காட்சிப் பொருளாக பெண்கள் என்பது காலம் காலமாக நடந்து கொண்டே இருக்கிறது.இப்பொழுதும் அப்படி ஒரு காட்சிபொருளாக பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது.
ஓவியா காட்சிப் பொருளாகவும் பேசுபொருளாகவும் ஆகி இருக்கிறார். நம் நாட்டை பொறுத்தவரை எப்பொழுதும் ஏதாவது ஒருவர் பேசு பொருளாக.இப்போது நடிகை ஓவியா. அவருடைய நிர்வாண காட்சிப் பதிவு ஒன்றை அவர் சம்மதம் இல்லாமல் இணையத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.
அதை யாரோ வெளியிட்டதாக முகநூலில் தன் பக்கத்தில் ஒருவர் பதிவிடுகிறார். இதுவே அத்துமீறலான அநாகரீகம் எனலாம். அந்தப் பதிவில் சென்று பலரும் கமெண்ட் செய்துவிட்டு அந்த வீடியோவை உள்பெட்டியில் அனுப்பும்படி கேட்பவர்களின் அயோக்கியத்தனத்தை என்னவென்று சொல்வது.
மேலும் அந்த நிர்வாணப்படம் வெளியிட்டது மிகப்பெரிய துரோகச் செயல் என்று பதிவிட்டு யாரிடமாவது இருந்தால் தனக்கு அனுப்பும் படி கேட்கும் கயமைத்தனமான தனிப் பதிவையும் காண முடிகிறது. பெண்களுக்கு நடக்கும் பாலியல் அத்து மீறல்களைப் பார்த்து ஒவ்வொரு முறையும் பொங்கிப் பொங்கி பதிவுகள் போட்டு பெண்கள் மீதான அக்கறையையும் காட்டியவர்களும் இவர்களேதான். மனைவி, குடும்பம், குழந்தைகள் என்று வாழும் சராசரி மனிதர்களேதான்.
உடனடியாக தவறு செய்தவனுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று சொல்பவர்களே. இவர்கள் எவ்வகையான மனிதர்கள்.காமத்துக்கு மட்டுமே பிறந்தவர்களா என்று கேட்பதிலும் தவறில்லை.
பொதுவெளியில் ஒரு பெண்ணின் நிர்வாணத்தை பார்க்க விரும்புகிறேன் என்று கூச்சமின்றி பகிர்ந்து கொண்டு. அப்படிக் கேட்பதிலோ அதைப் பார்க்க விரும்புகிறேன் என்று வெளிப்படையாக சொல்வதிலோ இவர்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை.இதை நம் குடும்பத்தில் உள்ளவர்கள் படிக்க நேர்ந்தால் தன்னுடைய பிம்பம் என்னவாகும் என்ற சிந்தனையும் இல்லை.
ஓவியா என்ற பெண் ஒரு நடிகை.நடிகைக்கு இதெல்லாம் இயல்பு என்பதால்தான் அப்படிக் கேட்கிறோம்,மற்றபடி பெண்களை மதிக்கக் கூடியவர்கள் நாங்கள் என்று கூவுவதையும் நம்மால உணர முடிகிறது. ஓவியாவும் ஒரு பெண். அவரின் வீடியோ அவரின் அனுமதி இன்றி வெளியிடுவது அப்பட்டமான தவறே. ஒருவேளை அவர் கதைக்காகவோ காட்சிக்காகவோ இல்லை பணத்துக்காகவோ அவரே விரும்பி நிர்வாண படங்களில் நடித்து இருந்தால் தாராளமாக அதைச்சென்று பார்த்து தன் வேட்கையை தணித்து கொள்ளலாம் இம்மானுட பிறவிகள்.
அடுத்தவரின் நிர்வாணத்தை அவருடைய அனுமதி இன்றி பதிவிடும் உரிமை யார் தந்தது? அதை வேடிக்கை பார்க்கும் ஈன மனநிலை எப்போது மாறும். ஒருவரின் உடல் மீதான அத்து மீறல் தானே இதுவும்.இப்படிபட்ட வன்கொடுமை செய்பவர்கள் யார்? அனைவரும் நம்மைச் சுற்றி வாழ்பவர்களே.
என்ன ஒரு நடிகைக்கு இவ்வளவு வக்காலத்து என்ற கேள்வியும் வரும். இது போன்ற சிக்கல்களில் அவர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. பள்ளி மாணவிகள் கல்லூரி பெண்கள் பொது வெளியில் இயங்கும் பெண்கள் அத்தனை பேரும் பாதிக்கப்படுகிறார்கள். நவீன டிஜிட்டல் உலகத்தில் அடுத்தவரின் அந்தரங்கத்தை அவருக்கே தெரியாமல் வெளியிடுவது என்பது சாதாரண விசயமாகி விட்டது.
பாதிக்கப்பட்ட பாலியல் ரீதியாக துன்பப்பட்ட பெண்களின் வீடியோக்கள் எங்காவது வெளியானால் அனுதாபம் தெரிவித்து அந்த வீடியோக்களுக்குள் அப்பெண்ணின் நிர்வாணத்தை தேடிக்காண துடிக்கும் கூட்டமும் இருக்கத்தானே செய்கிறது.எத்தனை உயிர்களை இதனால் நாம் இழந்திருக்கிறோம். ஒரு பெண்ணின் மாண்பு என்பது அவளின் உடம்பில் இருப்பதாக தானே இன்றளவும் கட்டமைத்து வருகிறோம்.
