வட மாநிலங்களில் தசரா பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதில் ராவணன் உருவ பொம்மை எரிப்பு முக்கிய நிகழ்வாக உள்ளது. ராமாயணத்தில் அரக்கர் குலத்தை சேர்ந்த ராவணனை ராமன் போரில் வென்று, கொன்ற தினத்தை வட மாநிலங்களில் தீபாவளியாக கொண்டாடுகின்றனர். தசரா பண்டிகையின் இறுதியிலும் ராவணன், அவனது தம்பி கும்பகர்ணன் உள்ளிட்டோரின் உருவ பொம்மைகளை வட இந்தியர்கள் எரித்து மகிழ்கின்றனர். டில்லியில் சுமார் 60 இடங்களில் ராவணன் உருவ பொம்மை எரிக்கப்படுகிறது.
இந்நிலையில் டில்லி, துவாரகாவில் சிறீராம் லீலா சங்கம் சார்பில் 211 அடி உயரம் கொண்ட ராவணன் உருவ பொம்மை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மிக உயரமான ராவண உருவ பொம்மை என இச்சங்கம் கூறுகிறது. இதுகுறித்து விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் ராஜேஷ் கெலாட் கூறுகையில், “இந்த உருவ பொம்மையை தயாரிக்கவும் நிர்மாணிக்கவும் 4 மாதங்கள் ஆனது. அதிகரித்து வரும் பாவங்களை இந்த உருவம் சித்தரிக்கிறது. இதனை 12ஆம் தேதி எரிக்க உள்ளோம்.
நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.வின் பிற தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். சாதகமான பதில் கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார்.
– ‘இந்து தமிழ் திசை’ – 10.10.2024