயலா ளர் பொறுப்புகளை வகித்து, தற்போது பொதுக்குழு உறுப்பினராக இருக்கிறேன்.
2020ஆம் ஆண்டு, கீழ்வேளூரில் நடைபெற்ற மக ளிரணி மாநாட்டில், ‘அன்னை மணியம்மையார் விருது’ கொடுத்தார்கள். கழகத் துணைத் தலைவர் கவிஞர்
கலி.பூங்குன்றன் அவர்கள் வழங்கினார்கள்.
அதே ஆண்டு புதுக்கோட்டையில் உள்ள ‘உலகத் தமிழ்ப் பாதுகாப்புச் சங்கம்’ சார்பில் சான்றோர்களின் சேவையைப் பாராட்டும் விதமாக அங்கும் “மணியம்மையார் விருது” வழங்கினார்கள்.
நீங்கள் சிறந்த பாடகர் என்று அறிந்தோமே?
வீட்டில் இருக்கும்போது எனது பொழுதுபோக்கே கழகப் பாடல்களைக் கேட்பதுதான். அதுசமயம் “அண்ணே அண்ணே கேளுங்கண்ணே” எனும் தலைப்பில் ஒரு ஒலி நாடா வந்திருந்தது. அதில் மொத்தம் 12 பாடல்கள் இருக்கும். தினம், தினம் அதைக் கேட்டு, அந்தப் பயிற்சியின் மூலமாக மேடையிலும் பாடத் தொடங்கினேன். ஒரு கட்டத்தில் கூட்டம் தொடங்குமுன் பாடும் வாய்ப்பையும் பெற்றேன். புதுக் கோட்டை மாவட்டத்தைக் கடந்து, வெளியூர் நிகழ்ச்சிகளிலும் பாடுவேன்” எனத் தம் அனுபவங்களை, ‘விடுதலை’, ‘ஞாயிறு மலர்’ வாசகர்களுக்காகப் பகிர்ந்து கொண்டார் புதுக்கோட்டை தேன்மொழி அவர்கள்!
இயக்கப் பிரச்சாரத்திற்கு இசை வடிவம் என்பது மிக முக்கியமானது. கிராமபோன் (Gramophone), ஒலிநாடா (Cassette), குறுந்தகடு (CD), குறும்பதிவி (Pen Drive) ஆகிய அத்தனை வடிவத்திலும் நமது இயக்கப் பாடல்கள் வெளிவந்துள்ளன. கேட்பதற்கு இனிமையாகவும், தாளம் போடவைக்கும் தரத்திலும் நம் இசை இருக்கும். குறிப்பாகக் கூட்டத்திற்குள் நுழைந்துவிட்டால், உணர்ச்சிக் குவியல்களை மேலோங்கித் தருவது நம் இனவுணர்வுப் பாடல்கள்!
அந்த வகையில் உலகமெல்லாம் பெரியார் மயம், உரிமைக்களம், வென்றிடும் பெரியாரியம், பிள்ளைகளே பிள்ளைகளே, நியாயம் கேட்கப் போறோம், மடமையை மாய்ப்போம், தமிழா பாடு, சாமியாரு ஜாக்கிரதம்மா, அவர்தாம் பெரியார், அஞ்சி சாவதா வாழ்க்கை, காலம் வெல்லும், திராவிடர் கழகப் பாடல்கள்,
அண்ணே அண்ணே கேளுங்கண்ணே, கருஞ்சட்டை யுத்தம், விடுதலை முழக்கம், தூற்றலைத் தோற்கடித்த வீராங்கனை உள்ளிட்ட இசைப் பேழைகளை நம் இயக்கம் வெளியிட்டுள்ளது. இதில் 150 க்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன.
இந்தப் பாடல்களை மகளிரணி தோழர்கள் பயிற்சி எடுத்து, தமிழ்நாடெங்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். மகளிரணி தோழர்கள் பாடும் போது, அதன் வீச்சுப் பலமடங்கு பெரிதாகும்! இதற்கு அம்மா தேன்மொழி போன்றோர் அதிகம் முனைப்புக் காட்ட வேண்டும்! அவர்களுக்கு நம் வாழ்த்துகள்!