அனைத்து மகளிருக்கும் சொல்லிக்கொள்வது என்பது எதிர்பாராத விபத்து போன்றது. நாம் அறியாமல் நம்முடைய காட்சிப் பதிவுகள் வெளியாவது, அதை நினைத்து தயவு செய்து கலங்க வேண்டாம். அருவெருப்பு அடைய வேண்டாம். தன் னுடைய இச்சைக்காகவும் பழிவாங்கும் நோக்கத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். துணிச்சலோடு எதிர்கொள்ளுங்கள். அதை வெளியிட்டவர்களும் பார்த்தவர்களும் வெட்கி தலைகுனிய வேண்டுமே தவிர பெண்கள் இல்லை.
இந்த காட்சிப் பதிவு குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓவியா சொன்ன பதில் தான் இதை எழுதுவதற்கான நோக்கத்தையும் தந்தது. ஒருவன் ஓவியாவிடம் உங்கள் காட்சிப் பதிவு இணையத்தில் வெளியாகி பலரும் பார்த்தனர் என்று கேட்டதற்கு “ஓகே ஓகே என்ஜாய்” என்று பதில் தந்து, “காட்சிப் பதிவு கொஞ்சம் டல்லாக இருக்கு தெளிவாக இல்லை” என்று கேட்கும் போது, “அடுத்தமுறை ப்ரோ” என்றும் பதிலளித்திருக்கிறாரே அந்த துணிச்சல் பேச வைக்கிறது. அந்த பதில் கேள்வி கேட்டவனை மட்டும் இல்லாமல் காட்சிப் பதிவை உள்பெட்டிக்கு அனுப்பச்சொல்லி கேட்ட அத்தனை பேரையும் நிர்வாணமாக தெருவில் நிற்க வைத்து செருப்பால் அடித்தது போல இருக்கிறது. இதுதான் பேசு பொருளாக வேண்டும்.
ஓவியா போல எத்தனை பேர் துணிச்சலாக இதை எதிர் கொள்வார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அவரின் துணிச்சல் பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அவங்க ஒரு நடிகை அவங்க எது வேண்டுமென்றாலும் பேசலாம். நாங்க எல்லாம் சராசரி பெண்கள். எங்கள் குடும்பத்துக்கு என்று ஒரு கவுரவம் இருக்கு என்று போர்க்கொடி தூக்கும் பெண்கள் குடும்பத்தில் தான் இது போன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலைகள் நிகழ்கின்றன.அவர்களுக்கு சொல்வதும் ஒன்றுதான் எந்த கவுரவமும் அவமானமும் பெண்கள் நிர்வாணத்தில் இல்லை என்ற மனநிலைக்கு பெண்கள் வரவேண்டும்.
இதுபோன்ற வீடியோக்களை வெளியிடுபவர்களின் நோக்கம் ஏதோ ஒரு வகையில் அந்தப் பெண்ணைப் பழி வாங்குவதுதான். அவர்கள் மீதான காழ்ப்புணர்ச்சிதான்.பெண்ணை வீழ்த்த, அயோக்கியத்தனமாக ஆண்கள் எடுக்கும் ஆயுதமே இதுபோன்ற காட்சிப் பதிவுகள். இதையும் பெண்கள் உணர வேண்டும்.
இவற்றை ஆண்கள் எல்லோரும் பாதிக்கப்பட்ட பெண் போல தன் குடும்பத்திலும் பெண்கள் இருக்கின்றார்கள் என்று எண்ணி இது போன்ற காட்சிப் பதிவுகளை அலட்சியப்படுத்தினாலே வெளியிட்டவரின் நோக்கத்தை தடுக்க முடியும். ஆனால், காட்சிப் பதிவை புறக் கணிப்பது என்பதான செயலை ஆண்களிடம் எதிர்பார்ப்பது பேராசையான செயல் என்றாலும் எதிர்பார்க்கிறது எங்களைப் போன்றவர்களின் மனது.
அதே போல இப்படி ஒரு வீடியோ வெளியாகிவிட்டால் அந்த பாதிப்பில் இருந்து பெண்கள் வெளிவர உதவி செய்யக்கூடியவர்களாக அந்தக் குடும்பத்து ஆண்கள் இருக்க வேண்டும். இப்படி ஒரு சிக்கல் வந்தால் அதை உங்கள் மகளுக்கான பிரச்சினை என்று அணுக முற்படுங்கள்.தற்கொலைகள் தவிர்க்கப்படும்.
உலகம் நவீனமாக மாறிவிட்டது. நம்மை சுற்றி நமக்கே தெரியாமல் இருக்கும் கேமராக்களின் எண்ணிக்கை அதிகம்.எந்த நேரத்தில் நாம் எப்படி படம் பிடிக்கப்படுவோம் என்பது யாருக்கும் தெரியாது.நம்முடைய ஒருபடம் விதவிதமாக பல்வேறு பரிமாணங்களில் வரும். எப்போது வெளியாகும் என்றும் தெரியாது. அப்படி வெளியானால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் தைரியம் தான் எல்லோருக்கும் தேவை. நம் குழந்தைகளுக்கு மட்டும் இல்லை அத்துணை மகளிருக்கும் புரியச்சொல்லி விளக்குவது நம் எல்லோரின் கடமை.